மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து போகவேண்டாம், துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும்.
அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.
அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது.
அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம், அன்றைய தினம் பைரவரை வணங்கிட, வேண்டும் வரங்கள் எல்லாம் கிடைக்கும்.
சகல சௌபாக்யங்களும் தரும் விரதம் என்று சூத முனிவர் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதம் அஷ்டமி விரதமாகும். ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து பலன் பெறலாம்.
சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். 12 ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றையும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர்.
காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால்தான் அங்கு இறப்பவருக்கு மோட்சம் கிடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.
எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.
சனி மாற்றத்தால் அசுப பலன் ஏற்படக்கூடிய ராசிக்காரர்களும் சனி திசை புக்தி நடப்பவர்களும் தினமும் ஸ்ரீ கால பைரவர் வழிபாடு மற்றும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு மேற்கொள்ளுவதும் சிறப்பு.