திருவோணம் பண்டிகை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து திருவோணம் பண்டிகை பற்றிய பதிவுகள் :

அனைவருக்கும் இனிய திருவோணம் நல்வாழ்த்துக்கள். 

பகவான் மகாவிஷ்ணு , ஆவணி திருவோணத்தில் ஸ்ரீ வாமனராக அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கிய நாளே "ஓணம்" பண்டிகை ஆகும்.

வருடந்தோறும், ஆவணி ( சிம்ம ) மாதத்தில் முதல் வரும் திருவோண நட்சத்திரத்தன்று இந்தியாவில் கேரள மாநில மக்கள் திருவோணம் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சிம்மராசிக்கு உரியவர் சூரியன். அதனால், இம்மாதத்தை சிங்க மாதம் என்றும் அழைக்கின்றனர்.

ஓணம் பண்டிகை கேரள மக்களுக்கு மிகச் சிறந்த பண்டிகைகளுள் ஒன்றாகும். இப்பண்டிகை பத்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது.

ஓணம் பண்டிகை நாட்களில் கேரளத்தில் எல்லா வீட்டு வாசல்களிலும் அழகிய பூக் கோலங்களைக் காணலாம். வீடுகள் தோறும் வாசலில் கோலமிட்டு, வண்ண வண்ணப் பூக்களை வட்ட வட்டமாக அழகாக அடுக்கி வைத்து வீட்டு வாசல்களையும், வீதிகளையும் அலங்கரிப்பார்கள். இதில் முக்கியமாக, சின்னஞ்சிறிய, வெள்ளை வெளேர் என்றிருக்கும் தும்பைப்பூ இடம் பெற்றிருக்கும். பூக் கோலங்கள் பலவிதமான அமைப்புகளில் இருக்கும்.

இப்பத்து நாட்களும் பெண்கள் தங்கள் வீட்டு முற்றத்தைச் சுத்தப்படுத்தி, பகலில் சாணத்தால் மெழுகி, பல நிறங்களைக் கொண்ட பூக்களால் வட்டமான கோலங்களை அமைத்து அழகுபடுத்துவார்கள். இதை “அந்தப்பூவிடல் ” என்றும் அழைப்பார்கள்.

சதுர வடிவில், மண்ணால் பிரமிட் போன்ற மேடை அமைத்திருப்பார்கள். இதில் மகாபலியையும், மகாவிஷ்ணுவையும் ஆவாஹனம் செய்து ( = எழுந்தருளச் செய்து ) தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்து வணங்குவார்கள்.

இப்படி மகிழ்ச்சிக் களிப்போடும், ஆண் பெண் சிறுவர் சிறுமிகள் விளையாட்டுக்ளோடும் பல நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை விழாவில், ஓணத்திற்கு முந்திய நாள் ” தலை ஓணம் ” என்று கொண்டாடப்படுகிறது. 

ஓணம் பண்டிகையில் முக்கியமான தினம் கடைசி நாள்தான். அன்றைய தினம் தீபாவளியைப் போன்று இனிய சிற்றுண்டிகள், படையல், புத்தாடைகள், பூக் கோலங்கள் என்று விழா களைகட்டும். ஓணத்திருநாளில் பெரியோரின் ஆசிர்வாதமும், கடவுள் வழிபாடும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

பண்டிகை நாட்களில் கேரள மக்கள் பலவிதமான பாட்டுகளைப்பாடி ஆனந்திப்பர். எறிபடக்கம் என்று அழைக்கப்படும் பட்டாசுக்களால் வாண வேடிக்கைகளைச் செய்து குதூகலிப்பார்கள். முக்கியமாக, ஆரண்மூலை, கோட்டயம் ஆகிய இடங்களில் நடக்கும் படகுப்போட்டி மிகவும் பிரபலமானதாகும். இந்தப் படகோட்டத்தை “வள்ளம் களி” என்று அழைக்கிறார்கள். 

ஒவ்வொரு படகிலும் ஏராளமான பேர், தாளத்துக்கும், பாட்டுக்கும் ஏற்ப துடுப்புப்போட, ஆற்று நீரைக் கிழித்துக்கொண்டு படகுகள் வேகமாகப் போவதை இரு கரைகளிலும் கூடி நிற்கும் மக்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்து ரசிப்பார்கள்.

இப்படி பலவிதமான விளையாடுகளுடன் இனிதே நிறைவுறும் ஓணம் பண்டிகை. இந்த ஓணம் பண்டிகை தோன்றுவதற்கு மூலகாரணமானவர், மகாபலிச் சக்கரவர்த்தி.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், வாமன அவதாரத்தோடு தொடர்புடையது ஓணம் பண்டிகை. கேரள நாட்டில், புராண காலங்களில் ஆட்சி புரிந்தவன் மகாபலிச் சக்கரவர்த்தி. இவன் அசுர குலத்தைச் சேர்ந்த அரசன். பிரகலாதச் சக்கரவர்த்தியின் பரம்பரையில் வந்தவன். இவர் கேரள மக்களை மிகவும் சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தான். அவனது ஆட்சியில் மக்கள் செல்வச் செழிப்போடு சந்தோஷமாக வாழ்ந்தார்கள். 

மகாபலிச் சக்கரவர்த்தி பூவுலகை மட்டுமல்ல, தேவர் உலகையும் வெல்லும் சக்தி படைத்திருந்தார். ஆகவே, அவனை வளர விடாமல் அழித்துவிட, தேவர்களின் அரசனாகிய இந்திரன் திட்டமிட்டான். மகாவிஷ்ணுவிடம் சென்று உதவி வேண்டினான்.

இந்திரனைக் காப்பாற்றுவதற்காக, மகாவிஷ்ணு வாமனன் என்ற குள்ள அந்தணனாக அவதாரம் எடுத்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் சென்று, மூன்றடி நிலம் தானமாக அளிக்குமாறு வேண்டினார் . மறுக்காமல் அளித்தான் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, விஸ்வரூபம் எடுத்து முதல் இரண்டு அடிகளால் மண்ணையும் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். தன் தலைமீதே அவரது திருவடியைத் தாங்கினான் மகாபலி. மகாபலிச் சக்கரவர்த்தியைப் பாதாள லோகத்துக்கு அழுத்தி, நிரந்தரமாக பாதாள லோகத்துக்கு அரசனாக ஆட்சி புரியும்படி அருள் செய்தார் மகாவிஷ்ணு.

பாதாளலோகம் சேரும்முன்னர், மகாபலி மகாவிஷ்ணுவிடம் ஒரு வரம் கேட்டான். ” ஆண்டுக்கு ஒருமுறை நான் பூலோகம் வந்து, என் மக்களைக் காண அனுமதிக்க வேண்டும் ” என்று கேட்டுக்கொண்டான். மகாவிஷ்ணுவும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

ஆண்டுதோறும், பாதாள லோகத்திலிருந்து, தன் மக்களைப் பார்க்கப் பூமிக்கு வரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கவே கேரள மக்கள் ஓணம் பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top