01. இத்தலத்தில் ஆண்டுக்கு 12 தடவை சுவாமி வீதியுலா நடக்கிறது.
02. இத்தலத்தில் ஒரு தடவை திருப்பணி நடந்த போது கொடி மரம் அருகே பூமிக்குள் புதைந்து கிடந்த வராகி சிலை கிடைத்தது. அதை அந்த இடத்திலேயே வைத்து வழிபட்டு வருகிறார்கள். தஞ்சை கோவிலிலும் இப்படி ஒரு வராகி சிலை உள்ளது. தமிழ் மன்னவர்கள் போருக்கு புறப்படும் முன்பு வராகியை வழிபட்டு செல்வதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள்.
03. அசுரர்களை அழித்தாலும் இந்த தலம் சாந்தமான தலம் என்று பெயரெடுத்துள்ளது. அது போல இத்தலம் பரிகாரம் தலம் அல்ல, பிரார்த்தனை தலமாகும்.
04. இத்தலத்தில் காரண ஆகம விதிப்படி நித்தியப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
05. இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம்.
06. இத்தலத்தில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கான வாகனங்கள் வெள்ளியால் செய்யப்பட்டவைகளாகும். வெள்ளியால் ஆன ரிஷபம், மயில் ஆகியவற்றை பார்ப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
07. இத்தலத்தில் நீண்ட நாள் வாழ்ந்த திருநாவுக்கரசர் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு திரும்பி வந்தார் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இத்தல பிரகாரத்தில் சமணர் சிலை ஒன்று உள்ளது.
08. இத்தலத்தில் மொத்தம் 16 உற்சவர்கள் உள்ளனர். ஆனால் திரிபுரந்தகர் பிரதான உற்சவராக உள்ளார்.
09. திருவதிகை கோவில் உள்ளே ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கப்பாதை இருக்கிறது. இந்த சுரங்கப்பாதை திருவண்ணாமலை, சிதம்பரம், சீர்காழி தலங்களுக்கு செல்வதாக சொல்கிறார்கள்.
10. காஞ்சீபுரம், திருவண்ணாமலையில் பூமிக்கு கீழே அடிக்கு ஒரு லிங்கம் புதைந்து இருப்பதாக சொல்வார்கள். அதே போன்று திருவதிகை தலத்திலும் அடிக்கு ஒரு லிங்கம் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
11. சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிதம்பர ரகசியம் புகழ் பெற்றிருப்பது போல இந்த தலத்தில் "திரிபுர ரகசியம்" கூறப்படுகிறது. அதாவது ஆனவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் விரட்டுவதை இந்த திரிபுர ரகசியம் உணர்த்துவதாக அர்த்தம். ஆனால் ஏனோ தெரியவில்லை திரிபுர ரகசியம் என்பது கால ஓட்டத்தில் மறைந்து போய் விட்டது.
12. இத்தலத்துக்கு தல விருட்சமான சரக் கொன்றை மரம் பட்சி வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள்.
13. தல விருட்சமான சரக் கொன்றை மரத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை நோய்களும் நீஙகும் என்பது ஐதீகம்.
14. இத்தலத்துக்கு சக்கரகுளம், சூலை நோய் தீர்த்த கிணறு, கெடில நதி மூன்றும் தீர்த்தமாக உள்ளன. இதில் சூலை கிணற்று நீர் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
15. தீர்த்தங்களில் ஒன்றான சக்கர தீர்த்தம் அக்னி மூலையில் இருப்பது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
16. இத்தலத்தில் உள்ள நவக்கிரக அமைப்புகளும் வித்தியாசமானது. ராகுவும், கேதுவும் மாறுபட்ட விதமாக உள்ளனர்.
17. தினமும் மாலை 5.30 மணிக்கு இத்தலத்து சூரியன் மீது சூரிய கதிர்கள் விழுவதை பார்க்கலாம். இதன் மூலம் சூரிய பகவான் தினமும் தன்னைத்தானே இத்தலத்தில் வழிபடுவதாக கூறப்படுகிறது.
18. இங்குள்ள நடராஜர் விரி சடை இல்லாதவர் ஆவார்.
19. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலர் இத்தலத்தில் ஆயிரம் ஆண்டுகள் இருந்ததாக சொல்கிறார்கள்.
20. இத்தலத்தின் பூமிக்கு அடியில் மிகப் பிரமாண்டமான சரக்கொன்றை நாதர் லிங்கம் கிடைத்தது. இந்த லிங்கத்துக்கு மாதந்தோறும் சிவராத்திரி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.