ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம்.
ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.
ஓம் என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம். ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும். எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும். உலகத்தோடு ஒட்டி வாழலாம், வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று. மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும். மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.
எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும், குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும். வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.
வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும். பின் ஒம் ஓம் ஒம் என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.