காசியில் அஸ்தியை கரைக்கும் வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து காசியில் அஸ்தியை கரைக்கும் வரலாறு பற்றிய பதிவுகள் :

அரிச்சந்திரன் கோவில் என்றாலே உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் நினைவிற்கு வருவது காசி (பனாரஸ்) என்னும் வாரணாசி நகரம் ஆகும். காரணம் என்னவென்றால் மனிதனாகப் பிறந்த ஒருவரின் சடலத்தை காசியில் கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால் அவர்கள் சொர்க்கலோகம் அடைவார்கள்.

இந்த நம்பிக்கையில் வசதி படைத்தவர்கள் இறந்தவுடன் பூத உடலை காசிக்கு எடுத்துச் சென்று அரிச்சந்திர மயானத்தில் எரியூட்டி அஸ்தியை கங்கையில் கரைக்கும் வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றது.

உடலை காசி கங்கைக் கரையில் எரித்தால் இறந்தவர் சொர்க்கலோகம் செல்வர் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் அஸ்தியை காசிக்கு எடுத்துச் சென்று கங்கையில் கரைக்கும் பழக்கம் சிலரிடம் இருந்து வருகிறது. 

இதற்கு காரணம் ஒரு காலத்தில் இம்மயானத்தை அரிச்சந்திரன் காவல்காத்து விஸ்வநாதரின் நேரடி ஆசியுடன் வரம் பெற்றான் என்பது ஐதீகம்.

இதனால் பூலோகத்தில் உள்ள அனைத்து மயானங்களையும் அரிச்சந்திரன்தான் காவல் காக்கிறார் என்ற நம்பிக்கை பலரிடத்திலும் உள்ளது. 

இதன்படி ஒவ்வொரு மயானத்திலும் அரிச்சந்திரனுக்கு கோவில்கள் அமைத்து அவருக்கு அபிஷேகம் செய்து ஆசீர்வாதத்துடன் அனுமதி பெற்றே மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு ஈமச்சடங்குகள் செய்யப்படுகின்றன.

மனிதர்களாக பிறந்த அனைவராலும் காசிக்குச் சென்று தகனம் செய்ய முடியாது என்பதால் அந்தந்தப்பகுதி மயானத்தில் அரிச்சந்திரனுக்கு கோவில்கள் எழுப்பப்பட்டன. 

இங்கு காசியில் நடப்பது போன்றே பிணம் எரியூட்டப்படும். இருப்பினும் காலமாற்றத்தில் இதுபோன்ற ஆலயங்கள் மயானத்தில் காணப்படுவதில்லை. அரிச்சந்திர வழிபாடும் நடைபெறுவது இல்லை.

ஆனால் சம்பிரதாயமாக இன்னமும் இதற்கான காரியங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அதாவது ஒரு கருங்கல் அருகே சடலத்தை வைத்து அதனை அரிச்சந்திரனாகப் பாவித்து விபூதி, சந்தனம் திலகமிடப்படும். பின்பு மாலை சாற்றி ஆராதனை நடைபெறும். தொடர்ந்து மயான ஊழியர், ஒருவர் இறந்தால் அவர் எங்கு செல்வார், ஆன்மாவின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறுவார்.

ஒரு மனிதன் இறந்த பிறகு 13, 14, 15, 16 ம் நாளில் அவரது ஆன்மா இறைவனை அடைய வேண்டும். தனக்கு முன்பு இறந்த 7 தலைமுறையினருடன் இணைந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு ஈமக்காரியங்கள் செய்யப்படுகின்றன.

இருப்பினும் இன்றைக்கு மயானங்கள் பல்வேறு வகையில் மேம்பட்டு விட்டன. மின் மயானங்களாக அரைமணி நேரத்தில் உடலை எரித்துச் சாம்பலைத் தந்துவிடுகின்றன. 

இதனால் மேற்கண்ட பல்வேறு வழிபாட்டு முறைகள் மறைந்து வருகின்றன. இருப்பினும் பல மாநிலங்களிலும், பல்வேறு கிராமங்களிலும் இதுபோன்ற வழிபாடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top