ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாக சதுர்த்தியாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள்.
அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் வணங்குவதன் மூலம் நாக தோஷங்கள் நீங்கும். திருமண தடை, புத்திரபாக்கிய தடைகள் நீங்கும்.
பொதுவாகவே நம்முடைய வீட்டில் திருமணத்தடை, குழந்தை பேறு கிடைப்பதில் தடை வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதில் தடை இருந்தால் நமக்கு ஏதாது தோஷம் இருக்கிறதா என்று ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோதிடம் பார்ப்போம். நாக தோஷம் இருந்தாலும் நம்முடைய வீட்டில் எந்த சுப காரியமும் நடைபெறாது.
நம்முடைய ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்.
சர்ப்ப தோஷம்
ஆன்மிக ரீதியாக ராகுவை பாம்பு உடலும் மனித தலையும் கொண்டவராகவும், கேதுவை பாம்பு தலையும், மனித உடலும் கொண்டவராகவும் சித்தரிக்கிறார்கள். நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்பதோஷமோ, நாக தோஷமோ இருந்தால் எந்த சுப காரியமும் நடைபெறாது.
தொடர்ந்து வரும் தோஷம்
ஜாதக ரீதியாக இருக்கும் தோஷத்தை விடவும் நாகத்தைத் தாக்குவதன் மூலம் ஏற்படும் தோஷம் அபாயகரமானது. ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும் நாகம் தொடர்ந்து வரும் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் விரதம்.
விரதம் இருந்து வழிபடுவோம்
ஆடி மாதம் கருட பஞ்சமிக்கு முன்பு அமையும் சதுர்த்தி திதி நாளே நாக சதுர்த்தி தினமாகும். பொதுவாக, ஆடி மாதம் சதுர்த்தி தினத்தில் தொடங்கும் நாக சதுர்த்தி விரத வழிபாடு அடுத்த வருட ஆனி மாத சதுர்த்தியோடு முடிவடையும். இடைப்பட்ட மாதங்களில் வரும் ஒவ்வொரு சதுர்த்தி தினமும் நாக சதுர்த்தி தினமாகும்.
குழந்தைகளுக்கு பிரச்சினை
நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும், அப்படியே பிறந்தாலும் அந்த குழந்தைகள் ஊனத்துடன் பிறக்கும் சில குழந்தைகள் நோயால் அவதிப்படும். பிள்ளைகள் அவதிப்படுவதைப் பார்த்து பெற்றோர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவார்கள். இந்த துன்பங்களிலிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெறலாம் என்பது ஐதீகம்.
தோஷங்கள் நீங்கும்
ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர நன்மைகள் நடைபெறும். தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
விநாயகர் தரிசனம்
கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம். கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் உள்ள கல் கருடனை தரிசனம் செய்து வர நன்மைகள் நடைபெறும்.
நாகராஜா காயத்ரி
நாக சதுர்த்தி தினமான இன்று நாகர்களின் புராணத்தை படித்து நாகராஜா காயத்ரி மந்திரம் கூறி வழிபட தோஷங்கள் நீங்கும்.
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்
என கூறி நாகர்களை வணங்க வேண்டும். சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறேன். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன். என்று வேண்டிக்கொண்டால் ராகு தோஷமும் நாக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளும் நீங்கும்.