தைத் திருநாளை அடுத்து வரக்கூடிய மாட்டு பொங்கல் தமிழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்தக் காலத்தில் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளின் எண்ணிக்கையை பொறுத்து செல்வத்தை மதிப்பிடுவார்கள்.
பால் தரும் பசுமாடாக, உழவுத் தொழிலில் தோழனாக, ஜல்லிக்கட்டு களத்தில் மானம் காக்கும் வீரனாக தமிழர்கள் மாட்டை காலங்காலமாக வளர்த்து வந்துள்ளனர். பலரது வீட்டில் மாட்டை செல்லப்பிள்ளை போல் வளர்ப்பது உண்டு.
பண்டைய காலத்து நாணயங்களில் கூட மாடு சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். மனிதர்களுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டு பொங்கலன்று உழவுக்கு பயன்படுத்தும் மாடுகளுக்கும், தாய்க்கு அடுத்தப்படியாக இரத்தத்தை பாலாக்கி உயிர் கொடுக்கும் பசுக்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். விவசாயிகளும், மாடு வளர்க்கும் நபர்களும் தொழுவத்தை சுத்தப்படுத்தி கோலமிட்டு அங்கேயே பொங்கலிட்டு மாட்டுக்கு படைப்பார்கள்.
மாட்டை அருகே உள்ள ஆற்றங்கரைக்கு, குளத்திற்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி முழுவதுமாக அலங்கரித்து, கொம்புகளில் வண்ணம் பூசி மாலை அணிவித்து தொழுவத்தில் படையலிட்டு நன்றி செலுத்துவது தமிழர் வழக்கம். கிராமங்களில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அதே போல கோ சாலைகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மாட்டு பொங்கல் கொண்டாட்டம் நமக்கு நினைவூட்டுகிறது. உழவுக்கு உதவும் கால்நடைகளை கெளரவிப்பது தமிழ் கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறது. நம்முடைய வாழ்க்கையை வளமாக்கும் கால்நடைகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கல்.
மாட்டு பொங்கல் நல்ல நேரம்
முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபடும் நாளாகவும் மாட்டு பொங்கல் திருநாள் விளங்குகிறது.
காலை 9.05 மணி - 10.20 மணிக்குள்
காலை 11 மணி - 11.50 மணிக்குள்
மதியம் 1.20 மணி - 2.30 மணிக்குள்
இந்த நேரத்தில் முன்னோர்களின் படத்தின் முன்பு இலை போட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகள், வேட்டி, புடவை வைத்து வழிபடவும். கோவிலுக்கு செல்லும் நபர்கள் நந்தி தேவரை தவறாமல் வழிபடுங்கள். மேலும் கோ சாலையில் பசுவுக்கும், கன்றுக்கும் உங்களுடைய கைகளால் உணவளியுங்கள்.