நம் அனைவராலும் வணங்கப்படும் கடவுள் சிவன். சிவனின் திருவுருவத்திற்கு பல்வேறான அர்த்தங்கள் உள்ளது.
திருமுடி :
திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் (யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம்.
திருமுகம் :
உலகில் உள்ள அனைத்தையும் இறைவனின் அனுக்ரமாகவே கண்டு அனுபவிப்பது அவரது திருமுகம்.
திருவடி :
யான் எனது என்னும் அகங்காரமாய் நிற்கும் பொய்யறிவு (அறியாமை என்ற இருள்) நீங்கத்திருவருள் ஞானம் பிரகாசித்து நிற்றலயே சிவனுடைய திருவடி.
திரிசூலம் :
ஆரணி, செனனி, ரோதயித்திரி என்னும் முச்சத்தி வடிவினதாகிய சூலப்படையானது முத்தொழிலையுடையவர், மும்மலங்களை (ஆணவம், கன்மம், மாயை) நீக்குபவரும் சிவனே.
வாள் :
பிறவி வேரின் கொடியை அறுப்பவர்தாமே என்பதை ஞான வடிவமாகிய (அறிவால் நீங்க வேண்டியவை) வாளை ஏந்தியுள்ளார்.
அக்னி :
ஆன்மாக்களின் பாசங்களை நீக்குபவர் தாம் என்பதை பொருட்டுச் சம்hர வடிவாகிய அக்னியைத் தாங்கியுள்ளார்.
ஸர்ப்பம் பாம்பு :
பாம்பினுடைய விரிவு, சுருக்கம் போல உலகின் தோற்றம் ஒடுக்கம் இருப்பதற்கு உலகிற்கு நிமித்த காரணர் தாம் என்பதை உணர்த்தும் வகையில் குண்டலினி சக்தி ரூபமாகிய பாம்பை ஏந்தியுள்ளார்.
பாசம் :
ஆன்மாக்களுக்கு பலத்தை ஊட்டுபவர் தாம் என்பதை உணர்த்த மாயா ரூபமாகிய பாசத்தை திருக்கரத்தில் ஏந்தியுள்ளார்.
மான் :
மானின் நான்கு கால்களும் நான்கு (ரிக், யசூர், சாமம், அதர்வணம்) வேதங்களாகையால் வேதப் பொருளாக உள்ளவர் தாம் என்பதை உணர்த்துவதற்காக மானை ஏந்தினார்.
புன்முறுவல் :
சஞ்சிதம் முதலான மூவகைத் (ஆகாமியம், சஞ்சிதம், பிரார்த்தம்) துயரத்தையும் போக்கி அருளுவதற்காக இளமையான புன்சிரிப்பைக் கொண்டுள்ளார்.
உபவீதம் (பூணூல்):
சிவஞானப் பொருளாக இருப்பவரும் அதைத் தருபவரும் தாமே என்பதை உணர்த்துகிறது.
சிகை (தலைக்குடுமி) :
ஞான வடிவமாக உள்ளவர் தாமே என்பதை ஞான அடையாளமாகிய சிகையைக் கொண்டுள்ளார்.
சிலம்பு மற்றும் மெட்டி :
பக்குவ ஆன்மாக்களைப் பேரின்பத்தின் அழுத்துதற்குச் சாதனமாக அருட்சிலம்பு மற்றும் மெட்டி விளங்குகிறது.
கங்கை :
உலகை அழிக்குமாறு வந்த கங்கையை அதன் வேகத்தைக் குறைத்து அடக்கி உலகை காத்து இன்பத்தைத் தந்ததால், ஆன்மாக்களை ஆனந்தக்கடலில் திளைக்கச் செய்ததற்கு அடையாளமாகக் கங்கையை தலைமுடியில் தரித்துள்ளார்.
காதில் குழை (தோடு) :
அசுரர்களை அழித்து (ஆணவத்தை) வளையமாக காதில் அணிந்துள்ள ஆபரணம் தோடு ஆகும்.