விநாயகப் பெருமான் எளிமையான தெய்வம் என்பதால், ஓம் கணேசாய நமஹ என எளிமையான மந்திரத்தை சொல்லி வழிபட்டாலே ஓடி வந்து அருள் செய்வார்.
தடைகள், பயங்கள், பிரச்சனைகள் ஆகிய அனைத்தும் தவிடு பொடியாக்கி, விருப்பங்களை நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றல் படைத்தது சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம் :
சதுர்த்தி என்றாலே அது விநாயகருக்குரிய திதியாகும். முழு முதற்கடவுளான விநாயகப் பெருமான் சங்கடங்களை நீக்கி, சந்தோஷத்தையும் வெற்றியையும் அருளக் கூடியவர்.
இவருக்குரிய சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவதால் அவரின் பரிபூரணமான அருளை பெற முடியும்.
மாதத்திற்கு இரண்டு முறை வளர்த்தி திதி வருவதுண்டு. இதில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.
சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் அறுக்கக் கூடியது. சங்கடங்களை அறுத்து நன்மைகளை வழங்கக் கூடிய சதுர்த்தி என்பது இதற்கு பொருள்.
வாழ்வில் இருக்கும் எப்படிப்பட்ட சங்கடம், கஷ்டம், துன்பம், தடைகள், பிரச்சனைகள் தீர வேண்டும் என நினைப்பவர்கள் சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடலாம்.
சித்திரை சங்கடஹர சதுர்த்தி :
ஒவ்வொரு மாதத்திலும் வரும் சதுர்த்திக்கு ஒவ்வொரு சிறப்பு இருப்பது போல் தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு பணக்கஷ்டங்கள், குடும்ப கஷ்டங்களை தீர்க்கும் ஆற்றல் உண்டு.
அதுவும் இந்த ஆண்டு சித்திரை மாத சங்கடஹ சதுர்த்தி ஏப்ரல் 27ம் தேதி சனிக்கிழமை வருகிறது.
சனி தோஷம் உள்ளிட்ட கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டு, பல விதமான சங்கடங்களை அனுபவிப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்தால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் படிப்படியாக விலகும்.