இறைவனுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்குத் தான். ஒரு மனிதனுக்கு முக்கியமான பலன்கள் மூன்று உள்ளது. செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் மனிதனுக்கு மிக முக்கியமானதாகும். இவை அனைத்தும் பரிபூரணமாக கிடைக்க சனி விரதம் இருக்க வேண்டும்.
பணம் மனிதனுக்கு மிக முக்கியமான பொருளாகும். பணத்தை வைத்துக் கொண்டால் போதுமா? அதை அனுபவிக்க ஆயுள் வேண்டும். ஆயுள் நீடிக்க வேண்டும் என்றால் ஆரோக்கியம் வேண்டும். இவை அனைத்தும் நிறைந்தால் மட்டுமே மனித வாழ்க்கை மிக சந்தோஷமாக இருக்கும். அதற்கு சனி விரதம் கடைப்பிடித்தல் வேண்டும்.
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே.
சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது ஆயிற்று. இந்த விரதத்தை அனுஷ;டிக்க உண்மையான பக்தியே தேவையான பொருள்.
மஹாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை.
பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.
சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம். சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்தால் சகல செல்வமும் பெற்று வாழலாம்.