பிரம்மனின் விருப்பத்திற்கேற்ப, இறைவன் பூமியில் சுயம்புவாக முதன்முதலில் தோன்றிய தலம், திருவொற்றியூர். ஒற்றியூர், ஆதிபுரி என்ற பெயர்கள், இதனை உறுதி செய்கின்றன. இங்குள்ள இறைவனின் பெயர் ‘ஆதிபுரீஸ்வரர்’ என்பதாகும்.
பல்லவர் காலத்தில் செங்கற்தளியாக இருந்து, முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டது. இறைவனின் கருவறை, கஜபிருஷ்ட வடிவில் இருப்பது, பல்லவர் காலம் என்பதை உறுதி செய்கிறது.
தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது.
சிவபெருமானை வழிபட பிரம்மன், விஷ்ணு, வாசுகி மூவரும் கடுந்தவம் இருந்து வரம் பெற்றனர். அதன் பயனால் ஆண்டுதோறும், மூவரும் கார்த்திகை பவுர்ணமி தொடங்கி மூன்று நாட்கள் இத்தல இறைவனை பூஜிப்பதாக ஐதீகம். ‘வாவியெல்லாம் தீர்த்தம், மணலெல்லாம் சிவலிங்கம்’ என பட்டினத்தார் இந்த தலத்தைப் புகழ்கின்றார்.
ஆலய அமைப்பு
தொண்டை நாட்டின் 32 தேவாரத் தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. கோபுரத்தின் எதிரே பிரமாண்ட திருக்குளம், ‘பிரம்ம தீர்த்தம்’ என்ற பெயரில் அமைந்துள்ளது.
ராஜகோபுரத்தினுள் நுழைந்ததும், வலதுபுறம் தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து மகிழமரம், அதன் அருகே விநாயகர், முருகன், குழந்தையீசர் ஆகியோரது சன்னிதிகள் இருக்கின்றன.
இடதுபுறம் கொடிமரம், பலிபீடம், அதனருகே நந்திதேவர் காட்சி தருகிறார். அருகே ஜகந்நாதர் சன்னிதி, எதிரே சூரியன், நால்வர், சகஸ்ர லிங்கம், ராமநாதர், அமிர்தகண்டேஸ் வரர் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன. வலச்சுற்றில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள், காளி சன்னிதி, ஆகாய லிங்கம், ஜம்புகேஸ்வரர், நாகலிங்கேஸ்வரர், காளத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஒற்றியூர் ஈசர் கோவில், நந்தவனத்தீசர், நந்தவனம், சொர்ண பைரவர் சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன.
கொடிமரத்தின் மேற்கே மாணிக்க தியாகராஜர் சன்னிதி, மூலவர் சன்னிதி, நடராஜர் சன்னிதி உள்ளன. சப்தவிடங்கத் தலங்களின் கணக்கில் வராத தியாகராஜரான இவர், ஏலேலருக்கு மாணிக்கங்கள் கொடுத்து உதவியதால், இவர் மாணிக்க தியாகராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு மார்கழி பவுர்ணமி இரவில் 18 திருநடனம் உண்டு.
ஆதிபுரீஸ்வரர்
மூலவரான சுயம்பு ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவர் கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில் சிவலிங்கத் திருமேனியில் சதுரவடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இவர் கார்த்திகை பவுர்ணமி தொடங்கி, மூன்று நாட்கள் கவசம் நீக்கப்பட்டு, நிஜ லிங்க தரிசனம் தருவது கண்கொள்ளாக் காட்சியாகும். மூன்று நாட்களும் புணுகு சட்டம், ஜவ்வாது, சாம்பிராணி தைலம் சார்த்தப்படுகிறது.
ஆவுடையாரின் மீது வழக்கமான லிங்கத் திருமேனிக்கு பதிலாக, படம் எடுத்த நாக வடிவில் இறைவன் காட்சி தருவது அபூர்வக் கோலமாகும். தன்னை வழிபட்ட வாசுகி பாம்பை, தனக்கு ஐக்கியப் படுத்தியதால், இத்தல இறைவன் இப்படி காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.
இத்தல இறைவன் ‘படம்பக்க நாதர்’, ‘புற்றிடங்கொண்டார்’, ‘எழுத்தறியும் பெருமான்’ எனப் பலவாறு அழைக்கப்படுகிறார். இந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழமன்னன் அனைத்து கோவில்களின் படித்தரத்தையும் குறைத்து கட்டளை ஓலை அனுப்பினான்.
அந்த ஓலையை இத்தல இறைவனே திருத்தி, ‘ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க’ என எழுதியதால், இறைவனுக்கு ‘எழுத்தறியும் பெருமான்’ என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
வடிவுடையம்மன்
ஞான சக்தியாய் விளங்கும் இத்தல அம்பாளின் திருநாமம் ‘வடிவுடையம்மன்’ என்பதாகும். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னைக்கு, திரிபுரசுந்தரி, வடிவுடை மாணிக்கம் என்ற பெயர்களும் உண்டு. நான்கு கரங்களுடன் அபய வரத முத்திரையுடன் பக்தர்களின் குறை கேட்கும் விதமாக, வலதுபுறம் தலை சாய்ந்தபடி அம்பாள் காட்சி தருகிறாள்.
பவுர்ணமி தோறும் காலையில் இச்சா சக்தியான மேலூர் திருவுடையம்மனையும், நண்பகலில் ஞானசக்தியான திருவொற்றியூர் வடிவுடையம்மனையும், மாலையில் கிரியாசக்தியான திருமுல்லைவாயில் கொடியிடையம்மனையும் வணங்குவது, பல்வேறு நன்மைகளை அருளும் என்பது ஐதீகம். இம்மூன்று திருவுருவங் களையும், ஒரே சிற்பிதான் வடிவமைத்தார் என்று கூறப்படுகிறது.
பிரம்மா, விஷ்ணு, வாசுகி என்ற நாகம், ஐயடிகள் காடவர்கோன், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், சங்கிலி நாச்சியார், கலிய நாயனார், ஆதிசங்கரர், பட்டினத்தார், கம்பர், கவி காளமேகம், இரட்டைபுலவர் கள், அருணகிரிநாதர், ஒற்றி ஞானப்பிரகாசர், தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், வீணை குப்பையர், வள்ளலார், மறைமலை அடிகள், சிதம்பர முனிவர், திருவொற்றியூரான் அடிமை, கபாலி சாஸ்திரிகள் என பலரும் வணங்கிப் பேறு பெற்ற தலம் இது.
விழாக்கள்
சித்திரையில் வட்டப்பாறை அம்மன் உற்சவம், வைகாசியில் 15 நாள் வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், கலிய நாயனார் வீதியுலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தீபம், பவுர்ணமியில் மூலவர் கவசம் திறப்பு, மார்கழியில் ஆருத்ரா, 18 திருநடனம், பங்குனியில் பசுந்தயிர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன.
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமையில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ச்சியாக சுவாமி தரிசனம் செய்யலாம்.
தொன்மையான மகிழ மரம்
கயிலாயத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர் ஆலால சுந்தரர். இவர் உமாதேவியின் தோழிகளான அநிந்திகை, கமலினி இருவரையும் விரும்பினார். இதையறிந்த சிவபெருமான், மூவரையும் மண்ணுலகில் பிறந்து இன்பம் துய்த்து மீள அருள்புரிந்தார்.
அதன்படி திருநாவலூரில் அவதரித்த சுந்தரர், திருவெண்ணை நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்டார். பிறகு திருவாரூரில் பரவையாரை மணம் புரிந்து இல்லறம் புரிந்துவந்தார். தல யாத்திரையில் திருவொற்றியூர் வந்த போது, அங்கே ஞாயிறு தலத்தில் தோன்றிய மற்றொரு தோழியான சங்கிலி, திருவொற்றியூர் இறைவனுக்குத் தொண்டு செய்துவர, அவரை மணம் முடிக்க ஆசைப்பட்டார்.
மகிழ மரத்தின் அடியில் இறைவன் முன்பாக இரண்டாவதாக மணம் புரி கிறார், சுந்தரர். எல்லை தாண்ட மாட்டேன் என்ற சத்தியத்தையும் சங்கிலியாருக்குச் செய்து கொடுத்தார். விதி யாரை விட்டது?
திருவாரூர் திருவிழாவை காணும் பேராவலில் சத்தியத்தை மீறிப் பயணமான சுந்தரருக்குப் பார்வை பறிபோனது. ஆயினும் பயணத்தைத் தொடர்ந்த சுந்தரர், மனம் வருந்தி இறைவனை வேண்டினார். பூண்டியில் ஊன்றுகோல் கிடைத்தது, திருவேகம்பத்தில் ஒரு கண் பார்வையும், திருவாரூரில் மற்றொரு கண் பார்வையும் கிடைத்தது என்பது வரலாறு.
இங்குள்ள தல விருட்சமாக மகிழமரம் மிகவும் தொன்மையானது. சுந்தரர்- சங்கிலி நாச்சியார் திருமணத்திற்கு சாட்சியாக விளங்கிய இந்த மரம் இன்றும் பசுமையாக காட்சி தருகிறது. இதன் பின்புறம் இருவரின் திருமணத்திற்கு சாட்சியாக நின்ற சிவபெருமானின் திருவடிகள் தனிச் சன்னிதியில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் மாசிமாதம் இத்தலத்தில், மகிழடி திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இங்கு சுந்தரமூர்த்தியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இதில் சுந்தரர் – சங்கிலி நாச்சியார் திருமணக் காட்சியைக் காணலாம்.
காளாமுகம் கவுலீசர்
கி.பி. 11-ம் நூற்றாண்டில் சைவ சமய பிரிவுகளில் ஒன்றான, காளாமுக பிரிவின் இருப்பிடமாகத் திருவொற்றியூர் திகழ்ந்ததை வரலாறு கூறுகிறது. சர்வ சித்தாந்த விவேகம் எனும் வடமொழி நூல் இவர்களைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளது. காளாமுகம் என்பது சோமசித்தாந்த ஆகமம். இதைப் பின்பற்றுவோர் வணங்கிய தட்சிணாமூர்த்தியின் வடிவமே ‘கவுலீசர்’ ஆவார்.
இத்தல தியாகராஜர் சன்னிதியின் பின்புறம் தனிச்சன்னிதியில் கவுலீசர் வீற்றிருக்கிறார். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்திய கலைநயம் மிக்க சிற்பமாக இது விளங்குகிறது. நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் தலையில் ஜடாமகுடம், காதுகளில் ஸ்படிக குண்டலங்கள், வலது கரம் அருள்வழங்க, இடக்கரம் மார்பின் மீது உள்ளது. மேல் இடக்கரம் கபாலத்தையும், மேல் வலக்கரம் திரிசூலத் தண்டைத் தாங்கிபடி காட்சி தருகின்றன. கவுலீசர் அடியில், ஆதிசங்கரர் வடிவம் அமைந்துள்ளது.
பசிப்பிணியைப் போக்கிய அம்மன்
வடலூர் ராமலிங்க சுவாமிகள் எனும் அருட்பிரகாச வள்ளலார், இந்த ஆலயத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஏழுகிணறு பகுதியில் உள்ள வீராச்சாமி தெருவில் தனது அண்ணனோடு தங்கி வாழ்ந்து வந்த வள்ளலார், நாள்தோறும் இத்தலம் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். ஒருநாள் தரிசனம் முடித்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது. வீட்டுக்கதவு சாத்தியிருந்ததால், அண்ணியை எழுப்ப விரும்பாத வள்ளலார், வெளியில் இருந்த திண்ணையில் பசியோடு படுத்து உறங்கினார்.
அப்போது அவரை எழுப்பிய அண்ணியார், வள்ளலாருக்கு உணவு படைத்துப் பசியாற்றினார். காலையில், இவரை மீண்டும் எழுப்பிய அண்ணியார், ‘ஏன் சாப்பிடாமலேயே உறங்கிவிட்டாய்? என்னை எழுப்பக் கூடாதா?’ என்று கேட்க, அவர் முன் இரவில் நடந்ததைக் கூற, அனைவருக்கும் வியப்பு. அப்போதுதான் வடிவுடையம்மனே, அண்ணியார் வடிவில் வந்து பசியைப் போக்கியது தெரியவந்தது.