சுமார் 400 ஆண்டுகளாக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும், அனைத்து மக்களின் ஒற்றுமைக்கும், அன்பிற்கும் முன்னுதாரணமாக பள்ளியாடி, பழைய பள்ளி அப்பாத்திருத்தலம் திகழ்ந்து வருகிறது.
முன்பு பழைய பள்ளி திருத்தலம் இருக்கும் இடம் அடர்ந்த காடாகவும், அங்கு புலிகள் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இவ்விடம் புலிக்குட்டிவிளை என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலகட்டத்தில் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வைசூரி, காலரா போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இப்பகுதியில் வாழ்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்றினைந்து அங்குள்ள பெரிய புளிய மரத்தின் நிழலில் விளக்கேற்றி இறைவனை ஒளி வடிவில் வழிபட்டனர்.
காலப்போக்கில் இங்கு வந்து வழிபடும் மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறுவதால், தொடர்ந்து மக்கள் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பக்தர்கள் திருத்தலத்திற்கு வாழைக்குலைகள், மலர் மாலை, எண்ணெய், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.
இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் 500க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வதுடன், அன்னதானமும் நடக்கிறது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
திருத்தலத்தின் அருகில் சுமார் 400 ஆண்டுகள் பழக்கமுடைய பெரிய புளிமரமும், பழமையான கிணறும் அமைந்துள்ளது. எந்த கோடையிலும் கிணற்று நீர் வற்றாமல் உள்ளது. புளியமரத்தின் வேர்கள் மண்ணின் வெளிப்பகுதியில் தெரிவதில்லை.
திருத்தலத்தில் சர்வமத பிரார்த்தனையும், சமபந்தி விருந்தும் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. இந்த ஆண்டு இன்று (மார்ச் 18, 2024) நடைபெறுகின்றது.