ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய பெளர்ணமி திதிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் மகாளயபட்ச காலம் ஆகும்.
மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளயபட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள் ஆகும்.
மகாளயபட்சத்தின் சிறப்பு :
மகாளயபட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.
மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்த காலத்தில் தானங்களை செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன்கள் கிடைக்கும்.
வேத நூல்கள் சொல்லும் கதை :
பல தெய்வீக நூல்களில் மகாளயபட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மை பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.
இந்நாட்களில் நம் வீடுகளை மிக தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
மகாளயபட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா?
இந்த காலத்தில் திருமணம் போன்ற எந்த சுபகாரியத்தையும் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது.
சிரார்த்தம், திதி கொடுப்பது, தான-தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்சனைகளை தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்சனைகளில் உள்ள வில்லங்கங்களை தீர்த்துக்கொள்ளும் காலம்தான் இந்த மகாளயபட்சம் என்பதாகும்.
இந்நாளில் முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும்?
மகாளயபட்ச நாட்களில் முன்னோர்களை வழிபாடு செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும்.
முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவிற்கு புல், பழம் கொடுக்கலாம்.
எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோர்களின் பெயர்களை உச்சரித்து, காசி காசி என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும், தண்ணீரும் விட்டுக்கூட திதி பூஜையை செய்யலாம்.