மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து கையில் ருத்ராட்ச மாலையுடன் சிவ பூஜையைத் துவங்க வேண்டும்.
ஐந்தெழுத்து மந்திரமான ஓம் நமசிவாய என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். சிவபெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.
பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ரிகேசா, விருபாக்ஷ, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும்.
கோவில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளை சொல்லியும், சிவன் கோவிலுக்கு சென்று இரவு நேரத்தை கழித்தும் சிவனை வழிபடலாம். சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கான பொருட்களை வாங்கி கொடுத்து பூஜையில் கலந்து கொள்ளலாம்.
மஹாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் :
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.
லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும்.
உணவு நிவேதனம் செய்தல், நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ அல்லது கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
சிவனுக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு :
வில்வத்தில், மகஹா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.
பூஜைக்குப் பயன்படுத்துகின்ற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம்.
தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மஹா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.