நம் ஆயுளை ஆதிக்கம் செய்யும் கிரகம் சனி பகவான். இவர் நம் ஜாதகத்தில் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால், எல்லா விதமான செளக்கியங்களையும் தந்து, நம்மை உயர்த்துவார்.
சனி பகவான் பகையாகவோ, நீசமாகவோ இருந்தால் நம் வினைகளுக்குத் தக்க பலன்களை கொடுப்பார்.
நம்மில் பெரும்பாலானோர் சனி என்ற பெயரைக் கேட்டதுமே வீண் பதற்றத்துக்கும் பயத்துக்கும் ஆளாகி விடுகிறோம். குறிப்பாக ஏழரைச் சனி, சனி தசாகாலம் என்றால் மனத்தளவில் முடங்கிப் போகிறோம். இது தவறு.
சனி பகவான் சிரமங்களைத் தருகிறார் என்றால், அவற்றின் மூலம் நம் வினைகள் சமன்படுத்தப்பட்டு, வாழ்க்கை நேர்த்தியாக்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இது மட்டுமன்றி சனிக்கிரக தோஷ பாதிப்புகள் நீங்கிடவும், சனி பகவானை மகிழ்விக்கவும் பல எளிய பரிகாரங்கள் குறித்து ஜோதிட நூல்கள் விளக்குகின்றன.
அவற்றைச் செய்து மனமுருகி சனி பகவானை வழிபட்டாலே போதும்; நடப்பதெல்லாம் நன்மை ஆகும். அற்புதமான அந்தப் பரிகாரங்களில் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்.
1. தசதீபம் :
சிவாலயங்களுக்குச் சென்று வழிபடும்போது, நவகிரக சந்நிதியில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் ஊற்றி 10 தீபங்கள் ஏற்றுவதால் தோஷங்கள் பொசுங்கும்; நினைத்தது நடக்கும்.
2. சனி ஓரை தரிசனம் :
ஏழரைச் சனி காலத்தில் இருப்பவர்கள் (மகரம், கும்பம், மீனம் ராசியினர்), சனி தசா காலத்தில் இருக்கும் அன்பர்கள், திருநள்ளாறு போன்ற பிரசித்திபெற்ற சனீஸ்வர தலங்களுக்குச் சென்று வரவேண்டும் என்பது பொதுவான பரிகாரம்.
அப்படி வெளியூர்களுக்குச் சென்று வர இயலாத அன்பர்கள் சனி ஓரை வழிபாடு செய்யலாம். சனிக் கிழமைகளில் சனி ஓரை நடைபெறும் நேரத்தில் நவகிரக சந்நிதி அருகில் அமர்ந்து சனி பகவானைத் தியானித்து வணங்கவேண்டும்.
இந்த நேரத்தில் சனீஸ்வரர் வரலாறு, சனி திருத்தலங்களின் ஸ்தல வரலாறு, சனீஸ்வர ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தொடர்ந்து சனி பகவானிடம் வேண்டுதல் வைத்துவிட்டு, சனி ஓரை முடிந்து குரு ஓரை ஆரம்பித்த பிறகு 7 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்படலாம்.
தினமும் சனி ஓரை நடைபெறும் நேரத்தில் இறைநாமம் சொல்வதும், இறைச் சிந்தனையில் லயிப்பதும் சிறப்பு. இந்த நேரத்தில் மூச்சுப் பயிற்சிகள் செய்யலாம். இந்த நேரத்தில் கால பைரவ வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும்.
இந்த நேரத்தில் தேவையற்ற பயணங்கள், நீர்நிலைகளில் நீராடுவது ஆகியவற்றைத் தவிர்ப்பது நலம்.
3. பைரவ வழிபாடு :
கால பைரவரையும் மகா காளியையும் தொடர்ந்து வழிபட்டு வருவதன் மூலம் சனி தோஷத்தால் ஏற்படும் மரண கண்டம், விபத்துக்கள், பெரும் பிரச்னைகள் மற்றும் வழக்குகளுக்குத் தீர்வு கிடைக்கும். ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து வழிபடுவதால் வீரியமான பலன்கள் கிடைக்கும்.
4. வன்னி சமித்து :
சனி சம்பந்தப்பட்ட வழிபாட்டு பூஜைகளின் போது, வன்னி மர சமித்தினை அருகில் வைத்துக்கொள்வது விசேஷம்.
வழிபாடுகள் முடிந்த பிறகு அந்த சமித்தினை எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் எதிர்பாராத நபர்களால் உண்டகும் ஆபத்துகள், நீண்டதூர பயணங்களின்போது ஏற்படும் விபத்துகள், திருஷ்டி தோஷங்கள் நீங்கும். வீண் செலவுகளும் நஷ்டங்களும் ஏற்படாது.
5. ரத்ன ஆபரணங்கள் :
நவரத்தினங்களில் இந்திரநீலம், நீலம் ஆகியவற்றை இடது கை நடுவிரலில் அணிவதால் சனி தோஷங்கள் விலகும். ஜாதகப்படி உரிய காலம் அறிந்து முறைப்படி செய்யவேண்டும்.
6. கச்சப ஸ்தல நிவாரணம் :
பெருமாளின் தசாவதாரங்களில் கூர்ம அவதாரத்தை வணங்கினால் சனிதோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மறைமலை நகருக்கு அருகிலுள்ள தலம் திருக்கச்சூர். இங்கே பெருமாள் கச்சப (கூர்ம) ரூபத்தில் சிவனாரை வழிபட்டதாக ஐதிகம்.
இறைவனின் திருப்பெயர் கச்சபேஸ்வரர். ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வழிபடுவதால், சனி தொடர்பான தோஷங்கள் நீங்கும். இந்த வகையில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்துக்கும் சென்று வழிபட்டு வரலாம்.
7. பூச நாளில் :
பிணிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சேவை செய்வதும், மருந்து தானம் அளிப்பதும் சனி தோஷத்துக் கான ப்ரீத்தி ஆகும்.
பூச நட்சத்திர நாளில் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்றோ நோயாளிகளுக்குச் சேவை செய்யலாம்.
இதன் மூலம் நீங்கள் மட்டுமல்ல, அடுத்தடுத்த தலைமுறையினரும் சனிக் கிரகத்தால் ஏற்படும் நோய் பாதிப்புகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம். அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கும் இயன்ற உதவிகளைச் செய்யவேண்டும்.