பைரவருக்கான எட்டுபடை வீடுகள் - அட்ட வீரட்டானங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பைரவருக்கான எட்டுபடை வீடுகள் பற்றிய பதிவுகள் :

பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு அட்ட வீரட்டானங்கள் என்று பெயர். பைரவர் வீரதீரச் செயல்கள் புரிந்த இடங்களாக இருப்ப தால் இவை இந்தப் பெயர் பெற்றன.

1. திருக்கண்டியூர்

இத்திருத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றிற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. இத்திருத்தலம் ஆதி வில்வாரண்யம் என வழங்கப்படுகிறது.

இறைவனின் திருநாமம் பிரமசிரகண்டீஸ்வரர். பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த தலம். இந்தக் கோவிலின் வடமேற்குத் திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.

2. திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் கோவல்நகர் வீரட்டம், திருக்கோவிலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது. 

இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி. அன்னை சிவானந்தவல்லி என்ற பெரிய நாயகி. ஆலயத்தில் ஈசானிய மூலையில் பைரவர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

3. திருவதிகை

பண்ருட்டியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் இது. இறைவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர். ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார். திரிபுரம் எரித்த இடம் இதுவே! வித்யுமாலி, தாரகாசுரன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம் இது. 

தீராத நோய்கள் தீர இங்கு வந்து வழிபட வேண்டும். சுந்தரமூர்த்தி நாயனார் திருவடி தீட்சை பெற்ற இடம் இது. சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு திரும்பிய திருநாவுக்கரசரின் தீராத குன்ம வியாதியை நீக்கி தடுத்தாண்ட தலம் இது.

4. திருப்பறியலூர்

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது. இந்த செம்பொனார் கோவிலில் இருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் இருக்கிறது. 

சுவாமியின் திருநாமம் வீரட்டேஸ்வரர். அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட தட்சனை அழித்த இடம் இது. தட்சன் யாகம் செய்த இடமே தற்சமயம் கோவிலின் குளமாக இருக்கிறது.

5. திருவிற்குடி

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2 கி.மீ தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.
மேற்கு நோக்கிய திருக்கோவிலாக இது அமைந்திருக்கிறது. 

இந்தக் கோவிலின் இறைவனின் திருநாமம் ஸ்ரீஜலந்தராசுரவத மூர்த்தி. திருமால் சுதர்ஸன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து அருளையும், சுதர்ஸன சக்கரத்தையும் பெற்றார்.

எனவே, இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

6. வழுவூர்

மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ தூரம் சென்றதும், வலப்புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து அரை கி.மீ தூரத்தில் இருப்பது வழுவூர் ஆகும்.

இறைவன் கிருத்திவாஸர் என்ற திருநாமத்தோடு அருள்பாலித்துவருகிறார். அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து, திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானச் செல்வம் தந்தருளும் இடம் இது.

எத்தனையோ பேர்கள் தியானம் செய்கிறேன்; தவம் செய்கிறேன் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என புலம்புபவர்கள், இங்கு வருகைதந்து, இறைவனை வழிபட வேண்டும். மாதம் ஒரு நாள் வீதம் பத்து நாட்களுக்கு இங்கிருக்கும் மூலவரின் முன்பாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்;

இங்கும் ஈசான மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார். ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்த அஷ்டமச்சனி பரிகாரதலம்.

7. திருக்குறுக்கை

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற இடம் வந்ததும், பிரிந்து செல்ல வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருக்குறுக்கை வரும். இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை ஆகும். காமனை எரித்த இடம் இதுவே.

8. திருக்கடவூர்

திருக்கடையூர் என்ற திருக்கடவூர் ஆதியில் வில்வாரண்யம் என்ற பெயரில் விளங்கியது.
அமிர்தகடேஸ்வரர், அபிராமி என்ற பெயர்களில் அப்பாவும் அம்மாவும் அருள்பாலித்து வருகின்றனர். எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயரைக் காத்தருளிய இடம் இதுவே.

இதய நோயில் வருந்துவோர்கள், ஆயுளுக்கு கண்டமுள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும், மரண பயம் அகன்று நீடூழி வாழலாம். 

பைரவருக்கு பிரியமானவை :

செவ்வரளி, வில்வம், தீபம் ஏற்றுதல், பூசணிக்காய் தீபம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top