ஆருத்ரா தரிசனம், சிவபெருமான் அவதரித்த திருவாதிரை நட்சத்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆருத்ரா தரிசனம் பற்றிய பதிவுகள் :

ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;
கிருஷ்ணனுக்கு - ரோகிணி;
முருகனுக்கு - விசாகம்.

இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள். ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெருமானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்
என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்
சிவ பெருமானைக் குறிக்கிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை.

எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார்.

சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம், ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது.

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகாவுக்குத் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.

திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி , திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள். அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள். இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

சேந்தனாருக்கும் , திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும். இன்று அநேக சிவாலயங்களில் நடராஜர் தரிசனம் கண்டு ஆதிரை முதல்வனுக்கு களி செய்து வணங்கி அவரின் திருவடியை அடைவோமாக!.

ஓம் நமசிவாய 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top