எந்த திதியில் என்ன செயல்கள் செய்தால் வாழ்வில் முழுமையான பலன்களை பெறமுடியும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து எந்த திதியில் என்ன செயல்கள் செய்தால் வாழ்வில் முழுமையான பலன்களை பெறமுடியும் என்பதை பற்றிய பதிவுகள் :

திதி என்பது ஆகாயத்தில் சூரியனும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அல்லது பாகத்தைக் குறிக்கும்.சூரியனும், சந்திரனும் அமாவாசை தினத்தில் சேர்ந்து இருப்பார்கள்.

பௌர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக 180 டிகிரி தூரத்தில் இருப்பார்கள். சூரியனிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார் என்பதைக் குறிப்பதே திதி ஆகும். 

ஒரு திதிக்கு 12 பாகை. திதி என்ற சொல்லே பிறகு தேதி என்று பெயரானது. அமாவாசை அன்று சேர்ந்து இருக்கும் சூரியனும், சந்திரனும் பிரதமை அன்று பிரிந்து பின்னர் மீண்டும் சேருவதற்கு 30 நாட்கள் ஆகின்றன. இந்த 30 நாட்களும் 30 திதிகள் ஆகும். 

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை.தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்.

பிரதமை

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். 

துவிதியை

அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.

திருதியை

குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். 

சதுர்த்தி

முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.  

பஞ்சமி

எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. 

சஷ்டி

சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். 

சப்தமி

பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். 

அஷ்டமி

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் இதற்கு அதிதேவதை ஆவார்.

நவமி

சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.

தசமி

எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். 

ஏகாதசி

விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். 

துவாதசி

மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.

திரயோதசி

சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம்.எதிர்ப்புக்கள் விலகும்.தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். 

சதுர்த்தசி

ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

பௌர்ணமி

ஹோமம், சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

அமாவாசை

பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான மற்றும் தர்ம காரியங்களுக்கு உகந்த நாள் இதுவாகும். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top