திருவதிகை மகிமைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவதிகை மகிமைகள் பற்றிய பதிவுகள் :

1. திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம் மூன்றாம் நந்திவர்மன் (பல்லவ மன்னன்) ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும்.

2. சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தில் எண்ணற்ற திருப்பணிகள் செய்துள்ளனர்.

3. சங்க காலத்தில் வாழ்ந்த கடையெழ வள்ளல்களில் ஒருவனான காரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றாக திருவதிகை இருந்தது.

4. மூன்றாம் ராஜராஜ சோழமன்னன் ஆட்சிக்காலத்தில் உள்நாட்டுப் போரால் திருவதியை பெரிய அழிவை சந்தித்தது. பிறகு வந்த பாண்டிய மன்னர்கள் திருவதியை புதுப்பித்து புத்துணர்ச்சி பெறச் செய்தனர்.

5. திருவதிகைக்கும் கடலூருக்கும் இடையே மிகப்பெரிய கோட்டையை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். 1746ம் ஆண்டு முதல் 1752ம் அண்டு வரை அந்த கோட்டை இருந்தது. ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் அந்த கோட்டைஅழிந்து போனது.

6. சென்னைக்கு அடுத்தப்படியாக திருவதிகையில்தான் ஆங்கிலேயர்கள் தங்கள் தலைமை இடத்தை அமைத்திருந்தனர். புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுப் படைகளை எதிர்க்க திருவதிகைதான் ஆங்கிலேயர்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருவதிகையில் ஆங்கிலேயர்கள் மிகப்பெரிய ஆயுத கிட்டங்கி வைத்திருந்தனர்.

7. 'அதி அரையர்' என்ற சொல்லில் இருந்துதான் அதிகை என்பது தோன்றியது. அதுவே திருவதிகையாக மாறியது. அதி அரையர் என்றால் "வீரம் மிக்க தலைவர்கள்" என்று அர்த்தமாகும். அதாவது வீரம் மிக்க தலைவர்கள் வாழ்ந்த ஊர் என்று இதற்கு அர்த்தமாகும்.

8. திருவதியை தலத்து இறைவனுக்கு வீட்டான முடையார், வீரட்டான முடைய மகாதேவர், வீரட்டான முடைய நாயனார், முதலீஸ்வரர், வீட்டானமுடைய தம்பிரானார், வீரட்டர், வீரட்டத்தீசன், அதிகையரன், அதிகை அண்ணல், அதிகை நாயகர் என்று பல பெயர்கள் உண்டு.

9. திருவதிகை ஆலய நிர்வாகத்துக்காக பல சபைகள் இருந்தன. அவற்றில் திருவுண்ணாழிகை சபை என்ற அன்னதான சபை மிக சிறப்பாக இயங்கியுள்ளது.

10. திருவதிகையில் 9ம் நூற்றாண்டிலேயே "நகரத்தார் சபை" அமைத்து ஆலயத்திப்பணிகளை செய்தனர்.

11. திருவதிகை ஆலயத்துக்கு மன்னர்கள் ஏராளமான தங்க காசுகளை கொடையாக கொடுத்துள்ளனர். வட மாவட்டங்களில் ஏராளமான சிற்றரசர்கள், பணக்காரர்கள் நில தானம் செய்திருந்தனர். அவை அனைத்தும் கால ஓட்டத்தில் காணாமல் போய் விட்டன.

12. இத்தலத்துக்கு திருவதிகை என்ற பெயர் ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. சேர மன்னர்களின் ஒரு பிரிவினர் அல்லது சமண முனிவர் யாராவது பெயரால் இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராயச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

13. திருவாதிரை தினத்தன்று சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து 100 பொற்காசுகள் கொடுத்த நரசிங்க முனையார் என்ற சிற்றரசர் திருவதிகையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

14. அதியமானோடு தொடர்புடைய இந்த பகுதி அதிகனூர் என்று அழைக்கப்பட்டு பிறகு அதிகை என மருவி இருக்கலாம் என்று தமிழறிஞர் ரா.பி.சேதுபிள்ளை கூறியுள்ளார்.

15. மூன்று அரக்கர்களை இங்கு சிவன் எரித்ததால் முதலில் இந்த ஊர் "திரிபுரவதம்" என்றழைக்கப்பட்டது. அது திரிபுரவதிகை என்று மாறி பின்னர் திருவதிகை ஆகி இருக்கிறது.

16. முன்னையிட்ட தீ முப்புரத்திலே

பின்னையிட்ட தீ தென்னி லங்கையில்

அன்னையிட்ட தீ அடி வயிற்றிலே

யானுமிட்ட தீ முள்க மூள்கவே என்று பட்டினத்தார் பாடியதன் மூலம் திரிபுரம் எரித்தது ராமாயண காலத்துக்கும் முற்பட்டது என்று கூறப்படுகிறது.

17. திருவதிகை தலத்தின் புனித தீர்த்தமாக கருதப்படும் கெடில நதியில் நீராடுவோர் கெடுதல் நீங்கி நன்மை அடைவார்கள். இந்த நதிக்கு தென்திசை கங்கை, வாரணாசி ஆறு என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.

18. பரமனின் முடியை கண்டதாக தாழம்பூ உதவியுடன் பொய் சொன்னதால் சாபத்துக்குள்ளான பிரம்மன், திருவதிகையில் நான்முகலிங்கம் நிறுவி வழிபட்டு தோஷத்தை போக்கிக் கொண்டார்.

19. பஞ்ச பாண்டவர்கள் மற்றும் திருமூலர் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பலன் பெற்றுள்ளனர்.

20. தமிழ்நாட்டில் உள்ள வேத காலத்துக்கும் முற்பட்ட சில தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top