தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு பற்றிய பதிவுகள் :

பயத்தை போக்கி, துன்பங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வமாக பைரவர் விளங்குகிறார். ஆபத்துக்கள், பகை நம்மை நெருங்க விடாமல் காக்கும் பைரவரை வழிபட வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, பரணி நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமையன்று வரும் ராகு காலம் ஆகியன உகந்த காலங்களாகும்.

அஷ்டமி திதியானது சுப காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய திதியாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இது வழிபாட்டிற்குரிய திதியாக குறிப்பிடப்படுகிறது. அஷ்டமி வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பைரவரை நினைத்து வணங்கினாலே கஷ்டங்கள் அனைத்தும் தூள் தூளாகி விடும் என்பது நம்பிக்கை.

அஷ்டமியில் ஒரே பைரவரை வழிபட்டாலும் வளர்பிறை அஷ்டமி - தேய்பிறை அஷ்டமி இரண்டும் வேறு வேறு பலன்களை தரக் கூடியன. எந்த தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும் கஷ்டங்கள் தீர வேண்டும் என பிரார்த்தனை வைத்து வழிபாடு அல்லது விரதம் இருப்பவர்கள் தேய்பிறை திதியில் துவங்கி, வளர்பிறை திதியில் முடிக்க வேண்டும். கஷ்டங்கள் தீர வேண்டும் என வழிபாடு செய்பவர்கள் தேய்பிறையிலும், வேண்டிய வரங்களை பெற வேண்டும் என நினைப்பவர்கள் வளர்பிறையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

வளர்பிறை - தேய்பிறை அஷ்டமி பலன்கள் :

வளர்பிறை அஷ்டமியில் பைரவரிடம் நமக்கு தேவையானதை கொடுத்து, அருள் செய்ய வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டும். இதனால் நமக்கு தேவையானவைகள் வளர்ந்து கொண்டே போகும் என்பது நம்பிக்கை. வளர்பிறை அஷ்டமியன்று நமது துன்பங்களை தீர்க்குமாறு வழிபட கூடாது. தேய்பிறை அஷ்டமியில் துன்பங்கள் தீர வழிபட்டால் மட்டுமே நமது கர்ம வினைகள் தேய்ந்து, துன்பங்கள் நீங்கி, நலம் பெருகும் என்பது நம்பிக்கை.

வளர்பிறை அஷ்டமி வழிபாடு :

வளர்பிறை அஷ்டமி வழிபாட்டை செய்யும் போது ராகு காலத்தில் தான் செய்ய வேண்டும் என்பது கிடையாது. அன்றைய நாளில் நமக்கு வசதியான நேரத்தில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஆனால் வளர்பிறை அஷ்டமி திதியில் வழிபடுபவர்கள் தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யக் கூடாது. வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவரை மாலை நேரத்தில் வில்வம், வாசனை மலர்கள் கொண்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வறுமை நீங்கும்.

வளர்பிறை அஷ்டமியில் சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும். இந்த திதியில் பைரவரை வழிபட்டால் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகள் நீங்கும். தினமும் பைரவரை வழிபட்டு வருபவர்களுக்கு நீண்ட நாள் வாராக்கடன்கள் தேடி வரும். லட்சுமி கடாட்சம் பெருகும்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு :

கஷ்டங்கள், துன்பங்கள் தீர வேண்டும் என பைரவரை வழிபாடு செய்பவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் வழிபட வேண்டும். தேய்பிறை காலத்தில் வருவதை பைரவாஷ்டமி என குறிப்பிடுகிறோம். 

தேய்பிறை அஷ்டமியில் உச்சி வேளையில் பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்தி, நெய் தீபம் ஏற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால் கிரக தோஷங்கள், கடன் தொல்லை ஆகியன நீங்கும். தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரை மனதால் நினைத்து வணங்கினாலே நோய்கள் தீரும். துன்பங்கள் விலகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top