பலராம ஜெயந்தி வரலாறு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பலராம ஜெயந்தி வரலாறு பற்றிய பதிவுகள் :

கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு சில தினங்களுக்கு முன்பு பலராம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 26ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுவதால் நாளைய தினம் பலராம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

பலராமர் ஆதி சேசனின் அம்சம். பாற்கடலில் இறைவன் மகாவிஷ்ணுவை சுமந்து கொண்டு இருக்கும் அந்த ஆதிசேஷனே கிருஷ்ண அவதாரத்தின் போது கண்ணனின் அண்ணனாக பலராமராக அவதரித்தார் என்கின்றன புராணங்கள். 

நாளை பலராம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பலராமரைப்பற்றியும் அவரது அவதாரம் நிகழ்ந்த விதம் பற்றியும் பார்க்கலாம். பலராம ஜெயந்தி நாடு முழுவதும் பல பகுதிகளில் பல விதமாக கொண்டாடப்படுகிறது.

தேவகி வயிற்றில் கருவாகி உருவாகி அவதரித்தவர் பகவான் கண்ணன். அதே தேவகியின் வயிற்றில் கருவாகி மாயையினால் ரோகிணியின் வயிற்றில் வளர்ந்து அவதரித்தவர் பலராமர். ஆதிசேஷனின் அம்சமான பலராமர் எப்போதும் கண்ணனுக்கு சேவை செய்வதற்காகவே கிருஷ்ணருக்கு அண்ணனாகப் பிறந்தார் என்கின்றன புராணங்கள்.

எட்டாவது குழந்தையால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கம்சன் தங்கை தேவகியையும் அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து வைத்தான். வரிசையாக பிறந்த ஆறு குழந்தைகளை கொன்றான். ஏழாவதாக கருவுற்றாள் தேவகி, உடனே மகாவிஷ்ணு தனது மாயை மூலம் கருவை தேவகி வயிற்றில் இருந்து வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணி வயிற்றுக்கு மாற்றினார். ரோகிணியை பாதுகாப்பாக ஆயர்பாடியில் நந்தகோபரின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

கூடவே மாயை நந்தகோபரின் மனைவி யசோதாவின் வயிற்றில் கருவாகி உருவானாள். தேவகிக்கு ஏழாவதாக உருவான கரு கலைந்து போனதாக கம்சனிடம் கூறப்பட்டது. மீண்டும் எட்டாவதாக கர்ப்பமானாள் தேவகி. சில மாதங்களில் ஆயர்பாடியில் மறைந்திருந்த ரோகிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பலசாலி என்று பெயர் சொல்லும் வகையில் பலராமன் என்று பெயர் சூட்டினர். கிருஷ்ண ஜெயந்திக்கு சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ந்த பலராம அவதாரம் கண்ணனுக்கு உதவி செய்யவே நிகழ்ந்தது.

தேவகிக்கு சிறையில் எட்டாவதாக குழந்தை பிறந்தது. நள்ளிரவில் பிறந்த குழந்தை மகாவிஷ்ணுவின் அம்சமாக இருந்தது. அந்த நேரத்தில் உலகெங்கும் ஒரே வெள்ளம் பரவியது. நட்சத்திரங்கள் பிரகாசமாக இருந்தன. பூமி எங்கும் சுபிட்சமாக இருந்தது. ஆறுகள் சலசலத்து ஓடின. பூமி எங்கும் அமைதியாக திகழ்ந்தது. அதர்மத்தை அழிக்கப் போகும் அவதாரம் நிகழ்ந்து விட்டது என்பதை இந்த பூமியே உணர்ந்து கொண்டது.

கம்சனின் கையில் கண்ணன் சிக்காமல் இருக்க மழை பெய்து தண்ணீர் பெருக்கெடுத்த அந்த நடுநிசியில் இரவோடு இரவாக நந்தகோபரின் வீட்டுக்கு குழந்தையை கொண்டு சென்றார் வசுதேவர். யசோதாவிற்கு பிறந்த பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு தனது குழந்தையை மாற்றி வைத்து விட்டு வந்தார். ஆயர்பாடி மாளிகையில் கண்ணன் தனது அண்ணன் பலராமனுடன் ஆடி பாடி வளர்ந்தார். பசுக்களையும் ஆடு மாடுகளையும் மேய்த்துக்கொண்டு கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

நரகாசுரனின் தம்பியான மயிந்தன் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க கண்ணனைத் தேடி கோவர்த்தனகிரி தேடி வந்தான்.
பலராமனைத்தான் தனது அண்ணன் என்று எண்ணி, பலராமனின் உடைகளை கிழித்தெறிந்து வம்புக்கிழுத்தான் மயிந்தன். மரங்களை வேரோடு பிடுங்கி அங்கிருந்த கோபியர்கள்மீது வீசி வம்புக்கிழுத்தான். இதைக்கண்ட பலராமன் கோபங்கொண்டு மயிந்தனோடு சண்டைக்கு சென்றார். பலராமன் தன் கைமுட்டியால் மயிந்தன் தலையில் ஓங்கி ஒரு கொட்டு கொட்டினார். வாயிலும், மூக்கிலும் ரத்தம் சிந்தி மயிந்தன் விழுந்து இறந்தான். முதல் அசுர வதம் நிகழ்ந்தது.

ஒருமுறை, நாரதர் மகா விஷ்ணுவிடம், ஐயனே! நீங்கள் துயில் கொள்ளும் சாதாரண பாம்பான ஆதிசேசனை கிருஷ்ண அவதாரத்தில் உங்கள் அண்ணனாக பிறக்க செய்து, அவர் கால்பிடித்து, கைப்பிடித்து பலவாறாக சேவை செய்த காரணமென்ன என கேட்டார். அதற்கு கிருஷ்ணர், நாரதா! ஒருமுறை என் காலில் விழுந்து என் பாதுகையை வாங்கிய பரதனுக்கு கிடைத்தது 14 வருட அரச யோகம். ஒரே முறை என் காலில் பட்டதன் விளைவு கல்லாய் இருந்த அகலிகையின் சாபம் நீங்கியது. ஆனால், சதா சர்வக்காலமும் ராம அவதாரத்தில் அண்ணாவென என் காலடியில் கிடந்த லட்சுமணனுக்கு நான் எதுவுமே செய்யவில்லையே. அதனால்தான், லட்சுமணனாய் அவதரித்த ஆதிசேசனை பலராமனாய் பிறக்க செய்து அவன் கால்பிடித்தேன் என பதில் கூறினார்.

இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது பலராம அவதாரம். பலசாலி பிள்ளைகள் வேண்டுமா? பலராமனை நினைத்து வணங்குங்கள். இறைவனின் பாதங்களில் சரணடைந்தால் எல்லா வளமும் பெறலாம்ன்றதை பலராம அவதாரம் நமக்கு உணர்த்துகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top