ஆலயங்களில் அமைந்திருக்கும் பலிபீடம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பலி பீடம் பற்றிய பதிவுகள் :

அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலி பீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன. 

பலி பீடங்கள் என்பது ஆடு, கோழி போன்ற உயிர்கள் பலி கொடுக்கும் இடம் இல்லை. நம் மனதில் உள்ள மோசமான குணங்களையும், எண்ணங்களையும் பலியிடும் இடம். 

மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கும். இப்படிப்பட்ட கெட்ட குணத்தை கருவறையில் இருக்கும் கடவுளிடம் கூற இயலாது.

நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். 

எதுவும் இல்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்ல முடியும். 

எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது நாம் நல்ல மனிதனாக மாறி விடுவாம். 

இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம்.  

இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன. 

பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும். 

பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன. 

பலி பீடத்தை பொதுவாக பத்ரலிங்கம் என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவமலம், பலி பீடத்தில் தான் ஒதுங்கியிருக்கும். 

எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். முதலில் ‘‘நான்’’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும். 

முதலில் பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். பிறகு ஆலயத்தின் கருவறை வடக்கு, மேற்கு திசையை பார்த்தப்படி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறை கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும். 

மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது. 

அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். 

அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக எண்ண வேண்டும். 

பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும், ஆசீர்வதிக்கும்.

பலி பீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடமாக கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு என்று வேண்டுவதற்கு சமமாகும். 

பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது. 

சில கோவில்களில் பல பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதையே இது காட்டுகிறது. 

சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத்திருப்பார்கள்.

கோவிலில் கோபுர வாசலுக்கு கொடிமரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். 

எக்காரணத்தைக் கொண்டும் வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top