ஏகாதசி நாளில் விரதம் இருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலான பாடல்களைப் பாடி, துளசி தீர்த்தம் பருகி, மஹாவிஷ்ணுவை ஆராதிப்பது மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்.
அதிலும் தை மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. 25-01-2025 சனிக்கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை வழிபடுவது நல்லது. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.
ஏகாதசி வழிபடும் முறை
ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25
ஏகாதசிகள் வரும்.
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் நிறைவேற்றிவிட்டு, மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும்.
அன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவைப்படும்போது மட்டும் தண்ணீர் குடிக்கலாம்.
உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும்.
விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது. ஏகாதசி நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ உச்சரித்து பெருமாளை வழிபடலாம்.
மேலும் நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம்.
துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்தால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை. முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்கலாம்.
பலன்கள்
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.