நீண்ட ஆயுளும் நீங்காத செல்வமும் தரும் பைரவர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நீண்ட ஆயுளும் நீங்காத செல்வமும் தரும் பைரவர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சகல லோகங்களையும் அச்சுறுத்தி வந்த தீய சக்திகளான அரக்கர்களை அழிக்க ஈசனின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவரே பைரவ மூர்த்தி. 

இவரே பிரம்மனின் ஆணவத்தை அழிக்க ஒரு தலையைக் கொய்து நான்முகனாக மாற்றியவர். இவரே அந்தகாசுரனை அழித்த ருத்ர வடிவினர். அன்னபூரணியிடம் தானம் பெற்று காசிராஜனாக, காலதேவனாக வீற்றிருப்பவரும் பைரவரே. 

காலமெனும் யமனின் அதிகாரத்தைக் குறைத்து தம்மை சரண் அடையும் பக்தர்களுக்கு அபயம் அளித்து நீண்ட ஆயுள் வழங்கும் தெய்வமும் இவரே என்கின்றன புராணங்கள்.

தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி காலபைரவாஷ்டமி என்றே போற்றப்படுகிறது. காரணம் இந்த நாளில்தான் பிரம்மனின் அகந்தையை அழிக்க சிவபெருமான் தன் சக்திகளில் ஒன்றாக கால பைரவரைத் தோற்றுவித்தார். அகந்தையை அழித்து உலகில் நன்மையை நிலைநாட்டும் சக்தியாகக் காலபைரவர் இன்றும் அருள்கிறார் என்பது ஐதிகம்.

ஸ்ரீபகவத்பாதாள் ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த பைரவ வழிபாடு தொன்மையான பிணி தீர்க்கும் வழிபாடு. மேலும் கடன் பிரச்னைகளை நீக்கி செல்வவளம் தரும் நாளாகவும் உள்ளது. ராகு - கேதுவை முப்புரி நூலாக அணிந்து இருக்கும் பைரவ மூர்த்தி மழு, பாசம், சூலம், தண்டம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும் வடிவம் கொண்டவர். நம்பினோர்க்கு சாந்த வடிவமானவர். இவரை வணங்க சகல அச்சங்களும் நீங்கும்.

64 வகையான பைரவ மூர்த்தங்களில் அஷ்ட பைரவர்கள் மட்டுமே பக்தர்களால் அதிகம் வணங்கப்படுகின்றனர். இனி வாழ்வே இல்லை என்று தவிப்பவர்களைக் கூட கரையேற்றி வாழ்வு அளிப்பவர் பைரவர். பைரவரின் உடலில் 9 கோள்களும், 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், 64 யோகினிகளும் அமைந்திருப்பதாக புராணங்கள் கூறும். 

காலத்தை நிர்வகிக்கும் இவரிடமிருந்தே திருவாக்கியம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்கள் உருவானதாக கூறப்படுகிறது. இவரே சகல சிவாலயங்களின் காவல் தெய்வம். இரவு நடை சாத்தும்போது மொத்த கோயில் பாதுகாப்பும், திறவுகோலும் இவரிடமே ஒப்படைக்கப்படும். சிவன் சொத்து அனைத்துக்கும் இவரே காவலாளி.

பைரவரை வழிபடாமல் சிவ வழிபாடு முழுமை பெறாது. மறுபிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், வாங்குபவரின் பாவ புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கே உரியது. மகா பைரவர் அஷ்ட திசைகளையும் காக்கும் பொருட்டு அஷ்ட பைரவராகவும். தர்மத்தை நிலை நாட்ட, அதர்மத்தை ஒழிக்க உதவும் 64 விதமான பணிகளைச் செய்ய 64 வித பைரவர்களாக உருவானதாகவும் நம்பப்படுகிறது.

'ஓம் திகம்பராய வித்மஹே 
தீர்கதிஷணாய தீமஹி 
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்'

'ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே 
ஸ்வாந வாஹாய தீமஹி 
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்'

இந்த மந்திரத்தை மாலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக ஈசன் கோவிலுக்கு சென்று பைரவர் சந்நிதியில் நெய் விளக்கேற்றி, இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட தீவினைகள் நீங்கும். குறிப்பாக மரண பயம் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.

பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் தீபமேற்றி வழிபாடு செய்யலாம். இதனால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும். நம்மை எதிரிகளிடம் இருந்தும் , உடன் இருந்தே தீமை விளைவிக்கும் துரோக சிந்தனை கொண்டவர்களிடம் இருந்தும், மந்திர தந்திரங்களால் விளையும் தீமைகளில் இருந்தும் நம்மை காப்பவர் பைரவ மூர்த்தி.

நமது செல்வம் கொள்ளை போய்விடாமலும் வீண் விரயம் ஆகாமலும் தடுத்து, அச்செல்வங்களால் மகிழ்ச்சி அடைய துணை நிற்பவர் பைரவ மூர்த்தி. மேலும் அவர் வழக்குகளில் வெற்றி தருவார், தீய வழியில் சென்று விடாமல் தடுத்தாட்கொள்வார்.

பைரவரை வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், யம பயம் இருக்காது, திருமணத் தடை அகலும்.சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள்.

பைரவ மூர்த்தி சனியின் குரு. ஆகவே ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, ஜென்மச் சனி நடைபெறும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் பைரவ வழிபாட்டால் குறையும்.

எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும். தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும்.

நன்மைகள் பல அருளும் ஸ்ரீபைரவ மூர்த்தியை நாளும் வணங்கி சகல நன்மைகளும் பெறுவோம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top