700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் பற்றிய பதிவுகள் :

இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில், குலசேகரம் அருகே இட்டகவேலி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. அம்மனின் முடியை வைத்து வழிபடுவதால் இவ்வூர் முடிப்பரை எனப்படுகிறது.

அண்மைக்காலம் வரை ஆலயம் என்னும் அமைப்பு இல்லாமல் வழிபாட்டு தலமாக முடி வைத்திருக்கும் கட்டிடமே இருந்தது. இப்போது ஆலயமாக மாற்றமடைந்துள்ளது.

இந்த நீலகேசி அம்மன் கோவில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இட்டகவேலியின் தெய்வம் நீலகேசி அம்மன். நீலகேசி என்பது தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று. 

அக்கதையில் நீலகேசி என குறிப்பிடப்படும் தெய்வம் கணவனால் கொல்லப்பட்டு பேயான ஒரு பெண். சமண முனிவரால் மனம் திருந்தி அவர் ஆணைக்கேற்ப சமணக்கருத்துக்களை மறுதரப்புகளுடன் விவாதித்து நிறுவியவள். 

அந்தக் கதையின் இன்னொரு வடிவம் கள்ளியங்காட்டு நீலி என்ற பெயரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழங்குகிறது. பழையனூர் நீலி என்ற பெயரிலும் அக்கதை தமிழகத்தில் வழங்குகிறது.

நீலகேசி என்னும் தெய்வம் சமண மதத்தின் வருகைக்கு முன்னரே தமிழ்நிலத்தில் வழிபடப்பட்ட பெண்தெய்வமாக இருந்துள்ளது. சமணம் அதை உள்ளிழுத்துக் கொண்டிருக்கலாம். அல்லது, சமணத்தெய்வமான நீலகேசி பின்னர் நாட்டார் தெய்வமாக உருமாற்றம் அடைந்து உள்ளூர் தொன்மங்கள் ஏற்றப்பட்டிருக்கவும் கூடும்.

வரலாறு :

பனங்கோட்டு நாயர் குடியைச் சேர்ந்த ஒரு பெண் கணவன் இறந்தபின் தன் தமையனுடன் வாழ்ந்தாள். அவள் மகள் பெயர் நீலகேசி. அவளை தாய்மாமனின் மனைவி கொடுமை செய்தாள். நீலகேசியை அடுப்பெரிக்க தீ வாங்கிவரும்படிச் சொல்லி ஓட்டைக் கொட்டாங்கச்சியைக் கொடுத்து அண்டையிலிருந்த பாண்டிநாட்டு கணியன் வீட்டுக்கு அனுப்பினாள். 

ஓட்டைவழியாகச் தீ சுட்டதனால் அவள் விரலை வாயிலிட்டு சப்பினாள். கணியன் வீட்டில் எதையோ வாங்கி தின்றுவிட்டாள் என பழிசுமத்திய மாமி மாமனிடம் கோள் சொல்லவே மாமன் அவளை கடுமையாக தண்டித்தான். நீலகேசி ஓடிப்போய் ஒரு புதரில் ஒளிந்துகொண்டாள். கணியர் அவளுக்கு உணவு அளித்தார். 

மேலும் நீலகேசியிடம் பச்சை விறகுகள் மற்றும் ஈற விறகுகளை கொடுத்து சமைக்க செல்லுதல் போன்ற பல கொடுமைகளை நிகழ்த்தி வந்தாள்.

ஒருநாள் நீலகேசியின் தாய் அவளை தேடிவந்து திரும்பக் கூட்டிச்செல்லும்போது நீலகேசி அங்கிருந்த ஒரு குளத்தில் பாய்ந்து மூழ்கி மறைந்தாள். அவள் அன்னையும் உடன் பாய்ந்தாள். அதை அறிந்து வந்த நீலகேசியின் பாட்டியும் நீரில் பாய்ந்து மடிந்தாள்.

அவர்களின் உடல் கிடைக்கவில்லை. முடிக்கற்றைகள் மட்டுமே கிடைத்தன. கணியனின் ஆணைப்படி அந்த முடிக்கற்றைகளை தெய்வமாக கோயிலில் வைத்து அவர்களின் குடும்பம் வழிபட்டது. மூன்று முடிகளுடன் வெள்ளிப்பிள்ளை என்னும் சிறிய சிலையும் அங்கே நிறுவப்பட்டது.

பனங்கோட்டு நாயர்கள் என்னும் குடும்பக் குழுவுக்கு உரிமைப்பட்ட குடும்பதெய்வ ஆலயமாக இருந்தது இட்டகவேலி நீலகேசி அம்மன் ஆலயம். கணியர் சமயத்தவர் அதில் வழிபாட்டுரிமை, பூசையுரிமை கொண்டவர்கள். பின்னர் அனைவரும் வழிபடும் கோயிலாகியது.

நீலகேசி அம்மன் என்னும் பெயரோ, அப்பெயர் கொண்ட ஆலயமோ முன்னரே இருந்திருக்கலாம். ஒரு குடும்பதெய்வத்தின் கதை அதனுடன் இணைந்து இன்றைய ஆலயக்கதை உருவாகியிருக்கிறது.

கோயில் அமைப்பு

வரிசையாக அமைந்த மூன்று கருவறைகளில் நடுவில் நீலகேசி அம்மன் கருவறை, மேற்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய தாயின் கருவறை, கிழக்குப்பக்கம் நீலகேசி அம்மனுடைய பாட்டியின் கருவறை ஆகியவை உள்ளன. தலைமுடியை விரித்து வைத்தது போன்ற பீடங்களின் மேல் அம்மனின் நகைகளும் மணிமுடியும் வைக்கப்பட்டுள்ளது. 

நெடுங்காலம் அந்த தலைமுடி வடிவ பீடம் மட்டுமே இருந்தது. அது பனையோலையாலான பெட்டிக்குள் வைத்து வழிபடப்பட்டது. முன்பு ஓலைக்கூரை கொண்ட சிறிய குடிலில் இருந்த தெய்வங்கள் பின்னர் ஓட்டுக்கட்டிடத்தில் அமைந்தன. இப்போதுள்ள கோயில் பின்னர் கட்டப்பட்டது.

அன்றாட வழிபாடு

முப்பதாண்டுகளுக்கு முன்புவரை நீலகேசி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் மதியவேளையில் பூசை செய்யப்பட்டது. இப்போது அன்றாட பூசை நடைபெறுகிறது. பச்சரிசி, பழம், அவல்பொரி, மஞ்சள்பொடி, இளநீர், கமுகம்பூ ஆகியவை படையலிடப்படுகிறது.

விழா

நீலகேசியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்து நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். விழா தொடங்கும் முன்பு நாயர்வழிக் குடும்பத்தினரில் மூத்த ஒருவருக்கு காப்பு கட்டுவர். அதன் பின்பு வடக்கன்குளம், தச்சநல்லூர், ஶ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இருந்து வரும் கணியர் இனப் பூசாரிகளை, பூதப்பாண்டி பகுதிக்கு மேளதாளத்துடன் சென்று எதிர்கொண்டு வரவேற்பார்கள். 

கணியப் பூசாரிகள் அம்மனை வழிபட்ட பிறகு வெள்ளிப் பிள்ளை, மற்றும் மூன்று முடி பீடங்களை புதிய கோயிலிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பிறகு புதிய கோயில் பூட்டப்பட்டுவிடும். பீடங்களை உற்சவம் நடைபெறும் இடத்துக்கு அதாவது முடிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகில் உள்ள கோயிலில் வைத்து பூசை செய்வர். அதன்பின்பு தினமும் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.

திருவிழாவின் ஏழாம்நாள் நடைபெறும் தூக்க நேர்ச்சைச் சடங்குகோயிலின் சிறப்பான வழிபாட்டு முறையாக உள்ளது. எட்டாம் நாள் விளக்குப்பூசை நடைபெறும். ஒன்பதாம் நாள் அன்று நீலகேசி, அத்தையை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும் கமுகுப் பிடுங்குதல் சடங்கு நடைபெறும். 

ஒரு கமுகு மரத்துக்குப் பூசை செய்து, வேருடன் பிடுங்கி, மரத்தின் ஒரு பகுதியை நீலகேசியாகவும் மற்றொரு பகுதியை மாமியாகவும் கருதி இருபக்கமும் ஆட்கள் நின்று இழுப்பார்கள். இறுதியில் நீலகேசி வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

அதன்பின்பு கமுகமரத்தை ஓரிடத்தில் நட்டு வைப்பர். பின்னர் கமுகமரத்தின் உச்சியில் தீபம் ஏற்றி வைப்பர். பத்தாம் நாள் காளிக்கும் தாருகனுக்கும் நடந்த தாருதயுத்தம் நிகழ்ச்சியும் நடைபெறும். இதில் கணியர் இன மக்களில் ஒருவர் முடிவடிவமுடைய நீலகேசி அம்மன் பீடத்தைத் தலையில் எடுப்பார். மற்றொருவர் தாருகன் வேடம் பூணுவார். இருவரும் சண்டை இடுவதுபோல பாவனை செய்வர். இறுதியில் காளி தாருகனை வெற்றி கொள்வதாகச் சடங்கு நிறைவுறும். 

விழா முடிந்த பிறகு பீடங்கள் எடுத்துவரப்பட்டு மீண்டும் புதிய கோயிலில் வைக்கப்படும். அத்துடன் விழா நிறைவுறும். விழா முடிந்த எட்டாம் நாள் மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.

தூக்குநேர்ச்சை

தமிழகத்தில் குமரிமாவட்டத்திலும், கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் பத்ரகாளி ஆலயங்களில் நிகழும் ஒருவகை வழிபாடு தூக்கு நேர்ச்சை எனப்படுகிறது. நெம்புகோல்வடிவம் கொண்ட ஒரு அமைப்பில் கயிற்றில் தொங்கும் பூசாரியிடம் சிறுகுழந்தைகளை அளித்து ஆலயத்தைச் சுற்றிவந்து திரும்பப் பெறுதல் இச்சடங்கு. குழந்தைகளை தீயசக்திகளிடமிருந்து காப்பாற்ற இது செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top