ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஏற்றம் தரும் ஏகாதசி விரதம் பற்றிய பதிவுகள் :

அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம், சனிக்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் என்று பல வகையான விரதங்கள் இருந்தாலும், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. 

எத்தனை விரதங்கள் இருந்தாலும், அத்தனை விரதங்களும் ஏகாதசி விரதத்துக்கு நிகராகாது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த விரதத்தை இன்று பலரும் மேற்கொள்வதில்லை. ஏகாதசி விரதத்தின் மகிமையை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் அறிந்துகொள்வோம். 

திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

எனவே, ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்பது மிகவும் உத்தமமானது. அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மஹா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி பகவானை வழிபடவேண்டும். 

இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார். மறுமையில் வைகுண்ட வாசத்தையும் இறைவன் அருள்கிறார்.

ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால், மனித மனத்தின் மும்மலங்களான கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் நாம் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். 

மனதை ஒருநிலைப்படுத்தி முழுநாளும் உபவாசமிருப்பது மிகவும் விசேஷமானது. 'ஏகாந்தத்தில் பேச்சின்றி ஏகாதசியில் வசி; ஏகாம்பர அருளமுதம் புசி' என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது. எனவே இந்த நாளில், விருந்து, கேளிக்கை போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள் வரும். 

விரதத்தை எப்படி அனுசரிப்பது?

ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மஹாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். 

அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. அவ்வப்போது தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம்.

உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை அனுஷ்டிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை. 

மழை மாதங்கள், குளிர்மிக்க மாதங்களில் ஏழு முறை துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.

பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம். 

மறுநாள் துவாதசியன்று காலையில் பூஜைகளை முடித்து விட்டு, விருந்தினருக்கு அன்னம் ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும். அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். இரவு பழங்கள் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top