கார்த்திகை மாத அமாவாசை

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கார்த்திகை மாத அமாவாசை பற்றிய பதிவுகள் :

நம் வழிபாட்டு நாட்களில் மிக முக்கியமான நாள் அமாவாசை. மாதத்திற்கு ஒரு முறை என வருடத்தில் 12 அமாவாசை வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசைகள் அதிக சிறப்பு வாய்ந்தாகவும், நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்தாகவும் இருக்கின்றன. 

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஐப்பசி அமாவாசை போன்று கார்த்திகை மாதத்தில் வரும் அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

அமாவாசை வழிபாடு :

அமாவாசை என்றாலே முன்னோர் வழிபாட்டிற்குரிய நாள் என்பது அனைவருக்கும் தெரியும். நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்களை சாந்தப்படுத்துவதற்காக புனித நீராடி, தர்ப்பணம், தானம் போன்றவற்றை அளிப்பது வழக்கம். 

ஆனால் கார்த்திகை அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டுடன், ஆன்மிக வழிபாட்டிற்கும் மிக முக்கியமான நாளாகும். 

கார்த்திகை மாத பெளர்ணமி எப்படி சிறப்பு மிக்கதோ, அதே போல், கார்த்திகை அமாவாசையும் வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நாளாகும். அதுவும் நிதி தொடர்பான பிரச்சனையில் சிக்கி இருப்பவர்களுக்கு இது மிக முக்கியமான நாளாகும்.

கடன் தீர்க்கும் கார்த்திகை அமாவாசை :

கார்த்திகை அமாவாசையை பெளமாவதி அமாவாசை என்றும் குறிப்பிடுவதுண்டு. கார்த்திகை அமாவாசை அன்று அனுமனையும் செவ்வாய் பகவானையும் வழிபடுவதால் வாழ்வில் நாம் சந்திக்கும் பல விதமான துன்பங்களில் இருந்து விடுபட முடியும். 

கார்த்திகை அமாவாசை நாள் என்பது தேவர்களின் தலைவனான இந்திரன், சூரிய பகவான், அனுமான், முன்னோர்கள் ஆகியோரை வழிபட ஏற்ற நாள். இந்த நாளில் அனுமனை வழிபட்டால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனையில் இருந்தும் விடுபடுவதற்கு வழி கிடைக்கும். 

அதே போல் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருந்தாலும் அது நீங்கி விடும். அதிக கடன் பிரச்சனையால் சிக்கி தவிப்பவர்கள் இந்த நாளில் அனுமன் வழிபாட்டினை முறையாக மேற்கொள்வதால் கைமேல் பலன் கிடைக்கும்.

லட்சுமி அவதார தினம் :

கார்த்திகை அமாவாசை நாளில் தான் லட்சுமி தேவி, பூமிக்கு வருகை தருவதாக ஐதீகம். இந்த நாளிலேயே லட்சுமி தேவி, பாற்கடலில் இருந்து அவதரித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. 

இந்த நாளில் இரவு முழுவதும் கண் விழித்து, மறு நாள் அதிகாலையில் புனித நீராடி, பூஜைகள், பஜனைகள் செய்து வழிபட வேண்டும். விரதம் இருந்து தானம் வழங்கி, லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வ வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை கிடைக்கும். 

நம்மால் முடிந்த பணம், உணவு, உடை என இல்லாதவர்களுக்கு தானமாக இந்த நாளில் கொடுப்பது மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.

கார்த்திகை அமாவாசை 2023 :

இந்த ஆண்டு கார்த்திகை அமாவாசையானது டிசம்பர் 12 ம் தேதி வருகிறது. இது 2023 ம் ஆண்டின் கடைசி அமாவாசையாகும். டிசம்பர் 12 ம் தேதி காலை 06.23 மணி துவங்கி, டிசம்பர் 13ம் தேதி காலை 05.49 வரை அமாவாசை திதியும், அதன் பிறகு பிரதமை திதியும் உள்ளது. 

கார்த்திகை அமாவாசையான் டிசம்பர் 12 ம் தேதி பிரம்ம முகூர்த்த நேரமான 05.15 மணி முதல் 06.09 மணிக்குள் புனித நதிகள், கடல், குளம் ஆகியவற்றில் புனித நீராட வேண்டும். 

இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய் கிழமையில் கார்த்திகை அமாவாசை வருகிறது. 

கடன் பிரச்சனை, நில பிரச்சனை, சொத்து பிரச்சனை, வீடு வாங்க, சொத்து வாங்கும் யோகத்தை தரக் கூடியவர் செவ்வாய் பகவான். அவரை இந்த நாளில் வழிபட்டால் அவரின் அருளால் வீடு, மனை யோகம் அமையும்.

அனுமன் வழிபாட்டு முறை :

அனுமன் மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அமாவாசையின் போது அவதரித்தவர் என்பதால் அமாவாசை அன்று அனுமனுக்கு செந்தூரம், வெண்ணெய் சாத்தி, வடை மாலை அணிவித்து வழிபடலாம். 

ஸ்ரீராம ஜெயம் எழுதியும், வெற்றிலையிலும் மாலை கட்டி அணிவிக்கலாம். இதனால் தடைபட்ட காரியங்கள் அனைத்து நடைபெறும். துன்பங்கள் விலகும், இன்பமான வாழ்க்கை அமையும். 

அனுமனை வழிபடுவதால் சனி தோஷம் உள்ளிட்ட நவகிரக தோஷங்கள் விலகும். துளசி மாலை அணிவிப்பதும், துளசியால் அர்ச்சனை செய்வதும் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top