கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள் பற்றிய பதிவுகள் :

பரதக்கலைக்கு ஆதாரமாய் விளங்குபவை 108 நாட்டிய கரணங்கள். அந்த கரணங்களைச் சிவபெருமான் அனைவர்க்கும் கற்பித்தார் என்பது தொன்நூல்களின் கூற்றாகும். 

தஞ்சைப் பெரிய கோயிலில் மேல்நிலை சாந்தார அறையில் சிவபெருமானே நூற்று எட்டு கரணங்களையும் ஆடிக்காட்டுவதாகச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில், 80 கரண சிற்பங்களே பூர்த்தியடைந்துள்ளன. 

தில்லைப் பெருங்கோயிலின் நான்கு கோபுரவாயிற் சுவர்களிலும், நாட்டிய நங்கையர் மேற்படி கரணங்களை ஆடிக்காட்டுவதாகச் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் கிழக்கு மற்றும் மேற்குக் கோபுரங்களில் ஒவ்வொரு கரணத்திற்கும் உரிய இலக்கணம் கல்வெட்டாக இடம்பெற்றுள்ளன.

இதுபோன்றே, கும்பகோணத்தில் உள்ள சார்ங்கபாணி கோயில் கோபுரத்தில் தொண்ணூற்று நான்கு கரணங்கள் உள்ளன. இங்கு நாட்டிய கரணம் காட்டுபவன் முருகப் பெருமானே என்பது ஆய்வுகளினால் உறுதிபெற்றுள்ளது. 

வைணவ ஆலயக் கோபுரத்தில் இச்சிற்பங்கள் எவ்வாறு இடம்பெற்றன என்பது நோக்குதற்குரியதாகும். திருக்குடந்தை என அழைக்கப்பெறும் கும்பகோணம் நகரத்தில் மட்டும் பன்னிரெண்டு சிவாலயங்களும், நான்கு விஷ்ணு ஆலயங்களும் இருப்பதாக ராபர்ட் சீவல் 1882-ஆம் ஆண்டில் வெளியிட்ட `லிஸ்ட் ஆப் ஆண்டி குரியன் ரிமைன்ஸ் இன் மெட்ராஸ் பிரிசிடென்சி’ எனும் நூலில் (ப. 74) குறித்துள்ளார். 

அவற்றுள், பதினொரு கோயில்களில் மிக நல்ல நிலையில் சிற்பங்கள் இருப்பதாகவும், ஒரு கோபுரம் பெரியதாகவும் அழகாகவும் இருப்பதாகக் குறித்துள்ளார். கும்பகோணம் நகரத்தில் விளங்கும் கோயில்களின் கோபுரங்களிலேயே பெரியதும், பதினொரு நிலைகளை உடையதுமான அழகிய கோபுரம் சார்ங்கபாணி திருக்கோயில் கோபுரமாகும். 

‘‘குடந்தைக் கிடந்தான்’’ என வைணவ ஆழ்வார்களால் போற்றப் பெற்று, மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்கோயிலும் இதுவாகும். கிழக்கு நோக்கிய இந்த வைணவ ஆலயத்திற்குத் தென்புறம், சோமேஸ்வரர் கோயில், மேற்குப்புறம், கும்பஸ்வரர் கோயில், தென்கிழக்கே, குடந்தைக் கீழ்க்கோட்டம் எனும் நாகேஸ்வரர் கோயில் ஆகிய சிவன் கோயில்கள் விளங்குகின்றன. 

சோமேஸ்வரர் கோயில் மட்டும் இக்கோயிலை ஒட்டியே அமைந்துள்ளது. இக்கோயிலில் வெளிமதிலின் கீழ்ப்புறவாயிலாக உயர்ந்த உப பீடத்தின்மேல் அமைந்த அதிஷ்டானத்தோடு கோபுரத்தின் கல்ஹாரம் விளங்குகின்றது. பித்தியில் கோஷ்டங்களும், பஞ்சரங்களும், கால்களும் அணி செய்கின்றன. கபோதகம் எடுப்பாக விளங்குகின்றது. பிரஸ்தரத்தின் மேல் செங்கற்படையாக அமைந்த பதினொரு தளங்கள் அணி செய்கின்றன.

90 அடி நீளமும், 51 அடி அகலமுமுடைய அடி பீடத்துடனும் 150 அடி உயரத்துடனும் இக்கோபுரம் உள்ளது. ஒவ்வொரு நிலையின் வெளிப்புறமும் சாலை, பஞ்சரம் கூடு போன்றவற்றால் அழகு செய்யப்பட்டிருந்தாலும், அப்பகுதி முழுவதும் சுதையால் அமைந்த உருவங்கள் மிகுந்து காணப்படுகின்றன. மதுரை திருக்கோயிற்கோபுரத்தில் இருப்பது போன்றே கோபுரம் முழுவதும் சுதை உருவங்கள் காட்சியளிக்கின்றன.

அதிஷ்டானத்திற்கு மேலாக வேதிகைப் பகுதி முழுவதும் நாட்டிய கரணச் சிற்பங்கள் தொடர்ச்சியாகவுள்ளன. அச்சிற்பங்களுக்குக் கீழாகக் கரண விளக்கம் கிரந்த எழுத்தில் பொறிக்கப் பெற்றுக் காணப்பெறுகின்றது. சில இடங்களில் சிவன் ஆடும் ஊர்த்துவ தாண்டவம் போன்ற ஆடல் காட்சிகளும், காளி நடமிடும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. கல்ஹாரப் பகுதியைக் கூர்ந்து நோக்கினால் இக்கோபுரத்தின் கற்படையானது புதிதாக எடுக்கப் பெறுகின்ற கோபுரத்திற்கு உரியது போன்று திகழாமல், முன்பே வேறு இடத்தில் வேறு வகையான கோயிற்கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பெற்ற கற்களைக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பது நன்கு விளங்கும். அதுவும், குறிப்பாகச் சிவாலயத்துக் கட்டுமானக் கற்களின் பெரும்பகுதி இங்கு இடம்பெற்றிருப்பது சிற்றுருவச் சிற்பங்களின் வாயிலாக அறிய முடிகிறது. 

இவற்றை ஆராயும்போது, இக்கோயிலுக்கு அருகிலிருக்கும் சோமநாதர் கோயில் ஒரு காலகட்டத்தில் இடிபாடுற்று சிதைந்து இருந்தபோது சார்ங்கபாணி கோயிலும் சிதைந்து இருந்தது. பிறகு சார்ங்கபாணி கோயிலுக்குப் பெரிய இராஜகோபுரம் கட்ட அப்போதைய ஆட்சியாளராக இருந்த திப்பதேவமகாராயர் முடிவெடுத்து பெருங்கோபுரம் எடுத்தார். அவரது பணிக்கு தேவைப்படும் கற்கள் பக்கத்திலேயே இடிபாடுற்று அழிந்த கோயிலில் இருந்து கிடைத்தன. அவ்வாறு அவர் கற்களை எடுக்கும்போது அங்கு இருந்த 94 கரணச் சிற்பங்களை எடுத்து வைணவ ஆலயத்தின் கோபுரத்தில் பொதித்து அவை அழிந்து போகாமல் காப்பாற்றினார்.நாட்டியக் கரணச் சிற்பங்களை அவர் காப்பாற்றியதற்குக் காரணம் அவர் இசையிலும் நாட்டியத்திலும் விற்பன்னராக இருந்ததுதான். அவர் தாலதீபிகை எனும் நூலை இயற்றியவர். அது நாட்டிய சாத்திரம் பற்றி கூறும் நூலாகும். அந்நூலில் `குகோசபரத லட்சணம்’ எனும் நூலிலிருந்து பல மேற்கோள்கள் காட்டப் பெற்றுள்ன.

குகோசபரத லட்சணம் எனும் நூல், தஞ்சை சரஸ்வதி மகாலில் ஏட்டுச் சுவடியாக உள்ளது. மேலும், அந்த நூலகத்திலேயே திப்பதேவ மகாராயர் இயற்றிய தாலதீபிகையும் இடம் பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கதாகும். எனவே, நாட்டியக் கலையில் தேர்ந்த நிபுணத்துவம் உள்ள திப்பதேவராயன் முருகப் பெருமான் ஆடிக் காட்டும் கரணச் சிற்பங்களை, தான் எடுத்த கோபுரத்தில் நிலைபெறுமாறு செய்தான். `பரத சேனாபதீயம்’ எனும் நூலில் அம்பிகை கணபதிக்கும் கந்தனுக்கும் நாட்டியக் கலையைக் கற்பித்தாள் என்று கூறப்பெற்றுள்ளது. கும்பகோணம் சார்ங்கபாணி கோயில் கோபுரம் முருகப் பெருமானின் ஆடற்கலையைக் காட்டும் அழியாத சின்னமாக நிலைத்து நிற்கின்றது.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top