திருஞானசம்பந்தர்:
அவதாரத் தலம் சீ(ர்)காழி, கோத்திரம்: கௌணியம் (கௌண்டின்யம்). மூன்றாம் அகவையில் சிவபரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்று, சீகாழியிலுள்ள திருத்தோணிபுர ஆலயத் திருக்குளத்தருகில் உமையன்னையின் திருக்கரங்களால் சிவஞானப் பாலினை அருந்தியருளிய ஒப்புவமையில்லா குருநாதர்.
காலம் ஏழாம் நூற்றாண்டு, அவதாரக் காலம் பதினாறு ஆண்டுகள். ‘பரமேசுவரியையும், பரமேசுவரரையும்’ தாய் தந்தையராகப் போற்றி வழிபடும் உத்தமமான சத்புத்திர மார்கத்தின் வழியினில் நின்றொழுகி அதனை நமக்கும் காட்டுவித்தருளிய புண்ணிய மூர்த்தி. திருநாவுக்கரசு சுவாமிகளின் சமகாலத்து அருளாளர். முதல் மூன்று சைவத் திருமுறைகளின் ஆசிரியர்.
ஞானசம்பந்தர் பாடியருளிய எண்ணிறந்த தேவாரத் திருப்பதிகங்களுள் நமக்கின்று கிடைத்திருப்பவை (பின்னாளில் கிடைக்கப் பெற்ற திருவிடைவாய், திருக்கிளியன்னவூர் ஆகிய தலங்களுக்கான இரு திருப்பதிகங்களையும் சேர்த்து) 385 திருப்பதிகங்கள் (4169 திருப்பாடல்கள்).
சிவசோதியில் கலந்து சிவமுத்தி பெற்றுய்ந்தது ‘சிதம்பரத்துக்கும் சீர்காழித் தலத்திற்கும்’ நடுவினில் அமையப் பெற்றுள்ள்ள (ஆச்சாள்புரம் என்று தற்பொழுது குறிக்கப் பெறும்) ‘திருநல்லூர் பெருமணம்’ எனும் திருத்தலத்தில். திருநட்சத்திரம் வைகாசி மூலம்.
திருநாவுக்கரசர் (அப்பர்):
அவதாரத் தலம் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டிக்கு அருகில் அமைந்துள்ள திருவாமூர் (திருவாரூர் மாவட்டத்தில் திருவாய்மூர் எனும் தேவாரப் பாடல் பெற்ற தலமொன்று அமைந்துள்ளது எனினும் அப்பரடிகளின் அவதாரத் தலத்திற்கும் அதற்கும் தொடர்பேதுமில்லை).
சிவபரம்பொருளால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவதிகை. சிவமுத்தி பெற்றுய்ந்த தலம் திருப்புகலூர். அவதாரக் காலம் எண்பத்தோரு ஆண்டுகள். காலம் ஏழாம் நூற்றாண்டு, ஞான சம்பந்த மூர்த்தியின் சமகாலத்தவர்.
திருநட்சத்திரம் சித்திரை சதயம். பன்னிரு திருமுறைகளுள் 4, 5, 6 திருமுறைகளின் ஆசிரியர். சுவாமிகள் அருளிச் செய்தவைகளுள் நமக்கின்று கிடைக்கப் பெற்றவை 322 திருப்பதிகங்கள் (3065 திருப்பாடல்கள்). இயற்பெயர் மருள் நீக்கியார்.
முக்கண் முதல்வரால் சூட்டப் பெற்ற திருப்பெயர் திருநாவுக்கரசர். ஞானசம்பந்தப் பெருமான் சூட்டியருளிய திருப்பெயர் அப்பர். சிவபெருமானைத் தலைவராகவும் தன்னைத் தொண்டராகவும் கொண்டு வழிபடும் உத்தமமான தாச மார்கத்தின் வழி நின்ற அருளாளர்.
சுந்தரர்:
அவதாரத் தலம் திருநாவலூர். தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருவெண்ணைநல்லூர். முத்தித் தலம் கேரளத்திலுள்ள திருஅஞ்சைக்களம். 16ஆம் அகவையில் தடுத்தாட்கொள்ளப் பெற்ற சுந்தரனாரின் அவதாரக் காலம் பதினெட்டு ஆண்டுகள். காலம் ஏழாம் நூற்றாண்டின் இறுதியும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கமும்.
ஏழாம் திருமுறையின் ஆசிரியர், பாடியருளிய திருப்பதிகங்கள் 100, தம்பிரான் தோழரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் 84. திருநட்சத்திரம் ஆடி சுவாதி. பரம்பொருளான இறையவரைத் தோழமை மீதூரப் பக்தி புரிந்து வழிபடும் ‘சக மார்கத்தின்’ வழி நின்ற அருளாளர்.
மாணிக்கவாசகர்:
அவதாரத் தலம் திருவாதவூர். உமையொரு பாகனால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற தலம் திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்). முக்தித் தலம் சிதம்பரம். அவதாரக் காலம் முப்பத்திரண்டு ஆண்டுகள்.
காலம் மூன்றாம் நூற்றாண்டு. எட்டாம் திருமுறை ஆசிரியர் (திருவாசகம், திருக்கோவையார்) . திருநட்சத்திரம் ஆனி மகம். இயற்பெயர் வாதவூரர் (இது காரணப் பெயர் என்று கருதுவோரும் உண்டு). இறைவனின் திருவாக்கினால் சூட்டப் பெற்ற திருப்பெயர் ‘மாணிக்கவாசகர்’.