நவகிரகங்களின் குணங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நவகிரகங்களின் குணங்கள் பற்றிய பதிவுகள் :

உலகம் இயங்க காரணமாக இருப்பது ஒன்பது கிரகங்களாகும். ஒன்பது கிரகங்களும் தனக்கென குணங்களும் கொண்டுள்ளது. 

சூரியன் :

சூரியன் ஆத்ம காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார், அரசாங்க பதவி, தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது. உலகில் அசையும் பொருட்கள், அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.

சந்திரன் :

இவரே உடலுக்கு காரகன். சந்திரன் சோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். கடற்பயணம், ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே.

செவ்வாய் :

செவ்வாய் போர்குணம் கொண்ட ஒரு கிரகம். ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவர் செவ்வாய். ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் சகோதர காரகன் என அழைக்கப்படுகிறார். கண்டிப்பதும் இவரே, தண்டிப்பதும் இவரே.

புதன் :

சோதிடத்தில் வித்யா காரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, மாமன், அத்தை, மைத்துனர்கள் தொடர்பில் புதனை கொண்டே கணிக்கப்படுகிறது. பேச்சாற்றல், கணிதம், நண்பர், சாதுர்யம், கவிதை, சிற்பம், சித்திரம், நடிப்பு, நாடகம், எழுத்து கலை, சாஸ்திர ஞானம், நுண்கலைகள் ஆகியவற்றிக்கு புதன் காரகம் வகிக்கிறார்.

குரு :

குரு பகவான் புத்திரகாரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். தன காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். எல்லா கிரகத்தின் தோஷத்தையும் நீக்ககூடியவர் குரு. புத்திரர், அறிவு, மந்திர சாஸ்திரம். யானை, யாகங்கள், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, சொல்வாக்கு, பணம் ஆகியவற்றிக்கு குரு காரணம் வகிக்கிறார்.

சுக்கிரன் :

சுக்கிரன் களத்திர காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அதிபதி சுக்ரன். சுக போகத்திற்கு அதிபதி சுக்ரனே. ஆபரணம், இளமை, வியாபாரம், நடிப்பு, நடனம், சித்திரம், ராஜபோக வாழ்வு, வீடு கட்டுதல் ஆகியவற்றிக்கு காரணமாக சுக்கிரன் விளங்குகிறார்.

சனி :

ஆயுள்காரகன் என்று சோதிடத்தில் அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் கடுமையான துன்பத்திற்கு காரணம் இவரே. அதேபோல் அளவற்ற செல்வ வளத்தையும் அளிப்பவர். வலிமை, ஆயுள், அடிமை, எருமை, கஞ்சத்தனம், கள்ளதனம், மது, தானியம், வாதம், மரணம், மனது வெறுக்ககூடிய செய்கை, ஆகியவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

ராகு :

ராகுவுக்கு சொந்த வீடு கிடையாது. சேரும் கிரகத்திற்கு தக்கவாறும் செயல்படுவார். அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றைப் பெற ராகுவின் அருள் வேண்டும். விஷம், மரணம், பித்தம், பேய் பிசாசு, மது குடித்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம் போன்றவற்றிக்கு காரணம் வகிக்கிறார்.

கேது :

ஞான காரகன் என்ற புகழைப் பெறுபவர் கேது. மோட்ச காரகனும் இவரே. கடுமையான தடங்கல், ஞானம், மோட்சம், மாந்திரீகம், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகியவைக்கு காரணமாக கேது பகவான் இருக்கிறார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top