ஆடி கிருத்திகையின் சிறப்புகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி கிருத்திகையின் சிறப்புகள் பற்றிய பதிவுகள் :

9/8/2023 - புதன்கிழமை

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய 'ஆடி கிருத்திகை". உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலம் ஆகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

நட்சத்திரங்களில் கிருத்திகை சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?

ஆடி கிருத்திகை தினத்தன்று பூஜையறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும்.

பின்பு முருகனின் படத்திற்கு நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

பின் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை முருகனை மனதில் நினைத்து படிக்க வேண்டும்.

முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் முருகனுக்கு விரதம் இருப்பது சிறப்பு.

மாலையில் வீட்டில் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

கிருத்திகை விரத பலன்கள் :

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வதுபோல வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளை பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

ஆடி கிருத்திகை நாளில் முருகனை மனமுருக வழிபட்டு அருளை பெறுவோமாக.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top