கந்தனின் சிறப்பான விரத நாட்கள் சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம் மற்றும் கந்தசஷ்டி விரதமாகும். இந்த மூன்று விரதங்களில் கந்தசஷ்டி விரதமே மிகச்சிறந்த விரதமாகும். இந்த கந்தசஷ்டி விரதத்தில் முருகனை வழிபடுதல் சிறந்தது.
திருப்பரங்குன்றம் :
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவது படைவீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். அசுரனை வென்ற முருகன் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார்.
திருச்செந்தூர் :
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இத்தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும், பின்னும் தங்கிய இடமாகும்.
பழனி :
பழனி, முருகனின் மூன்றாம் படைவீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகன் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
சுவாமிமலை :
சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடாகும். முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
திருத்தணி :
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடாகும். முருகன் வேடர்குலத்தில் பிறந்த வள்ளியைக் காதல் மணம் புரிந்துகொண்ட இடமே திருத்தணி.
பழமுதிர்சோலை :
பழமுதிர்சோலை, முருகனின் ஆறாம் படைவீடாகும். இதற்கு திருமலிருஞ்சோலை, குலமலை, கொற்றை மலை என்ற பெயர்களும் உண்டு. ஒளவையாருக்கு நாவல்பழத்தை உதிர்த்து கொடுத்ததால் பழமுதிர்சோலை என்று பெயர் பெற்றது.