திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில், வரலாற்று சிறப்பும், இதிகாசம் மற்றும் புராண சிறப்பும் கொண்ட தலமாகும்.
அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோடு பௌர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
சித்ரா பௌர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர்.
மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம். கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்.
கிரிவலம் செல்லும் பக்தர்கள், ஆறுமுக சுவாமி கோவிலில் துவங்கி, பெரிய ஓங்காளியம்மன் கோவில், நாமக்கல் சாலை, மலைசுத்தி சாலை, வாலரைகேட், பரமத்தி - வேலூர் சாலை, சின்ன ஓங்காளியம்மன் கோவில், தெற்கு ரதவீதி வழியாக மீண்டும் ஆறுமுக சுவாமி கோவிலை வந்தடைவர்.
நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் செல்வார்கள்.
திருச்செங்கோடு மலை ஓங்கார வடிவானது. ஓங்காரம் என்பது சிவ வடிவமானது. எனவே இந்த மலை சிவவடிவமானது. சிவனை வலம் வந்து பெறும் பலன் அத்தனையும் இந்த மலையை வலம் வருதலால் கிட்டும்.
பௌர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும், சிவராத்திரியிலும், பிறந்த (ஜென்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோடு மலையை கிரிவலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும். இந்த பௌர்ணமியில் குடும்பத்துடன் கிரிவலம் சென்று கடவுளின் அருளைப் பெற்றிடுங்கள்.
பௌர்ணமி கிரிவலம் :
கார்த்திகை மாத பௌர்ணமி மிகச் சிறப்பு வாய்ந்தது. சிறப்பு வாய்ந்த கார்த்திகை பௌர்ணமி நாளான இன்று கிரிவலம் மேற்கொள்வது அளவற்ற பலன்களை தரக்கூடியது.
கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை :
மலையை சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும்.
ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும்.
மலையை சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும்.
மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு.
கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சமநிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது நல்ல பலனை தரும்.
மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு.
தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு.
கிரிவலம் தொடங்கும்போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு.