ஓணம் பண்டிகை வரலாறு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஓணம் பண்டிகை வரலாறு பற்றிய பதிவுகள் :

அசுரர்களிலேயே மக்கள் மிகவும் நேசிக்கக்கூடிய, வளமாக, திறமையாக ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி, ஒவ்வொரு ஆண்டும் மக்களை வந்து பார்த்து வளமோடு, செழிப்பாக வாழ்கிறார்களா என பார்த்து செல்வதாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு தான் ஓணம் பண்டிகை.

மலையாள சிங்கம் மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் வரை கோலாகலமாக கொண்டாடடப்படும் பண்டிகை தான் ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோணம் நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருதப்படுகின்றது.

எலியாக இருந்த மகாபலி சக்கரவர்த்தி:

மகாபலி சக்கரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். அப்போது சிவன் கோயிலில் திரிந்து கொண்டிருந்த பொழுது, அங்கு சிவபெருமானுக்கு அருகில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு விளக்கு அணையும் நிலையில் இருந்தது. 

அந்த விளக்கின் திரியின் மீது எலியின் வால் தற்செயலாக பட்டு தூண்டப்பட்டு மீண்டும் சுடர்விட்டு பிரகாசமாக எரிந்தது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்ததால், அந்த எலிக்கு அடுத்த பிறவில் சிறந்த மன்னராக மகாபலி சக்கரவர்த்தியாக படைத்தார்.

மகாபலி சக்கரவர்த்தி பெருமைகள்:

புராண கதைகளின் கூற்றுப்படி, கேரளாவை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்ததாகவும், அவர் மக்களை மிகவும் அரவணைப்புடன் கவனித்துக் கொண்டதாகவும், அவரின் ஆட்சியின் கீழ் நாடு செழிப்பாகவும், மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் மகாபலி சக்கரவர்த்தி செய்த நற்காரியங்களால் அவனே அறியாத அளவிற்கு மிகுந்த உயர்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

வேள்வி :

இந்நிலையில் நாட்டு மக்களின் நலனுக்காக தேவேந்திர பதவி வேண்டி ஒரு மாபெரும் அசுவமேத வேள்வி ஒன்றை நடத்தவும், வேள்வியின் இறுதியில் நாட்டு மக்களுக்கு தான, தர்மம் வழங்க முடிவு செய்தார் மகாபலி சக்கரவர்த்தி. இந்த வேள்வியை அசுர குரு சுக்ராசாரியார் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையறிந்த தேவர்கள் மகாபலி சக்கரவர்த்தியுடன் போரிட்டனர், இதில் மகாபலி வென்றார். இதனால் அச்சமடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

வாமன அவதாரம் :

தேவர்களை காப்பது தனது கடமை என கருதிய மகாவிஷ்ணு, வாமன அவதாரம் எடுத்தார். மண்ணுலகில் விஷ்ணுவின் 5 வது அவதாரமாக காஸ்யப முனிவர், திதி தம்பதிக்கு மகனாக அவதரித்திருந்தார்.

மகாபலி சக்கரவர்த்தி தன் வேள்வி நிறைவு செய்யும் விதமாக, மக்களுக்கு தான, தர்மங்கள் செய்ய தொடங்கினார். இதில் தான தர்மங்கள் செய்து முடிக்கும் போது வாமனன் அங்கு வந்தார்.

வாமனனைப் பார்த்ததும், மகாபலி தாமதமாக வந்துவிட்டீர்க்ளே. இப்போது தான் தானம் கொடுப்பதை நிறைவு செய்தேன் என்றார்.
அதற்கு வாமனனோ, நானோ மூன்றடி உயரம் கொண்ட சிறுவன். நான் பெரிதாக எதையும் கேட்க மாட்டேன், என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும் என்றார்.

அப்போது அசுர குரு சுக்ராசாரியார், இவர் விஷ்ணுவின் அவதாரமாக தோன்றுகிறது. அவருக்கு தானம் அளிப்பதற்கு முன் சற்று யோசியுங்கள் என்றார்.

ஆனால் மகாபலி சக்கரவர்த்தியோ, மகாவிஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்துள்ளார் என்றால் எந்தளவிற்கு, நான் சிறந்தவன். நான் தானம் கொடுத்தே தீருவேன் என்றார்.

தானம் கொடுக்க கமண்டலத்திலிருந்து நீரை வார்க்க மகாபலி சக்கரவர்த்தி முயன்ற போது, நீர் வராத மாதிரி, வண்டு அவதாரம் எடுத்து சுக்ராச்சாரியர் கமண்டலத்தை அடைத்துக் கொண்டார்.

அப்போது வாமனன் அங்கிருந்த ஒரு குச்சியை எடுத்து கமண்டல நீர் வரும் குழாயை குத்தினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் பறிபோனது.

வரம் பெற்ற மகாபலி சக்கரவர்த்தி:

அதன் பின் ஒரு அடியால் மண்ணுலகையும், மற்றொரு அடியால் விண்ணுலகத்தையும் அளந்தார் வாமனன். மூன்றாவது அடியை எங்கு வைப்பது என கேட்க, மகாபலி தன் தலை மீது வைக்குமாறு சொன்னார்.
மகாபலியின் தலையில் வாமனன் கால் வைத்ததும், மகாபலி பாதாளலோகம் சென்றார்.

அசுரராக இருந்தாலும், மக்களுக்கு நல்லனவற்றை செய்த மகாபலிக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி, என் மக்களை நான் ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்த்து, அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்து செல்ல விரும்புகிறேன் என கூறினார்.

அதற்கு அப்படியே ஆகட்டும். நீ உன் மக்களை வந்து பார்ப்பதை மக்கள் பண்டிகையாக கொண்டாடுவார்கள் என மகாவிஷ்ணு வரம் அளித்தார். இதுவே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top