கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்க கூடிய தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு ஆண்டு முழுக்க பல்வேறு கொண்டாட்டங்கள் உள்ளன. இதில் மிகவும் சிறப்புக்குரிய நாள் தைப்பூச திருவிழா.
இதை திருவிழா எனக் குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி உள்ளிட்ட ஆறுபடை வீடுகளோடு உலகெங்கிலும் முருகன் கோயில்கள் விழாக்கோலமாக காட்சியளிக்கும்.
முருக வழிபாடு என்றாலே அது வாழ்க்கையில் வெற்றியை தரக்கூடிய வழிபாடாகும். நாம் எதை நினைக்கிறோமோ அதை நினைத்த வண்ணமே அளிக்க கூடியவர் முருகப்பெருமான், வினைப் பயனால் நாம் எடுத்த மனிதப் பிறவியில் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களையும் தகர்த்து வினையின் வலியை குறைத்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்வதே முருகப்பெருமானின் வழிபாடு. இந்த வருடம் தைப்பூச திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அமைந்திருக்கிறது.
மாலை அணிவித்து பழநிக்கு பாத யாத்திரை செல்லும் முருக பக்தர்கள் பொதுவாக 48 நாள் விரதம் கடைபிடிப்பார்கள். தைப்பூசத்திற்கு காவடி எடுத்து வழிபடும் வழக்கமும் முருக பக்தர்களுக்கு உண்டு. சிலர் 21 நாள் விரதமும் இருப்பர்.
இதையெல்லாம் சிரமமாக கருதுவோர் தைப்பூசத்தன்று ஒரு நாள் விரதம் கடைபிடித்து முருகனை வழிபடலாம். காலை முதல் மாலை பொழுது முடியும் வரை உபவாசம் இருக்கலாம். தேவைப்பட்டால் இளநீர், மோர் குடிக்கலாம்.
கல்யாண தடை நீங்க, நோய் நீங்க, தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம், மன அமைதி வேண்டுவோர், குடும்ப மேலாண்மைக்கு விரதம் கடைபிடித்து முருகப்பெருமானை வேண்டுங்கள்.
முருகனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. சிவப்பு நிற மலர்களால் முருகனை அர்ச்சிக்கவும். வீட்டின் அருகே உள்ள முருகன் கோயிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பால் வாங்கி கொடுங்கள்.
வழிபாட்டின் போது திருப்புகழ், கந்தன் அலங்காரம், வேல் மாறல் படிக்கவும். முருகப்பெருமானின் வழிபாட்டு புத்தகங்கள் இல்லையெனில் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கச் செய்யுங்கள்.