தீபாவளி அன்று தவறாமல் செய்ய வேண்டிய பூஜைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தீபாவளி அன்று தவறாமல் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றிய பதிவுகள் :

கங்கா ஸ்நானம், லட்சுமி பூஜை, குபேர பூஜை, நாணய வழிபாடு என தீபாபளியன்று செய்ய வேண்டிய முக்கிய சடங்குகளை விவரிக்கிறது இந்த கட்டுரை.

தீபாவளி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசுகளும், பலாகாரங்களும் தான். ஆனால், தீபாவளி அன்று செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிவதில்லை. 

தீபாவளி பண்டிகை கொண்டாட இதிகாச காரணங்கள் ஒருபுறம் இருக்க, வீட்டில் செல்வம் பெருக கொண்டாப்படும் பண்டிகை தீபாவளி என்பது பலரும் அறியாதது. 

கங்கா ஸ்நானம், லட்சுமி பூஜை, குபேர பூஜை, நாணய வழிபாடு என தீபாபளியன்று செய்ய வேண்டிய முக்கிய சடங்குகளை விவரிக்கிறது இந்த கட்டுரை.

கங்கா ஸ்நானம்: 

தீபாவளி அன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்தது தலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். 

தலையில் தேய்த்துக்கொள்ளும் நல்லெண்ணெயில் லட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் இருப்பதாக நம்பப்படுகிறது. 

இதனால் தான் இதற்கு கங்கா ஸ்நானம் என்று பெயர் வந்தது. கங்கா ஸ்நானம் முடித்த பின்னரே தீபாவளி புத்தாடைகளை அணிய வேண்டும்.

லட்சுமி, குபேர பூஜை: 

கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் தழைத்தோங்க லட்சுமி, குபேர பூஜை செய்வது சிறந்ததாகும். வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமி, குபேர பகவானின் திருவுறுவப் படங்களை மலர்களால் அலங்கரித்து, குபேர இயந்திரத்தில் மஞ்சள், குங்குமம் இடவேண்டும். 

தேங்காய் கலசம், நவதானியங்கள், பணம், நாணயங்கள் ஆகியவற்றை தெய்வத் திருவுறுவப்படங்கள் முன்பு தலைவாழை இலையில் வைக்க வேண்டும். 

மேலும், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, குங்குமம் இட்டு இலையின் வலதுபக்கம் வைக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட்ட பிறகு, குபேர லட்சுமியின் துதிப் பாடி கற்பூர தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். 

துதி தெரியாதவர்கள் குபேராய நமஹ, தனபதியே நமஹ என்று துதித்து கலசத்தின் மீது உதிரிப்பூக்கள் தூவி வழிபடலாம். காய்ச்சிய பசும்பால், வாழைப்பழம், பாயசம் ஆகியவற்றை நைவேத்யம் செய்வது உகந்தது. 

பூஜைக்கு வைத்த பணம் மற்றும் நாணயங்களை ஏழைகளுக்கு தானம் செய்வது நன்று.

நாணய வழிபாடு: 

குபேர பகவானுக்கு உகந்த எண் 5 ஆகும். எனவே, ஐந்து ரூபாய் நாணயங்களை கொண்டு குபேர பூஜை செய்வது வழக்கம். 108 நாணயங்களை தட்டில் வைத்து, அதனை கைகளால் எடுத்து மீண்டும் தட்டிலேயே போட வேண்டும். 

குபேர பகவானின் 108 போற்றிகளை சொல்லிக் கொண்டே இந்த அர்ச்சனையை செய்வது உகந்தது. பூஜைக்குப் பின் பால், சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் படைத்து தீபாராதனை காட்டி பூஜிக்க வேண்டும். 

தீபாவளியன்று செய்யும் இந்த சடங்குகளால் வீட்டில் சங்கடங்கள் நீங்கி, செல்வம் பெருகி, வாழ்வில் இருள் நீங்கி, புதிய ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top