கல்வியில் மேன்மை அருளும் திருவந்திபுரம் ஹயக்ரீவர்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கல்வியில் மேன்மை அருளும் திருவந்திபுரம் ஹயக்ரீவர் பற்றிய பதிவுகள் :

‘கல்விக் கடவுள்’ சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரைத் தரிசித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெருகும், குடும்பக் கஷ்டம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. 

அந்த வேண்டுதல்களோடு தங்கள் குழந்தைகளுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார், திருவந்திபுரம் ஹயக்ரீவர்!

நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றாகப் போற்றப்படுகிறது, கடலூர் மாவட்டம், திருவந்திபுரம். கடலூரிலிருந்து மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், பண்ருட்டியிலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இத்தலத்தில், ஔஷதகிரி மூலிகை மலையின் உச்சியில் அமைந்துள்ளது ‘ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர்’ திருக்கோயில். ‘கல்விக் கடவுள்’ என்று சொல்லப்படும் ஹயக்ரீவருக்கு தமிழகத்திலேயே முதன் முதலில் கோயில் அமையப்பெற்ற தலம் இது என்பது இதன் தனிச்சிறப்பு.

பிரளய காலத்தில் – உலகம் அழியும் சமயம், பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள், வேதங்களைப் பெண் குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதலபாதாளத்தில் ஒளித்து வைக்க, அதனை மீட்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் குதிரைமுக (பரிமுகம்) பெருமாள் (ஹயக்ரீவர்). வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார் ஸ்ரீலஷ்மி ஹயக்ரீவர்.

இமயமலையிலிருந்து சஞ்சீவ பர்வத மலையை பெயர்த்துக்கொண்டு இலங்கைக்குப் போனார் ஆஞ்சநேயர். அப்போது, அந்த மலையிலிருந்து கீழே விழுந்த ஒரு பகுதிதான் இந்த ஔஷதகிரி மலை. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தூப்பில் கிராமத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகன் என்பவர், தனக்கு ஞானம் வேண்டி இந்த ஔஷதகிரி மலையின் மேல் அமர்ந்து கருட பகவானை நோக்கி தவமிருந்தார். அப்போது அவருக்கு அருள்பாலித்த கருட பகவான், ஞானத்துக்கு அதிபதியான ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவரை வேண்டி பூஜிக்கச் சொன்னார். அதன்படியே பூஜித்த வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவரும் அருள்பாலித்தார். அதன் பிறகு ‘நவரத்ன மாலை’, ‘மும்மணிக் கோவை’ போன்ற பல தமிழ் நூல்களை எழுதினார் வேதாந்த தேசிகன். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்தான் இந்த ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் என்கிறது புராணம்.

“குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமா ஏதாவது தோஷம் இருந்தாலோ, அல்லது கல்வியறிவு பெருக வேண்டியோ, சந்நிதிக்கு வந்து பேனா, நோட்டு, தேன், ஏலக்காய் மாலை வாங்கி ஹயக்ரீவருக்கு பூஜை செய்யணும். பூஜை முடிஞ்சதும் அந்த தேனை குழந்தைகள் நாக்கில் கொஞ்சம் தடவிவிட்டு, ஏலக்காய் ஒண்ணை வாயில் போட்டுவிட்டா போதும்… உடனடியா தோஷமெல்லாம் நிவர்த்தியாகிவிடும். கல்வி அறிவு வளரும்!’’ என்ற கோயிலின் அர்ச்சகர் சேஷா பட்டாச்சார்யார், இத்தலம் பிணி தீர்க்கும் மகத்துவத்தையும் கூறினார்.

‘‘இங்க கொடுக்கிற லக்ஷ்மி தீர்த்தம், தெய்விகமானது. வேதாந்த தேசிகர் ஆராதனை செய்த தீர்த்தம் அது. அந்த தீர்த்தத்தைப் பருகினா உடலில் உள்ள சகல பிணிகளும் பறந்துடும். அதாவது, குதிரைக்கு எப்போதும் வாயிலிருந்து நீர் வடிஞ்சுட்டே இருக்கும். குதிரை ரூபத்தில் இருக்கும் ஹயக்ரீவருக்கும் அப்படித்தான். அப்போது அசுரர்கள் அந்த நீரைப் பருகித்தான் தங்களோட பாவங்களைப் போக்கிக்கிட்டாங்க. இங்க கொடுக்கப்படும் லக்ஷ்மி தீர்த்தமும் அதுபோலத்தான். மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு அதை ஹயக்ரீவருக்கு ஆராதனை செஞ்சு தீர்த்தமா கொடுக்கப்படுது!’’ என்றார் பட்டாச்சார்யார்.

108 திவ்ய தேசங்களில் திருவந்திபுரமும் ஒன்று. வைகானஸ ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம் என்பதால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். இங்கு தினந்தோறும் காலை 8.30-ல் இருந்து 11.30 வரையிலும், மாலை 4.30-ல் இருந்து 7.30 வரையிலும் நடைதிறக்கப்பட்டிருக்கும். கல்வியருள் பெற ஹயக்ரீவர் தரிசனம் பெறுங்கள்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top