திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து 27 கி.மீ. ஆரணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.
நவ நரசிம்மர்கள் அருள்புரியும் தலம் என்பதால் இது, ‘தட்சிண அகோபிலம்’ என்றும் போற்றப்படுகிறது. இக்கோயிலில் திருமகளும் கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தருவது விசேஷம். ஆவணி நாராயணபுரம் என்பதே ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது.
ஆபத்து என்றால் க்ஷண நேரத்தில் தோன்றி காப்பவர் நரசிம்ம பெருமாள். நாடியவருக்கு நலம் அருளும் தெய்வமான இவரை சரண் அடைந்தவர்களுக்கு பயம் என்பதே கிடையாது என்பதுதான் நரசிம்மர் வழிபாட்டின் சிறப்பு.
இக்கோயில் மலையடிவாரத்தின் அலங்கார வளைவில் சிம்ம முகத்துடன் காட்சி தரும் திருமகளை மடியில் அமர்த்திய கோலத்தில் சுதை சிற்பமாக நரசிம்மர் காட்சி தருகிறார். இங்கிருந்து மலைக்குச் செல்ல 30 படிகள் அமைந்துள்ளன.
இந்த அழகிய கோயில் இரண்டு அடுக்குகளில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. மலையின் இடுக்கில் அமைந்திருக்கும் குகை போன்ற கருவறையில்தான் நரசிம்மர் தமது மடியில் சிம்ம முகத்துடன் கூடிய தாயாரை அமர்த்தியபடி காட்சி தருகிறார்.
சன்னிதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகத்தோடு காட்சி தருவது விசேஷம். இங்கு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை இறைவனிடமிருந்து தாயார் சிங்க முகம் பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது.
கோயிலின் உள்ளே சிறிய கருடன் சன்னிதியும், வெளியே ஆஞ்சனேயர் சன்னிதியும் உள்ளன. பிருகு மகரிஷியின் பிரார்த்தனையின்படி 5 திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் கோலங்களில் பெருமாள் இங்கு அவருக்குக் காட்சி அளித்த அற்புதமான தலம் இது.
பிருகு மகரிஷிக்காக லட்சுமி தேவி சமேத நரசிம்மராகவும், ரங்கநாயகி சமேத ரங்கநாதராகவும், அமிர்தவல்லி தாயார் சமேத யோக நரசிம்மராகவும், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாளாகவும், அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாளாகவும் ஐந்து அவதாரங்களையும் காட்டியருளினார்.
இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் அகோபில நவ நரசிம்மர், சோளிங்கர் நரசிம்மர், திருப்பதி பாலாஜி, காஞ்சி வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆகிய ஐந்து திவ்யதேச ஸ்வாமிகளை தரிசனம் செய்வது சிறப்பாகும்.
லட்சுமி நரசிம்மர் கர்ப்பகிரகத்தில் 3 நரசிம்மரும், தாயார் சன்னிதி அருகே 5 நரசிம்மரும், மலை உச்சியில் உள்ள சன்னிதியில் யோக நரசிம்மர் என நவநரசிம்மர்கள் இக்கோயிலில் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஆஞ்சனேயர் வில்லேந்திய வடிவில் வீர ஆஞ்சனேயராகக் காட்சி தருகிறார்.
பக்தர்கள் திருமணத்தடை நீங்கவும், மழலைச் செல்வம் பெறவும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து குழந்தை பிறந்ததும் துலாபாரம் செலுத்துகின்றனர்.
சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட தோஷங்கள் நீக்குவதாகவும், பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களின் முதல் அறுவடையை நேர்த்திக்கடனாக கொண்டு வந்து இக்கோயிலில் சேர்ப்பது விசேஷம். மலையேறும் வழியில் நிறைய குரங்குகள் காணப்படுகின்றன.
இக்கோயில் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 3 முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.