சஷ்டி விரத நியதிகள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சஷ்டி விரத நியதிகள் பற்றிய பதிவுகள் :

கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்றுத் திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் அதிகாலை எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக் கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாபட்சர மந்திரத்தை எழுத வேண்டும். 

"ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி, முருகனை மனதில் இருத்தி; நீரில் மூழ்கி எழ வேண்டும். கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப் பெருமானை நினைந்து தியானம் செய்ய வேண்டும். 

தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் மட்டும் அருந்தி இருப்பது மிகவும் சிறப்பான விரதமாகும். 

பானகமென்பது சர்க்கரை, தேசிக்காய், இளநீர், முதலியன கலந்து தயாரிக்கப்படும் ஒரு நீராகாரம் ஆகும். பட்டினி கிடக்கும் வயிற்றினுள் வெளிப்படும் அதிக சக்திமிக்க வெப்பம், வாய்வு, பித்தம், இவற்றைத் தணித்து உடற்சமநிலையைப் பேணுவதற்கும், பசி, தாகம், இவற்றை ஓரளவு தணிக்கவும் இது உதவுகிறது.

இந்த ஆறு நாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப "கந்தசஷ்டி" விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கல்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கவேண்டும். 

ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் இன்ன நோக்கத்துக்காக இன்னமுறைப்படி இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகின்றேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம் செய்து) ஆலயம் சென்று சங்கல்பப்பூர்வமாக அர்ச்சினை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். 

குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை கொள்ளவேண்டும். உரிய காலம் முடிந்ததும் விரத உத்தியாபனம் செய்து விரதத்தை நிறுத்த வேண்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top