நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாழ்வில் அருளும் பொருளும் வாரி வழங்கும் ஆடி மாத திருவிழாக்கள் பற்றிய பதிவுகள் :
முன்னுரை
ஆடி என்பது அற்புதமான மாதம். உத்திராயணத்தில் முடிந்து தட்சணாயணத்தின் தொடக்க மாதம். ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயணம், அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகர்வதாகப் பொருள். பல கோயில்களில் ஆறு மாதம் உத்திராயண வாசலும் ஆறு மாதம் தட்சணாயன வாசலும் இருக்கும். அதாவது வடக்கு வாசல், தெற்கு வாசல் என்று இரண்டு வாசல் வைத்திருப்பார்கள். ஆடி ஒன்றாம் தேதி அன்று வடக்கு வாசலை மூடி விட்டு, தெற்கு வாசல் மூலமாக சுவாமி தரிசன மாகும். தேவர்களுக்கு இது இரவு நேரம் தொடக்கம். அதாவது மாலை சந்தி நேரம். எனவே மாலை நேர பூஜையை தேவர்களும் மனிதர்களும் இணைந்து வழிபடுகின்ற நேரமாக ஆடி மாதத்தைக் கருதலாம்.
1.சக்தி மாதம்
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று சொல்வார்கள். மந்திரங்கள் உச்சரிப்பதற்கும், ஜபம் செய்வதற்கும், ஆடி மாதம் ஏற்றது என்று ஜோதிட சாஸ் திரத்தில் சொல்லப்படுகிறது. ஆடி என்பதற்கு கண்ணாடி என்று பொருள். ஆடி என்பதற்கு ஆடுதல் என்று ஒரு பொருள். ஆடி என்பதற்கு அதிர்தல் என்று பொருள். உதாரணமாக வண்டி அந்த பாலத்தின் மீது சென்றபோது ஆடியது என்கிறோம் அல்லவா. ஆடி என்பதற்கு அசைதல் என்று ஒரு பொருள். இத்தனை பொருள்களும் இந்த ஆடி மாதத்திற்கு ஏதோ ஒரு வகையில் பொருந்தும். உதாரணமாக ஆடி என்பதை ஆடுதல் என்று எடுத்துக் கொண்டால் ஆன்மீக உணர்வோடு ஆட வேண்டும்.இறைவனை தொழுது கொண்டாடி ஆட வேண்டும்.அப்படி நினைவூட்டத் தான் ஆடி அம்மன் கோயில்களில் கரகம் எடுத்து ஆடுகிறார்கள். பாடுகிறார்கள்.ஆட வைக்கும் திருவிழா மாதம் ஆடி.
2.ஆடி மாத திருவிழாக்கள் ஏன்?
நம்முடைய வாழ்க்கை இன்ப துன்பங்கள் என்ற அசைவுகளிலே இருக்கின்றது.. ஆடுதல் என்றால் நிலையற்ற அசைவுகள். மேலே இன்பம் (மேடு) என்று வந்தால் அடுத்த நிமிஷம் கீழே (பள்ளம்) என்று வந்து விடுகிறது . இந்த நிலையற்ற உலக வாழ்க்கையிலே, நிலையுள்ள ஒரு பொருளைத் தேடிக் கொள்ள வேண்டும். அதற்கு நம்முடைய வாழ்நாளை பயன்படுத்த வேண்டும். ஆடுகின்ற இந்த உயிரோட்டமானது நின்று விடுவதற்கு முன், இந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும். அதாவது நிலையற்ற வாழ்க்கையில் இருந்து நிலைக்கும் ஒரு வாழ்க்கையை நாம் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய வாழ்வின் நோக்கம் .அதைத்தான் ஆன்மிகம் சொல்லுகின்றது .அதற்காகத்தான் இந்த ஆடி மாத திருவிழாக்கள்.
3.ஆடியும் கண்ணாடியும்
அடுத்து ஆடி என்பது கண்ணாடி என்று ஒரு பொருளில் வரும்.குவி ஆடி குழி ஆடி. கூர்மைப்படுத்துவது. சூரிய ஒளி காகிதத்தை எரிக்காது. அதே சூரிய ஒளியை ஒரு ஆடி (லென்ஸ்)மூலம் குவித்தால், ஒளிக் கதிரின் சக்தி அதிகரித்து காகிதத்தை எரிக்கும்.இறைவனின் சக்தி ஆடி மாதத்தில் குவிக்கப்படுவதால் நம் பாவங்கள் எரிக்கும்.கண்ணாடி என்பது பிம்பத்தைக் காட்டுவது. “காரை பூணும் ,கண்ணாடி காணும்” என்று ஒரு பாசுரம் உண்டு. ஆண்டாள் அப்படி தன் உருவத்தை பார்த்த கிணறு கண்ணாடிக் கிணறு. வில்லிபுத்தூரில் இன்றும் நாம் காணலாம்.ஆடிப்பூர நாயகியான ஆண் டாள் நாச்சியாரை ஆடியில் தரிசிக்க பாவங்கள் தீயினில் தூசாகும்.
4.கடக மாதம்
ஆடி மாதம் என்பது கடக மாதம். சந்திரனுக்குரிய மாதம். சந்திரன் ஆடி போல் பிம்பத்தைக் காட்டுபவன். உதாரணமாக சூரியனுடைய கதிர்களை (ஒளியை) எடுத்துப் பிரதிபலிப்பவன். அவன் ஆட்சி செய்யும் இந்த மாதத்தை ஆடி மாதம் என்று சொல்லுகின்றார்கள். கண்ணாடியில் பார்த்து நாம் நம்முடைய புற அழகை சீர் திருத்திக் கொள்வது போல, பக்தி என்னும் கண்ணாடியில் நம்முடைய அக அழகைச் சீர்திருத்திக் கொள்வதற்கு ஏற்ற மாதம் இந்த ஆடி மாதம். சந்திரன் தாயைக் குறிக்கும் கிரகம். தாயான சந்திரன் ஆட்சி செய்யும் மாதத்தில் தாய் தெய்வங்களான அத்தனை அம்மன் கோவில்களிலும் விசேஷமான வழிபாடுகள், திருவிழாக்கள் நடக்கின்றன.
5.ஆடியும் உயிர் நாடியும்
ஆடி பிறந்து விட்டாலே அம்மன் கோயில்களில் பத்து நாள் உற்சவத்தில் இருந்து (பிரமோற்சவம்), ஒரு நாள் உற்சவம் வரை, விதம் விதமாக கோயில் உற்சவங்கள் நடைபெறுவதை நாம் காணலாம்.ஆடி மாதம் என்பது காற்றுக்குரிய மாதம். ஆடியில் காற்று அடித்தால் ஐப்பசியில் மழை வரும். விவசாயத்துக்கு உரிய மாதம். உயிர்களின் உயிர் நாடி நீர். “நீர் இன்றி அமையாது உலகு”. கடக ராசி என்பது நான்காவது ராசி. அதாவது நீர் ராசி. ஆடியில் (நீர் ராசி மாதத்தில்) எல்லா விதமான நீர் நிலைகளிலும் புதிய நீர் வரத்து இருக்கும். நீரைக் கண்டால் விவசாயி களுக்கு உற்சாகம். ‘‘ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது போல ஆடி மாதம் உயிர் நாடியான மாதம் என்று சொல்வார்கள்.
6.ஆடி அமாவாசை மிக முக்கியம்
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் அமாவாசையன்று முன்னோர்க்கு நீர் கடன் கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும். ஆடி அமாவாசை தினம் பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்க பூலோகத்துக்கு கிளம்பும் நாளாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக, அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் ஆடி அமாவாசை சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இரண்டு அமாவாசைகள் வருவதால்(ஆடி 1ஆம் தேதி அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16ஆம் தேதி) முதல் அமாவாசையை சாதாரணமாக செய்துவிட்டு இரண் டாவது அமாவாசையை ஆடி ஆமாவாசையாக சிறப்பாகச் செய்ய வேண்டும். தர்ப்பணம் கொடுக்க மதிய வேளை(பிதுர் காலம்) மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்து, மறைந்த முன் னோர்களுக்கு அவரவர் வழக்கப்படி படையல் இட்டு வழிபடலாம். அன்று கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்கவேண்டும்.
7.ஆடிக் கூழ்
ஆடிக் கூழ் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. இந்த கூழ் கேழ்வரகு, கம்பு போன்றவற்றில்தான் செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் பிரதான உணவாகவே கூழ் இருந்தது. இப்பொழுது நமது பாரம்பரிய உணவு பற்றிய விழிப்புணர்வுக்கு ஆன்மீக மாதமான ஆடி மாரியம்மன் திருவிழா வகை செய்கிறது. காற்றில் பரவும் நோய்கள் ஆடி மாதத்தில் தொற்றுக் கிருமிகளால் அதிக அளவில் பரவும். ஆடி மாதத்தில் தான் அம்மை அதிகம் பரவியது .அது வேகமாக பரவுவதற்கு ஆடிக் காற்றும் துணை செய்தது நோயிலிருந்து குணமடையவும், வலிமையும் ஆரோக்கியமும் பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும், கூழ் காய்ச்சி விநியோகிக் கப்பட்டது. அது பொதுவாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மன் கோயில் ஆலயத்தில் விழா கொண்டாடி ஆன்மிகத்தோடு பிரசாதமாக அளிக்கப்பட்டது.
8.ஆடி வெள்ளி
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும், தை மாத வெள்ளிக்கும் என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வரும்.வாரக் கிழமைகளில் சுக்கிர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். சகல செல்வங்களும் கிடைக்க வெள்ளிக்கிழமை விரதம் உதவும்.திருமகள் அருளைப் பெற்றுத் தரும்.
ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். கிராமங்களில் ஆடி வெள்ளியன்று வேப்ப இலையைக் கொண்டு வந்து வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பார்கள். அத்துடன் ஒரு சிறிய பித்தளை சொம்பு நிறைய தண்ணீரை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், குங்குமம், இரண்டும் போட்டு, இந்த தீர்த்தத்தில் குலதெய்வமும் அம்மனும் வந்து அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்வார்கள்.
9. ஆடிப்பூர உற்சவங்கள்
ஆடி சந்திரனுக்குரிய மாதம். பூரம் சுக்கிரனுக்குரிய நட்ஷத்திரம். மஹா லட்சுமிக்குரிய நட்சத்திரம். மஹாலட்சுமியும் சந்திரனும் பாற்கடலில் தோன்றியவர்கள் என்பதால் சகோதரிகள். எல்லாப் பெருமாள் கோயில்களிலும் ஆடிப்பூரம் களை கட்டும்.திருச்சி தொட்டியம் அருகில் அரசலூர், ஸ்ரீநவநீத கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் மூர்த்திகள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் மிகுந்த கலை நுணுக்கம் கொண்டவை.
இங்கே ஆடிப்பூரம்,100 தடா அக்கார அடிசில் செய்து சிறப்பாகக் கொண்டாடப்படும். ஸ்ரீரங்கம் ஆடிப் பூரத்தில் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திரு மஞ்சனம் கண்டருளுவார்.திண்டுக்கல்லில் இருந்து 20 கிமீ தொலை வில் உள்ளது வடமதுரை. சவுந்தரராஜ பெருமாள் கோயில். சவுந்தரவல்லி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் இங்கு காட்சி தருகிறார். இங்கு ஆடியில் திருக்கல்யாணம் சிறப்பு. மாம்பலம் கோதண்ட ராமர் சன்னதியில் ஸ்ரீரங்கநாதர் ஆடி கருட சேவையும் கஜேந்திர மோட்சம் உற்சவமும் (ஆடி16) நடைபெறும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு ஜேஷ் டாபிஷேகம் ஆடியில் (ஆடி 7) நடைபெறும்.
10. ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு ஆடி அமாவாசை
மிக்கானை மறைஆய் விரிந்த விளக்கை,என்னுள்-
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசைஇருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே.
என்று அழகு தமிழில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலமான சோழசிம்மபுரம் என்கிற சோளிங்கர் திவ்ய தேசத்தில், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மருக்கு ஆடி அமாவாசை உற்சவம் விசேஷம். திருவள்ளூர் வீர ராகவப் பெருமாள் கோயில் தீர்த்தக் குளத்தில் (ஹ்ருத்த பாப நாசினி) ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கில் கூடுவார்கள். (இரண்டாவது அமாவாசை (ஆடி 31).
11.அழகர் கோயிலும் ஆடிப்பூரமும்
மதுரையை அடுத்த அழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு. ஆடி மாதம் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் விழா தினசரி திருமஞ்சனம், காலை மாலை வாகன உலாக்கள் என்று அமர்க்களமாக நடக்கும். ஆடி 11ஆம் தேதி கஜேந்திர மோட்சம் இரவு கருட வாகனத்தில் பெருமாள் காட்சிதருவார். ஆடி 15ம் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும் இரவு அழகர் குதிரை வாகனத்திலும் வலம் வருவார்.அடுத்த நாள் அதாவது. ஆடி 16ம் தேதி மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தேர் உற்சவம் கோலா கலமாக நடக்கும். ஆடி 17ம் தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.
12.ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டாட்டங்கள்
ஆடி என்றாலே ஆண்டாள் நினைவு வராமல் போகாது. 12 ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் அவதாரத்தலமாக அமைந்த சிறப்பு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மட்டுமே உண்டு. அதுவும் இரண்டு ஆழ்வார்களும் தந்தையும் மகளுமாக இருப்பது அதைவிட சிறப்பு. மூன்றாவது சிறப்பு மகளாக அவதரித்தவர் சாதாரண மானிடப் பெண் அல்ல; பூமாதேவியே என்பது சிறப்பு. அந்தப்பெண்ணை பெருமாளே திருமணம் செய்து கொண்டார் என்பது அதைவிடச் சிறப்பு. ஒவ்வொரு வருடமும் ஆண்டாளின் அவதார உற்சவம் ஸ்ரீவில்லி புத்தூரில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும்.
ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா இந்த ஆண்டு 14.7.23 முதல் 25.7.23 வரை நடைபெறுகிறது. 5ஆம் நாள் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை திருவாடிப் பூர பந்தலிலே பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்வார். ஸ்ரீபெரிய பெருமாள், சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்காலப்பன், ஸ்ரீஆண்டாள் ரங்க மன்னர் அனைவரும் இணைந்து இரவு கருட சேவையாக வீதி வலம் வருவார்கள். இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும் பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் வலம் வரும் காட்சி அதிஅற்புதமாக இருக்கும்.
13. ஆண்டாள் முத்துக்குறி
20 ஆம் தேதி ஆண்டாள் மடியில் ஸ்ரீரங்கமன்னார் தலை சாய்ந்து சயன கோலத்தில் இருக்கும் ஆண்டாள் சயன மடிக் கோலம் காணக் காண அற்புதமான அதிசயம். இது கிருஷ்ணன் கோயிலில் நடைபெறும். 22ஆம் தேதி ஆண்டாளுக்கு திருத்தேர் உற்சவம் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் குழுமி தேர் வடம் இழுப்பார்கள். திருமாலிருஞ் சோலை கள்ளழகர், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் மாலை பரிவட்டம் ஆண்டாளுக்கு அனுப்பப்படும். 23ம் தேதி பத்தாம் நாள் திருவிழா, ஸ்ரீஆண்டாள் முத்துக்குறி கேட்கும் நிகழ்ச்சி. அரையர் சேவை அதி அற்புதமாக இருக்கும்.
14.மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உற்சவங்கள் நடைபெறுவதற்காகவே வீதிகள் ஆடி வீதி, ஆவணி வீதி, மாசி வீதி என்று மாதங்களின் பெயரில் உண்டு. ஒவ்வொரு உற்சவத்திற்கும் ஒவ்வொரு பின்னணி, ஒவ்வொரு கதைகள் ஒவ்வொரு சம்பிரதாயங்கள் உண்டு. ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விளை நிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து மீனாட்சி அம்மனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக் கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.
மீனாட்சி அம்மன், பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை இரு வேளைகளில் வீதியில் உலா வரும் போது சிறப்பு நாதஸ்வரம் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசையுடன் அம்மனை சேர்த்தி சேர்ப்பர். தினசரியும் அம்மன் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம், கிளி வாகனத்தில் எழுந்தருள்வார். 7வது நாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். 8ஆம் நாள் குதிரை, 9ஆம் நாள் இந்திர விமானம், 10ஆம் நாள் கனகதண்டியல் வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.
15.கருட பஞ்சமி
‘‘பறவை ஏறும் பரம புருடா” என்று கருடனைச் சொல்வார்கள்.பெருமாள் உற்சவங்களில் கருட சேவை விசேஷமானது. கருடனை தரிசித்தால் பாம்பின் நஞ்சு அகல்வதைப் போல பாவங்கள் தீரும்.மங்கலங்கள் சேரும். விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி, தெய்வப்புள், கொற்றப் புள், கருடாழ்வார், மங்களாலயன், சுபர்ணன், புஷ்பப்பிரியன், வினதைச் சிறுவன், வேதஸ்வரூபன், வைனதேயன்’… கருட பகவானுக்குத்தான் எத்தனை எத்தனை திருநாமங்கள்? கருடாழ்வானின் பெருமை கூறும் கருட பஞ்சமி ஆடியில் தான் வருகிறது. (ஆடிஅமாவாசை கடைசியில் ஆடி 31ல்வருவதால் , இந்த ஆண்டு ஆவணி 4ம் தேதி வருகிறது). கருட பஞ்சமி நாளில் கருட பகவானை வணங்குவதால், பகைமை உணர்வு நீங்கும். கர்ம வினைகளும், தோஷங்களும் விலகும்; செல்வம் செழிக்கும். நினைவாற்றல், வாக்கு வன்மை கூடும். மனவியாதி, வாய்வு, இதய நோய், விஷ நோய்கள் தீரும். பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.
16.நாகபஞ்சமி, நாகசதுர்த்தி
ஆடி மாதத்தில் வருகின்ற வளர்பிறை நான்காவது நாளாகிய சதுர்த்தி நாளுக்கு ஒரு சிறப்பு உண்டு. இந்த நாளுக்கு, நாக சதுர்த்தி நாள் என்று பெயர். ஆதி பராசக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். தேவி கருமாரியை எடுத்துக் கொள்ளுங்கள். நாகத்தின் மீதுதான், உட்கார்ந்து இருப்பாள், அன்னை. நாக தேவதை, நாகாத்தம்மன் என்று எத்தனையோ கோயில்கள் நம்முடைய ஊரில் இருக்கின்றன. வட நாட்டிலே நாக பூஜை இன்னும் விசேஷம். ஜாதகத்தில் , சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லக்கூடிய (ராகு,கேது) கிரகங்கள் திருமணத் தடைகளைக் கொடுக்கும். இந்தத்தடைகள் அகல, நாக சதுர்த்தியன்று அரச மரத்தடியில் இருக்கும் நாக பிரதிஷ்டையை மஞ்சள், குங்குமம் சாத்தி, வணங்க வேண்டும். மஞ்சள் சரடு, நாக தேவதை பிம்பம் மீது வைத்து பூஜை செய்து , பின் அதை கழுத்திலே அணிந்து கொள்வார்கள். கையிலே கட்டிக் கொள் வார்கள். நாக தேவதையை வணங்குவதால் நலம் பல வாழ்விலே நடக்கும். சௌபாக்கியங்கள் பெருகும்.
17.ஆடி 18
“நீரின்றி அமையாது உலகு” என்பது வள்ளுவன் வாக்கு, அதன்படி காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும்விதமாக ஆடிமாதம் 18-ம்தேதி ஆடிப்பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் புனித நீராடி தாலிப்பெருக்கு எனப்படும் தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து பெற்றோர்களிடத்தில் ஆசிபெற்று தாலி மாற்றிக் கொள்வர். திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவண் கிடைக்கவேண்டி கடவுளை வணங்குவார்கள்.. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆடி 18 அன்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந் தருள்வார்.
அங்கு தீர்த்தவாரியுடன் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும் . ஸ்ரீரங்கம் ஆலயத்தில் இருந்து புடவை, மாங்கல்யம், வெற்றிலை-பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானை மேல் வைத்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் எடுத்து வந்து பெருமாள் முன் வைத்து அந்த சீர்வரிசைகளை காவிரி அன்னைக்கு சமர்ப்பிப்பார்கள். காவிரியை ரங்கநாதர் தன் தங்கையாக கருதி சீர்வரிசை அளிக்கும் இந்தக் காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
18.ஆடி அறுதி
ஆடி அறுதி என்பது ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். மற்ற மாதங்களைப் போல அல்லாமல், ஆடி மாதத்திற்கு 32 நாட்கள் உள்ளன. ஆடி அறுதி எந்த கிழமையில் வருகின்றது என்ற அடிப்படையில் கூடுதல் சிறப்பைப் பெறும். இந்த ஆண்டு, ஆடி அறுதி 2023 ஆகஸ்ட் 17, வியாழக்கிழமை வருகிறது.அன்று மூதாதையர்களையும் வணங்க வேண்டிய நாள். சிலர் அவர்கள் பயன்படுத்திய துணிகளை பாதுகாத்து படையல் போடுவார்கள்.தென் மாவட்டங்களில் கும்மியானம் செய்து (பல தானியங்கள் மற்றும் கருப்பட்டி சேர்த்து ) படையல் செய்வார்கள். அன்று விவசாயத்தில் நாற்று நாடுவதும் உண்டு. ஆடி கடைசி நாள் என்பதால் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும்.
19.ஆடி கிருத்திகை
கிருத்திகை முருகனுக்குரிய நாள். ஆடி மாதம் வரும் கிருத்திகை மிகவும் சிறப் பான நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஆடிக் கிருத்திகை தினத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடத்தப் பட்டாலும் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான “திருத்தணி” கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விழா ஆடிக் கிருத்திகை . முருக பக்தர் கள் காவடி சுமந்து, திருத்தணி மலை மீது ஏறி தங்களின் நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். இப்படியே மற்ற தலங்களிலும் நடைபெறும்.
20.வேப்பிலைக்கு மதிப்பு
ஆடி வந்தாலே அம்மன் கோயில்களில் உற்சவங்கள் ஆரம்பமாகிவிடும். ஆடி கூழுக்கும், வேப்பிலைக்கும் மதிப்பு கூடிவிடும்.வேப்பிலை இல்லாத அம்மன் விழாக்கள் ஏது? மா இலையைப் போலவே, வேப்பிலைக்கும் அற்புத சக்தி உண்டு. அதை நுட்பமாக உணர்ந்து ஆன்மீகத்தோடு இணைத்தனர்.பெருமாள் கோயில் என்றால் துளசி, சிவன் கோயில் என்றால் வில்வம்,அம்மன் கோயில் என்றால் வேப்பிலை.”வேப்பிலைக்காரி” என்றே அம்மனை அழைப்பார்கள். கொடுமையான தொற்று நோய்களுக்கு வேப்பிலை அருமருந்து. சிறந்த கிருமி நாசினி. அதன் கசப்புச் சுவை பல வியாதிகளை போக்குகிறது.வேப்பிலையும் மஞ்சளும் கலந்த நீரில் நீராட, சரும நோய்கள் முதல் கொண்டு அம்மை போன்ற தீவிர நோய்களும் தீரும். ஆன்மீகத்தோடு இணைத்ததால் மன நோய்க்கும் மருந்தாகும்.
21.ஆடித் தபசு
ஆடி மாதம் வந்தால் அம்மன் கோயில் விழாக்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளும் நினைவுக்கு வருவதைப்போலவே சங்கரன்கோயில் நினைவுக்கு வந்துவிடும். ஆடிப் பௌர்ணமி விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்..இந்த ஆண்டு ஆடித் தபசு விழா 21.7.23 அன்று கொடியேற்றத்துடன் துவங்கும். 31.7.23 திங்கள் மாலை 7 மணிக்கு களை கட்டிவிடும் அம்மன் தபசு காட்சி இரவு 12.05 க்கு நடைபெறும்.
22.காமாட்சி அம்மன் கோயிலில் ஆடிப்பூரம்
ஆடிப்பூரம் என்றால் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு. காமாட்சி அம்மன் என்ற திருநாமத்தோடு எங்கு அம்மன் கோயில்கள் இருந்தாலும், அங்கே ஆடிப்பூரம் கொண்டாடப்படும். ஆடிப்பூரத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலசாபிஷேகம் விமரிசையாக நடக்கும் . பக்தர்கள் கொண்டு வந்த வளையல்கள் அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் காமாட்சி அம்மன் அன்னை லலிதா மஹா திரிபுரசுந்தரியின் முழுமை ரூபமாக,‘‘பரப்ரஹ்ம்ம ஸ்வரூபினியாக” காட்சி தருகிறாள். இங்கு ஆடிப்பூரம் மிக சிறப்பாக நடைபெறும். பல இடங்களில் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் மேளதாளத்தோடு சீர் தட்டு ஏந்திச் சென்று சமர்ப்பிக்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
23.தீ மிதித்தல்
ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் பெரும்பாலும் பூக்குழி இறங்குதல் அல்லது தீமிதித்தல் என்ற விழாவோடு நிறைவு பெறும். திரௌபதி அம்மன் கோயில்களிலும் ,குறிப்பாக வட மாவட்டங்களில் மஹாபாதம் பாடி, தீ மிதித்தல் விழா நடைபெறும். ஆடி மாதம் என்பது இந்தியாவில் வெயில் மற்றும் மழைக்காலத்திற்கு இடையிலான காலம். இக்காலத்தில் பலவிதமான நோய் தொற்றுக்கள் எளிதில் உண்டாகும். இந்த மாதத்தில் தீ மிதிப்பதால் உடலின் பல நோய்கள் நீங்கும் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். எனவே தான் பழங்காலத்தில் மஞ்சள்காமாலை முதலிய நோய்களுக்கு காலில் சூடு வைத்து குணப்படுத்தப்பட்டது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு வணக்கத்தின் பரிணாமம் இது என்கிறார்கள். தீ மிதிப்பவர்கள் குறிப்பாக ஆடி மாதத்தில் தான் மிதிப்பர். உலகில் நடைபெறும் எந்த நிகழ்வும் அறிவியல் தொடர்பானது தான். ‘தீ மிதித்தல்’ என்பது உடலை வருத்தி, அதனைக் கடினங்களுக்குத் தயாராக்கும் ஒரு பயிற்சி.ஆலய விழாக்களோடு இதனை இணைத்தல், இப்பயிற்சியில் ஈடுபாட்டை ஏற்படுத்தும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கை..
24.பால்குடம்
ஆடிப்பூர நாயகியான அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வது சிறப்பானது.சில கோயில்களில் பால்குட விழாவே பெரிய ஊர்வலமாக இருக்கும்.உதாரணமாக மணப்பாறையில் உள்ள பிரசித்திபெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழாவைச் சொல்லலாம். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வருவார்கள்.அதிகாலை தொடங்கி மதியம் வரை நடைபெறும்.
பல ஊர்களிலும் இதை போன்று நடைபெறும்.பால் வெண்மை நிறம் உடையது. நம்முடன் பழகுபவர்கள் வெள்ளை மனம் படைத்தவர்களாக அமைந்து, நமக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்பதற்கான பரிகாரம் இது.திருவிழாக்களின்போது முறையாக விரதம் இருந்து பால்குடம் எடுத்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து குளிர்ச்சிப்படுத்தினால் மனம் குளிர்ந்து வரம் தருவாள் என்பது நம்பிக்கை.
25.வளையல் சடங்கு
பல கோயில்களில் ஆடிப்பூர நாயகிகளுக்கு ஆடியில் வளைகாப்பு விழா நடத்தப்படும். சீமந்தம், வளைகாப்பு ஆகிய சடங்குகள் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப்பெண்ணையும் அவள் கருவையும் காக்கும் சடங்குகள். வளை என்னும் அணிகலன்கள் இட்டுக் காக்கும் காப்பே வளைகாப்பு. சாதாரண மனிதர்கள் செய்யும் இந்தச் சடங்குகளை ஜகன்மாதாவான அம்பிகைக்குச் செய்து மகிழும் விழா இது. சில கோயில்களில் புட்டு வைத்து படைப்பார்கள். இந்தப் பூலோகமே அவளின் படைப்பு.
நாம் அனைவரும் அவளின் பிள்ளைகள். அதனால்தான் அம்பிகைக்கு உகந்த ஆடிமாதம், பூர நட்சத்திர நாளில், அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் இந்த உலகம் செழித்து வளம் பெருகும் என்பது நம்பிக்கை.உதாரணத்திற்கு சென்னை கோடம்பாக்கம், ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ளது தேவி கருமாரியம்மன் திருக்கோயில். இங்கு ஆடிப்பூர உற்சவத்தில் அம்மனுக்கு சீமந்த மும் வளைகாப்பும் செய்யப்படுகின்றன. அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல்கள் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
26.ஆடி தள்ளுபடி பழையன கழிதல் பாவங்கள் தள்ளுபடி ‘‘இன்று புதிதாய் பிறந்தோம்” என்பான் பாரதி. நாம் ஒவ்வொரு நாளும் புதிய மனிதர்களாக மாற வேண்டும். கடைகளில் பழைய சரக்குகளை ஆடி மாதம் தள்ளுபடி செய்து விற்பனை, புதிய சரக்குகளை கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதைப்போல தட்சிணாயணத்தின் தொடக்கமான இந்த ஆடி மாதத்தில், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீக்கிக் கொண்டு, நம்மை நாமே ஆன்மிக ரீதியாக சுத்தப்படுத்திக் கொண்டு, புதிய மனிதர்களாக இருக்க வேண்டும். அதற்கு அம்மனின் அருள் வேண்டும். ஆடித்திருவிழாவில் கலந்து கொள்வதின் நோக்கமே, புதிய மனிதர்களாக மாறுவதுதான். புதிய உற்சாகம் பெறுவதுதான். புதிய வெற்றிகள் பெறுவதுதான்.
27.ஔவையார் நோன்பு
ஆடி மாதம் பெண்தெய்வங்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கே விசேஷமான மாதம் ஆகும். அவர்களுக்கு பிரத்யேகமான நோன்புகள் உண்டு.அதில் ஒன்றுதான் ஔவையார் விரதம். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதே போன்று ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.கொழுக்கட்டை நைவேத்தியம் செய் யப்படுகிறது. இந்த கொழுக்கட்டையை நோன்பு இருக்கும் பெண்களே சாப்பிட வேண்டும். ‘மறந்தா மாசி, தட்டினா தை, அசந்தா ஆடி’ என்று குறிப்பிடுவார்கள். தை மாதம் கடைப்பிடிக்கவேண்டிய இந்த விரதத்தை மறந்துவிட்டால் மாசி மாதத்திலும், மாசியிலும் மறந்து அசந்துவிட்டால் ஆடியிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
28. லட்சுமி ஹயக்ரீவர்
ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. அன்றுதான் ஹயக்ரீவர் ஜெயந்தி. கலைமகளுக்கு குருவான, குதிரை முகம் கொண்ட இந்தப் பெருமாளுக்கு சிறப்பான கோயில் கடலூருக்கு பக்கத்தில் திருஹீந்தி ரபுரத்தில் (திருவந்திபுரம்) உண்டு. ஞானானந்தமயமான பெருமாள். எல்லா வித்தைகளுக்கும் அதிபதி.நிர்மலமாக ஸ்படிக மாலை வைத்திருப்பார். சில தலங்களில் அவர் லட்சுமி ஹயக்ரீவராகவும் காட்சி தருகிறார். காரணம் கல்வியும் செல்வமும் ஆகிய இரண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திருமகளையும் தன்னோடு இணைத்துக்கொண்டு காட்சி தருகின்றார். ஆடி பௌர்ணமி அன்று ஏலக்காய் மாலை சாற்றி ஹயக்ரீவரை வணங்குவது விசேஷமானது. அதைப்போலவே பசும்பாலை காய்ச்சி ஏலக்காய் குங்கு மப்பூவைச் சேர்த்து நிவேதனம் செய்யலாம்.
29. சிவன் சக்திக்கு பிரதானம் கொடுத்த மாதம்
கோயில்களில் மட்டுமின்றி வீடுகள்தோறும் விரதம் இருந்து வேப்பிலை தோரணம் கட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி கூழ் ஊற்றுவார்கள். ஆடி மாதம் முழுவதும் அனைவரது வீட்டிலும் பக்தி மணம் கமழும். குறிப்பாக பெண்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருந்து தங்கள் வீட்டின் அருகில், தங்கள் ஊரின் அருகில் உள்ள அம்மன் தலங்களுக்கு சென்று வருவார்கள்.பூமாதேவி பூமியில் அவதரித்த மாதம் ஆடி மாதம். பார்வதியின் தவத்தை மெச்சி பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்.
30.நிறைவுரை
நல்ல மழை வேண்டி, உடல் நலம் வேண்டி நம் முன்னோர்கள் அம்மனுக்கு வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கு பிடித்தமானவை வேம்பு, எலுமிச்சை, கூழ். இவை உடல் நலத்திற்கும், வியாதியை தடுப்பதற்கும் உதவுகின்றன. அம்மன் விழாக்களுக்கு சில கோயில்களை மட்டும் குறிப்பிட முடியாது. அநேகமாக தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் ஆடி விழா களைகட்டும்.தீமிதி,அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல்,பூக்குழி இறங்குதல், கூழ்வார்த்தல், முளை கொட்டு,முளைப்பாரி ஏந்துதல்,பால்குடம் ,பூச்சொரிதல், ஊஞ்சல் உற்சவம், வளைகாப்பு உற்சவம் என களை கட்டும். பல ஊர்களில் மஹாபாரதம், காத்தவராயன் கதை என அமர்க்களமாக இருக்கும். அடுத்தடுத்த மாதங்களில் வரும் விழாக்களுக்கு இது முன் எடுப்பு விழாவாக இருக்கும். அடுத்த ஒரு வருடத்திற்கான உளவியல் ரீதியான உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் ஆடிப்பூர நாயகிகள் தருவார்கள் என்பது நம்பிக்கை மட்டும் அல்ல; நடைமுறை உண்மையும் ஆகும்.
நன்றி குங்குமம் ஆன்மிகம்.