மங்கல வாழ்வு தரும் மகாளயபட்சம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மங்கல வாழ்வு தரும் மகாளயபட்சம் பற்றிய பதிவுகள் :

பித்ருக்களின் ஆராதனைக்கு மகாளயம் என்று பெயர். மகாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் இல்லத்தில் கூடும் நேரமே மகாளயபட்சம் ஆகும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள்.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு முன் வரக்கூடிய பெளர்ணமி திதிக்கு மறுநாளிலிருந்து அமாவாசை வரை உள்ள காலம் மகாளயபட்ச காலம் ஆகும்.

நற்கதி அடைந்த முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவர செய்யாததற்கான பிராயச்சித்தமாக மகாளயபட்ச தர்ப்பண முறை அமைந்துள்ளது.

நமது மூதாதையர்களின் ஆசீர்வாதம் நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்தவொரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான்.

இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.

எந்த திதியில் என்ன பலன்?

முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.

இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும்.

மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

நான்காம் நாளான சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளின் தொல்லை இல்லாமல் வாழலாம்.

ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துக்கள் கிடைக்கும். மேலும் வீடு, நிலம் முதலான சொத்துக்களை வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

ஆறாம் நாளான சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும்.

ஏழாம் நாளான சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் உத்தியோகத்தில் தலைமை பதவி கிடைக்கும்.

எட்டாம் நாளான அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.

ஒன்பதாம் நாளான நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கை துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

பத்தாம் நாளான தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி அடைவார்கள்.

பன்னிரண்டாம் நாளான துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்க நகைகள் சேரும். விலை உயர்ந்த ஆடை சேர்க்கை உண்டாகும்.

பதின்மூன்றாம் நாளான திரியோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.

பதினான்காம் நாளான சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.

அடுத்து வரும் பதினைந்தாம் நாளானது மகாளய அமாவாசை. மகாளயபட்சத்தில் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top