ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய பதிவுகள் :

தினமும் ஒன்றரை மணி நேரம் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த நேரமாக ஒதுக்கப்படுகிறது. ராகுவிற்கு உரிய இந்த நேரத்தில் சுப காரியங்கள், சுப காரிய பேச்சுக்கள், புதிய தொழில் துவங்குவது, புது வீடு புகுவது, புதிய பொருட்கள் வாங்குவது, புதிய வேலையை துவங்குவது ஆகிவற்றை தவிர்த்து விடுவார்கள். 

ராகு காலத்தில் செய்யப்படும் அல்லது துவங்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடையாகவே முடியும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கையாகும்.

ஆன்மிக ரீதியாக சுப காரியங்கள் துவங்குவது ராகு காலத்தில் துவங்கப்படுவது தவிர்க்கப்பட்டாலும், இது வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நேரமாக சொல்லப்படுகிறது. 

ஒரு மனிதனுக்கு வரும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதை போக்கி, நன்மைகளை வரமாக பெறுவதற்கு ஏற்ற காலம் என்றால் அது ராகு காலம் தான். இந்த ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ராகு கால பூஜை :

நவகிரகங்களில் எந்த கிரகத்தால் பாதிப்பு ஏற்படுமோ அந்த கிரகத்திற்கு விளக்கேற்றி, அந்த கிரகத்திற்குரிய நாளில் விரதமிருந்து வழிபடுவது தான் வழக்கம். சனி பகவானால் பிரச்சனை என்றால் சனிக்கிழமையிலும், குரு பகவானால் பிரச்சனை என்றால் வியாழக்கிழமையிலும் பரிகாரம் செய்வார்கள். ஆனால் எந்த கிரகத்தால், என்ன பிரச்சனை என்றாலும் ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் தீரும் என்பது ஐதீகம்.

ராகு காலத்தில் துர்க்கைக்கு பூஜை :

ராகு காலம், எமகண்டம் என்றாலே ஆகாத நேரம். அந்த நேரத்தில் நல்ல காரியம் எதையும் துவங்கக் கூடாது என ஒதுக்கி வைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் ராகு காலம் போன்று வழிபாட்டிற்குரிய சக்தி வாய்ந்த நேரம் வேறு எதுவும் கிடையாது. 

ராகுவிற்கு உரிய அதிதேவதை துர்க்கை அம்மன் ஆவார். பொதுவாக துர்க்கை, காளி போன்ற உக்கிர தெய்வங்கள் கேட்ட வரங்களை உடனடியாக தரக் கூடியவை ஆகும். அதிலும் ராகு காலத்தில் விளக்கேற்றி வைத்து எந்த கோரிக்கையை வேண்டினாலும், என்ன பிரச்சனையை சொல்லி முறையிட்டாலும் அது உடனடியாக தீரும்.

செவ்வாய் கிழமையில் வழிபட்டால் என்ன பலன்?

தினமும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரத்தை ஒதுக்கி வைக்கிறோம். மற்ற நாட்களை விட செவ்வாய் கிழமையில் வரும் ராகு காலத்தில் விளக்கேற்றி துர்க்கையை வழிபட்டால் திருமணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள், வறுமை தொடர்பான பிரச்சனைகள், ராகு தோஷம் மற்றும் ராகு திசையால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஆகியவை நீங்கும்.

வெள்ளிக்கிழமை ராகு காலம் :

வெள்ளிக்கிழமையில் வரக் கூடிய ராகு கால நேரத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் குடும்பம் பலப்படும். கணவன் அல்லது மனைவி ஆயுள் அதிகரிக்கும். இந்த நாளில் கணவருக்காக மனைவியும், மனைவிக்காக கணவரும் வேண்டிக் கொள்ளலாம். 

வேலை கிடப்பது, பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பது போன்ற தனிப்பட்ட வேண்டுதல்கள் ஏதாவது இருந்தால் வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் விளக்கேற்றி, வழிபடலாம். 

மகன்,மகள், பேரன்-பேத்தி உள்ளிட்ட வாரிசுகளின் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் வெள்ளிக்கிழமையில் வழிபடலாம். பொன், பொருள் சேர வேண்டும் என்றாலும், சேமிப்பு உயர வேண்டும் என்றாலும் இந்த நாளில் வழிபாடு செய்யலாம்.

இந்த ராகு காலமும் சிறப்பு தான் :

ஞாயிற்றுக்கிழமையில் வரக் கூடிய ராகு காலத்தில் விளக்கேற்றி, துர்க்கை அம்மனை வழிபட்டால் நோய் மற்றும் நோயினால் ஏறு்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள், வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்கள் நிறைவேறுவதற்கு, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் சேருவதற்கு ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் வழிபடலாம். எதிரி தொல்லைகள் விலகும் இந்த நாளில் வழிபாடு செய்யலாம்.

இது தவிர சுகமான வாழ்க்கை அமைய வேண்டும் என நினைப்பவர்கள் வளர்பிறை அஷ்டமியில் வரும் ராகு காலத்தில் துர்க்கையை வழிபடலாம். வளர்பிறை அஷ்டமியில் வரும் ராகு கால வழிபாட்டினை 9 அஷ்டமிகள் அல்லது 11 அஷ்டமிகள் செய்யலாம். கிழமைகளின் அடிப்படையில் செய்யப்படும் ராகு கால பூஜையை எந்த பிரச்சனை தீர வேண்டும் அல்லது என்ன வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று செய்கிறோமோ அந்த பிரச்சனை தீரும் வரை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

துர்க்கை பூஜை செய்யும் முறை :

துர்க்கை அம்மனை ராகு காலத்தில் கோவிலில் சென்றும் வழிபடலாம். வீட்டிலேயே வழிபட நினைப்பவர்கள் துர்க்கை அம்மனின் படம் அல்லது ஏதாவது அம்மனின் படத்தை ஒரு மனை பலகையில் சிவப்பு துணி விரித்து வைத்து, சிவப்பு நிற மலர்கள் அல்லது செவ்வரளி அல்லது வாசனை மிகுந்த மல்லிகை பூவை சூட்ட வேண்டும். 

எலுமிச்சையால் செய்த சாதம், எலுமிச்சை சாறு, பானகம் இவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக படைத்து, நெய் விளக்கேற்றி வைத்து வழிபடலாம். அம்மனுக்குரிய மூல மந்திரத்தை சொல்வதாக இருந்தால் 108 முறை சொல்ல வேண்டும். அல்லது துர்க்கைக்குரிய மந்தித்தை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட பிரச்சனைகள் அனைத்தும் தீரும். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top