சரஸ்வதி தேவியை நவராத்திரி காலத்தின் போது, கடைசி மூன்று நாட்களில் மட்டுமே வழிபடுவோம். ஆனால் சரஸ்வதி தேவியின் பரிபூரண அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது.
வாழ்க்கை வசந்தமானதாக மாறுவதற்கு வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை மனதார வழிபடுவது சிறப்பு. வசந்த பஞ்சமி என்பது கல்வி மற்றும் கலைகளின் கடவுளான சரஸ்வதி தேவியின் திருஅவதாரமாகும்.
இதனால் இது சரஸ்வதி தேவிக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் மஞ்சள் நிற உடை அணிந்து, மஞ்சள் நிற மலர்களால் சரஸ்வதி தேவிக்கு அலங்காரம் செய்து, மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடிய இனிப்பு வகைகளை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது நல்லது.
தை மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியை வசந்த பஞ்சமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு பிப்ரவரி 02ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வசந்த பஞ்சமி அமைகிறது.
இந்த நாளில் சரஸ்வதியின் அருளால் ஞானம், அறிவு, கலைகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற, போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய, பேச்சு ஆற்றல் சிறப்பதற்கு ஆகியவற்றை பெறுவதற்கு சில குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வது மிக மிக நல்லது. வசந்த பஞ்சமி அன்று என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நாளில் சரஸ்வதி தேவிக்கு மோதகம், மலர்கள், சர்க்கரை பொங்கல், மஞ்சள் நிற மலர்கள் படைக்க வேண்டும். இந்த பொருட்களை நாமும் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் தானமாக அளிக்கலாம்.
அதே போல் யாராவது ஒரு ஏழைக் குழந்தைக்கு கல்விக்கு தேவையான உதவிகளை செய்யலாம். இதனால் நம்முடைய கல்வி சிறந்து, வாழ்க்கை சிறக்க சரஸ்வதி தேவி அருள் செய்வாள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் பேனா, பென்சில், நோட்டு ஆகியவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.
வசதி உள்ளவர்கள் ஏதாவது ஒரு குழந்தையின் கல்வி செலவை ஏற்கலாம். இதனால் சரஸ்வதி தேவியின் அருள் உங்கள் குடும்பத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்.
வசந்த பஞ்சமி, மாணவர்கள் வழிபட வேண்டிய நாளாகும். இந்த நாளில் தங்களின் கல்வி சிறக்க மாணவர்களும், குழந்தைகளும் சரஸ்வதி தேவியை பூஜை செய்து வழிபட வேண்டும். உயர் கல்வி பெற வேண்டும், அவற்றில் வெற்றி பெற வேண்டும் என்பவர்களும் இந்த நாளில் தங்களின் புத்தகம், நோட்டு ஆகியவற்றை சரஸ்வதி தேவிக்கு முன் வைத்து வழிபடலாம்.
இதனால் சரஸ்வதியின் அருளால் படிப்பில் இருக்கும் சிரமங்கள் நீங்கி, கற்கும் திறன் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவதால் வெற்றிகளை பெற முடியும்.
சரஸ்வதி மந்திரங்கள் :
* ஓம் சரஸ்வதியே நமஹ
* ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் சரஸ்வதியே நமஹ
* ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் மஹா சரஸ்வதி தேவியே நமஹ