மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்தது ஏகாதசி திதியாகும்.
பெருமாளுக்கு மிகவும் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஏகாதசியை ஒவ்வொரு பெயருடன் அழைக்கப்படுகிறது.
இது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது என்றால் மிகையல்ல. இந்த ஏகாதசியில் விரதம் இருந்து, விஷ்ணுவை வழிபட கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள், நரக வேதனை அவர்களை வாட்டாது, நோய், பசிப்பிணி நீங்கும். நிம்மதி நிலைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல் இந்த விரதத்தை கடைபிடித்தாலும் பலன் கிடைக்கும்.
சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்து சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.
உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.
நம்மால் இயன்ற அளவு உபவாசம் இருந்து மாலை வேளையில் ஆலயங்களுக்கு சென்று விஷ்ணுவை தொழுது, விளக்கேற்றி வழிபட பாவங்கள் அகலும்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த ஏகாதசி விரதத்தை நாமும் கடைபிடித்து வாழ்வில் வளம் பெறலாம்.