பிரகாசமான வாழ்வு தரும் தீபாவளி பூஜை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பிரகாசமான வாழ்வு தரும் தீபாவளி பூஜை பற்றிய பதிவுகள் :

கொடிய அரக்கன் நரகாசுரனை அன்னை சத்யபாமா வதைத்தாள். சாகும் முன் தனது இறப்பை நாடே மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்று அவன் வரம் கேட்க, அவ்விதமே அளித்தார் கிருஷ்ணர். அந்த மரபை ஒட்டியே தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 

நரகாசுரன் வதம் மட்டுமின்றி தீபாவளி அன்று பல முக்கிய நிகழ்வுகள் பல யுகங்களுக்கு முன் நடந்துள்ளன.

ராமர் நாடு திரும்பிய நாள்: 

ராமபிரான் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்ப வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அதே நேரம் அமாவாசையும் நெருங்கிக் கொண்டிருந்தது. 'ஒருவேளை ராமர் இரவு நேரத்தில் இங்கு வர நேரிட்டால்? நிலவின் ஒளி இல்லாததால் அயோத்தி நகர் அவர் கண்களில் படாமல் போய்விட்டால்?' என்ற ஐயம் மக்களை உந்தியது. 

அதனால் ராமர் வரும் வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் இருள் கவியும் நேரத்திலிருந்து விடியும் வரை எல்லா வீட்டு வாசல்களிலும் மாடங்களிலும் விளக்கேற்றி நகரை பிரகாசிக்கச் செய்து ராமருக்கு அடையாளம் காட்டினர். 

அந்த நிகழ்வால் தொடங்கிய வழக்கமே வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு பிற்காலத்தில் பண்டிகையாகி விட்டது என்று 'ஸ்மிருதி முக்தாபலம்' என்னும் நூல் கூறுகிறது.

லட்சுமி பரிணயம்: 

பாற்கடலைக் கடைந்த போது பல அதி உன்னதப் பொருட்கள் தோன்றின. அப்போது வானத்து நிலவோடு அன்னை மகாலட்சுமி தோன்றினாள். மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமுதத்தை வழங்கிய பிறகு, புருஷோத்தமனான அவருக்கும் அன்னை லட்சுமிக்கும் திரமணம் நைடபெற்றதும் ஒரு தீபாவளி நாளில்தான். 

அப்போது கல்யாணக் கோலத்தில் இருந்த லட்சுமி நாராயணரை தேவர்கள், மனிதர்கள் அனைவரும் வணங்கினர். ஆண்டுதோறும் இதே நாளில் பூவுலகம் வந்து மக்களுக்குப் பல செல்வத்தை அருள்வதாக வரமளித்தாள் மகாலட்சுமி என்கிறார், 'லட்சுமி தந்திரம்' என்னும் நூல்.

யம சதுர்த்தசி: 

தீபாவளி அன்று யமனுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம் இன்றும் சிலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் பின்னால் ஒரு சுவாரசியமான புராண காரணம் இருக்கிறது. அமுதத்துக்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். திருமால் மோகனி அவதாரம் செய்து, தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார். 

இதை உணர்ந்த அசுரர்கள், மகாலட்சுமியை சிறைப்பிடிக்க முனைந்தனர். அவர்களது திட்டத்தை முன்பே அறி்ந்து யமன், அன்னையிடம் சொல்லி, எச்சரிக்கை செய்தார். அதனால் அசுரர்கள் அங்கு வருமுன் அன்னை லட்சுமி, விளக்கில் இருந்த எண்ணெயில் மறைந்து கொண்டாள். 

பிறகு மகாவிஷ்ணு வந்து அசுரர்களை வதம் செய்து அன்னையைக் கரம் பிடித்தார். கல்யாணக் கோலத்தில் காட்சி அளித்த லட்சுமி நாராயணரை யமனும் வணங்கினான். மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, 'இன்று உன்னை நினைத்து தர்ப்பணம் செய்பவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு செல்வத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. 

அதோடு அவர்களை நீ என் உத்தரவின்றி பிடிக்கவும் கூடாது' என்றாள். அன்று முதல் தீபாவளியன்று யம தர்ப்பணம் செய்வதும், அன்னை மகாலட்சுமியை வணங்குவதும் வழக்கமாயின.

யமுனா பாயி தூஜ்: 

பலப்பல யுகங்களுக்கு முன் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் மேலுலகில்தான் இருந்தன. அவற்றில் கங்கையும் சரஸ்வதியும் மண் செழிக்க பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து யமுனையும் பூவுலகத்துக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

யமுனை தனது அண்ணனான யமன் மேல் மிகுந்த பாசம் உள்ளவள். அண்ணனைப் பிரிந்து வர அவளுக்கு சம்மதமில்லை. யமனுக்கும் தங்கையை அனுப்ப விருப்பமில்லை. ஆனால் உலக மக்களின் நன்மையைக் கருதி அவ்வாறே செய்ய வேண்டிய வந்தது. 

தங்களது மனக்குறையை மகாலட்சுமியிடம் முறையிட்டனர் அண்ணனும், தங்கையும். 'ஆண்டில் ஒரு நாள் நீ பூவுலகில் உள்ள உன் தங்கையைக் கண்டு வரலாம். அதோடு உன் தங்கை அழியாப் புகழ் பெற்று, புனித நதியாகப் போற்றப்படுவாள்' என்று சொல்லி, யமுனையை அனுப்பி வைத்தாள், திருமகள்.

யமுனை பூமிக்கு வந்ததால் பூமி செழித்தது. பயிர்கள் வளர்ந்தன. மக்கள் அன்பாக யமுனைக்கும் மிக்க மகிழ்ச்சி. ஐப்பசி மாதம் அமாவாசையை ஒட்டிய நாளில் யமன் தன் சகோதரியைக் காண வந்தார். அவருக்கு நெற்றியில் திலகமிட்டு, பல வகையான பலகாரங்களைச் செய்து கொடுத்து அன்போடு கவனித்துக் கொண்டாள் யமுனை. 

அண்ணனின் மனம் குளிர்ந்தது. 'யமுனா! இன்று நீ எனக்குத் திலமிட்டு வாழ்த்தினாயே, அதே போல இதே நாளில் அனைத்து சகோதரிகளும் தங்கள் சகோதரர்களின் நல்வாழ்வுக்காக அவர்களுக்குத் திலகமிடட்டும். அன்று அவர்கள் சகோதரிகளின் கைகளால் சமைத்த உணவைச் சாப்பிடட்டும். அப்படிப்பட்ட வீடுகளில் களிப்பும் குதூகலமும் பொங்கும். 

யம பயமினறி பல்லாண்டு வாழ்வார்கள்' என்று வரமளித்தார். அன்று முதல் தீபாவளியை ஒட்டி 'யமுனா பாயி தூஜ்' என்ற பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது.

தன் திரயோதசி: 

வட மாநிலங்களில் மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது 'தந்தேரஸ்' என்னும் பண்டிகை. தீபாவளிக்கு முந்தைய நாள் அனுசரி்கப்படுகிறது இது. 'தன் திரயோதசி' என்பதே வழக்கத்தில் 'தந்தேரஸ்' என்று வழங்கப்படுகிறது. அது என்ன தன் திரயோதசி?
தீபாவளிக்கு முந்தைய நாளான திரயோதசி திதியில் வருவதால் இதற்கு தன் திரயோதசி என்று பெயர். 

குபேரன் அன்னை மகாலட்சுமியைத் துதித்து அளப்பரிய செல்வத்தைப் பெற்ற தினம் இதுவெனப் புராணங்கள் கூறுகின்றன. ஆகையால் அன்று தங்கம் அல்லது வேறு எந்தப் பொருள் வாங்கினாலும் வருடம் முழுவதும் செல்வம் நிலைத்த நிற்கும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது.

சமணர்களின் தீபாவளி: 

சமண சமயத்தவர் தங்களது முதல் குருவான வர்த்தமான மகாவீரர் முக்தியடைந்த தினத்தை 'தீபாளி' என்று குறிப்பிடுகின்றனர். 'தீபாளி' என்றால் ஒளி நிறைந்த என்று பொருள். அவர்களது குரு ஒளி மிகுந்த இடத்துக்குச் சென்றுவிட்டார் என்னும் பொருள்பட அப்படி அழைக்கப்படுகிறது. அன்று பால் பாயசம் செய்து வழிபடுகிறார்கள்.

திருமகள் தேடிய வருவாள்: 

தீபாவளி நன்னாள் அன்று அன்னை லட்சுமி பூலோகத்துக்கு வருவதாகவும், தனக்குப் பிடித்தமான இல்லத்தில் அருளை வாரி நிறைப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. திருமகளையும், அவள் அருளையும் செல்வத்தையும் விரும்பாதவர் யார்? எல்லோருமே அலைமகள் தங்கள் இல்லத்துக்கு வந்து அருளை வாரிப் பொழிய வேண்டும் என்றுதானே விரும்புகிறார்கள்? அப்படியானால் அலைமகளுக்கு பிடிக்கும் விதமாக நமது இல்லம் இருக்கவேண்டும் அல்லவா? லட்சுமி தந்திரம் என்னும் நூல் மகாலட்சுமி தேவி எத்தகைய வீடுகளில் வாசம் செய்வாள் என்று விரிவாகக் கூறுகிறது.

சுத்தமாகவும், நறுமணம் நிறைந்ததாகவும் உள்ள இல்லங்களில் விரும்பி கொலுவிருப்பாள். எங்கு முதியோர்களுக்கு மரியாதையும், குழந்தைகளுக்கு தேவையான கவனிப்பும் இருக்கிறதோ அந்த இல்லங்களில் அருள்மழை பொழிவாள். கடுமையான பேச்சுக்கள், கெட்ட எண்ணங்கள் இல்லாத இல்லத்தில் நிறைந்திருப்பாள் என்கிறது புராணம். 

நம் இல்லம் சிறியதாக இருக்கலாம். ஆனால் சுத்தமாகவும், வீட்டில் இருப்போர் அன்பாகவும் இருத்தலே இறை வழிபாட்டின் ஆரம்பம்.
வீட்டைத் தூய்மைப் படுத்துவதோடு, நம் மனதில் உள்ள பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற தூசு தும்புகளையும் அடித்த விரட்ட வேண்டும். அப்படிச் செய்தால் வீடும் மனமும் நிறைந்து செல்வத்தாலும் அருளாலும் பொலிவு பெறும்.

கங்கா ஸ்நானம்: 

தீபாவளி அன்று ஒருவருக்கொருவர் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்பார்கள். ஏன் அப்படி? காரணம் இருக்கிறது. தீபாவளி அன்று நீரில் கங்கையும், எண்ணெயில் மகாலட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும் எழுந்தருளுவதாக ஐதிகம். அனைத்து நீர் நிலைகளிலும் கூட கங்கை அன்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் தீபாவளி அன்று செய்யும் ஸ்நானத்தை கங்கா ஸ்நானம் என்று குறிப்பிடுகிறார்கள்.

கங்கா ஸ்நானம் என்று குறிப்பிடுகிறோமே? ஆனால் அதை எப்படி முறையாகச் செய்வது?
தீபாவளி அன்று எண்ணெய் ஸ்நானம் தான் செய்ய வேண்டும். சுத்தமான நல்லெண்ணெயை குடும்பத்தினருக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு தில் சிறிது ஓமம், மிளகு சேர்த்து புகை வரும் வரை சூடாக்க வேண்டும். இளஞ் சூடாக இருக்கும்போது முதலில் குழந்தைகளுக்கும், பிறகு பெரியவர்களுக்கும் தேய்க்க வேண்டும். 

குழந்தைகளுக்குத் தேய்க்கும் போது ஆண் குழந்தையானால் வலது தொடையில் ஏழு புள்ளிகளையும், பெண் குழந்தையானால் இடத் தொடையில் ஏழு புள்ளிகளையும் எண்ணெயால் வைத்து பின்னரே மற்ற பாகங்களில் தேய்க்க வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு அவ்வாறு செய்யும்போது சப்த வீரர்கள் அல்லது சப்த ரிஷிகள் பெயர்களையும், பெண் குழந்தைகளுக்கு வைக்கும்போது பத்தினிப் பெண்களின் பெயரையும் சொல்ல வேண்டும். 

பெரியவர்களுக்கு தலையில் எண்ணெய் வைக்கும்போது கௌரி கல்யாணம் பாடலாம்.
எண்ணெய் தேய்த்தாகி விட்டது. அடுத்து, ஸ்நானத்துக்கு உரிய வெந்நீர் தயாரிக்கவும் முறை உண்டு. முந்தைய நாளே நன்கு சுத்தம் செய்து வைத்திருக்கும் வெந்நீர்த் தவலைக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். 

சுத்தமான நல்ல நீரை நிரப்பி அதில் அரசு, ஆல், புரசை, மா ஆகிய மரங்களின் பட்டைகளில் எது கிடைக்கிறதோ அதைப்போட்டு தண்ணீரைச் சுட வைக்க வேண்டும். இந்த வெந்நீரையே குளியலுக்குப் பயன்படுத்த வேண்டும். சீயக்காய், அரப்பு, பூந்திக்காய் ஆகிய இயற்கைப் பொருட்கள் கொண்டு நீராடுதல் சிறப்பு. அவ்வாறு செய்தால் தேக பலமும், ஐஸ்வரியமும் வசப்படும் என்கிறத விஷ்ணு புராணம்.

லட்சுமி குபேர பூஜை: 

தீபாவளி அன்னை மகாலட்சுமிக்கு மிகவும் உகந்த நாள். அன்று அன்னையை பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் செல்வம் நிலைக்கும் பூஜையை எப்படிச் செய்வது?
அன்னை மகாலட்சுமி மகாவிஷ்ணுவோடு இருக்கும் படத்தை பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் பூவையும், மஞ்சளையும் முடிந்து அதைப் படத்துக்கு, அணிவிக்க வேண்டும். 

அட்சதை, குங்குமம், உதிரிப்பூக்கள் ஆகியவற்றை அர்ச்சனைக்குத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஊதுபத்தி, சாம்பிராணியால் நறுமணமூட்ட வேண்டும். குபேரர் படம் அல்லது யந்திரம் இருந்தால் அதையும் பூக்களால் அலங்கரித்து, லட்சுமி படத்துக்கு அருகில் வைக்கவேண்டும்.

லட்சுமியின் நாமாவளியைச் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் குபேரருக்கும் அவ்வாறே செய்யவேண்டும். பூஜை முடிந்ததும் பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்புப் பொருளை நிவேதனம் செய்து, குடும்பத்தினர் மட்டுமே உண்ண வேண்டும். லட்சுமி பூஜை செய்தால் மாலை கண்டிப்பாக விளக்கேற்றி வைக்க வேண்டும். 

குறைந்தது 21 விளக்குகள் ஏற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் மகாலட்சுமி, குபேரனுக்கு செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தது போல நமக்கும் தருவாள்.

நன்றி - ஸ்ரீஜா வெங்கடேஷ்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top