2024 ஆடி வெள்ளி

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி வெள்ளி பற்றிய பதிவுகள் :

ஆடி மாதத்தில் எத்தனையோ சிறப்புக்குரிய நாட்கள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு மட்டும் தனி சிறப்புகள் உள்ளது.

ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும், அன்று விரதத்தை எப்படி இருப்பது, ஆடி வெள்ளியன்று என்ன செய்ய வேண்டும், ஆடி வெள்ளியில் எப்படி விரதம் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் மிகவும் சிறப்பான நாட்கள் என்றாலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மிகவும் முக்கியமானதாகும். அதிலும் ஆடி வெள்ளி, பெண்களுக்கு மிக முக்கியமானதாகும். 

ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வரும். இந்த ஐந்து வெள்ளிக்கிழமையும் விரதம் இருப்பது சிறப்பானதாகும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரே ஒரு வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பானதாகும். 

ஆடி வெள்ளிக்கிழமைக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்பதையும், இந்த நாளில் எப்படி விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.

பல விசேஷங்களைக் கொண்ட ஆடி மாதத்தில் இந்த ஆண்டு முதலில் வருவதே ஆடி வெள்ளி தான். இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 19 ம் தேதி வருகிறது. 

ஜூலை 19, ஜூலை 26, ஆகஸ்ட் 02, ஆகஸ்ட் 09, ஆகஸ்ட் 16 ஆகிய 5 நாட்கள் ஆடி வெள்ளி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளி, சிவ பெருமானுக்குரிய பிரதோஷ நாளில் இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும். 

அம்பாளின் அருளையும், சிவனின் அருளையும் பெறுவதற்குரிய நாளாக இந்த நாள் அமைகிறது. அதனால் பிரதோஷ வழிபாட்டையும், அம்பாள் வழிபாட்டினையும் சேர்த்தே மேற்கொள்ளலாம்.

சூரிய பகவான், கடக மாதத்தில் பயணிக்கும் மாதமே ஆடி மாதமாகும். வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கும், சுக போகமான வாழ்க்கைக்கும், மகிழ்ச்சிக்கும் காரணமான கிரகமான சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாகும். 

அதுவே ஆடி மாதத்தில் வரும் போது சுக்கிரனும், சந்திரனும் இணையும் நாளாக வெள்ளிக்கிழமை அமையும். இப்படி சுக்கிர, சந்திர சேர்க்கை ஏற்படும் போதும் பெண் தெய்வத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். அதனால் தான் ஆடி வெள்ளி அம்பிகைக்கு மிகவும் உகந்தது என சொல்லப்படுகிறது.

திருமண தடை உள்ள பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருக்கலாம். அதே போல், வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது, நிம்மதியே இல்லை, செல்வம் தங்கவே மாட்டேன் என்கிறது, தீராத கடன் பிரச்சனையில் சிக்கி இருக்கிறோம், கையில் பணமே தங்க மாட்டேன் என்கிறது, நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படுகிறோம் என்கிறவர்கள் ஆடி வெள்ளியில் விரதம் இருந்து வழிபடலாம். கேட்ட வரங்களை தரக் கூடிய மகிமை மிக்கது ஆடி வெள்ளி விரதமாகும்.

ஆடி வெள்ளி விரதம் இருப்பது மிகவும் சுலபமானதாகும். அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் விளக்கேற்றுங்கள். கோவிலுக்கு சென்று விளக்கேற்றுவது சிறப்பு. 

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் உள்ள மகாலட்சுமியின் படத்திற்கு முன் அல்லது அம்பிகையின் படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைக்கலாம். அம்பாள் படம் எதுவும் இல்லை என்றால் திருவிளக்கையே அம்பிகையாக பாவித்து விளக்கேற்றி, பூக்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். 

முடிந்தவர்கள் காலை, மதியம் இரு வேளையும் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் காலை ஒரு வேளை மட்டும் சாப்பிடாமல் விரதம் இருந்து, அம்பிகையை மனதார வேண்டிக் கொள்ளலாம்.

அன்றைய தினம் அம்பிகைக்கு உரிய லலிதா சகஸ்ரநாமம், காமாட்சி அஷ்டகம், செளந்தர்யலஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை போன்ற அம்பாளுக்கு உரிய பாடல்களில் எதை வேண்டுமானாலும் படிக்கலாம். 

பூக்களால் அம்பாளுக்கு அர்ச்சனை செய்வதை விட ஸ்தோத்திரங்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top