பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலய வழிபாடு பற்றிய பதிவுகள் :

முன்பொரு காலத்தில் காடாக இருந்த பகுதியில் மக்கள் ஆடுகளை மேய்த்து வந்துள்ளனர். அதனால் 'மந்தைகாடு' என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் காலப்போக்கில் மருவி 'மண்டைக்காடு' என்பதாக அறியப்படுகிறது.

15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையில் முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அமைந்துள்ள புற்று இக்கோயிலின் சிறப்பாகும். 

பெண்கள் 41 நாள் விரதமிருந்து இருமுடி கட்டி கால்நடையாக இந்த கோவிலுக்கு வருவதால் பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

மாசிமாத கொடைவிழா இந்த ஆலயத்துக்கு புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பங்குனி மாத பரணி நட்சத்திரத்தில் தான் பகவதியம்மன் அவதரித்ததாக கூறப்படுகிறது. 

எனவே அன்றையத்தினம் அம்மனுக்கு அளப்பரிய பூஜை ஒன்று நடத்தி குத்தியோட்டம், பூமாலை, துலாபாரம், பிடிப்பணம் போன்றவை நடத்தப்படுகிறது.

மாசித்திருவிழாவின் 10 ம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு 9 மண்பானை, 4 சட்டி,1 பனை ஓலைப்பெட்டி ஆகியவற்றில் 11 வகை பதார்த்தங்களையும், 2 குடம் தேனையும் கொண்டு படையலிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ ‘ஒடுக்கு பூஜை' நடைபெறும். ஊர்வலத்தின் போது அந்த பகுதியே நிசப்தமாக இருக்கும். பறையொலி மட்டுமே கேட்கும்.

ஒடுக்குபூஜையில் படைத்த அன்னத்தை வாய் பேசாத குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

இந்த கோவிலில் கை, கால், தலை போன்ற உடலுறுப்புகள் மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பதை உடல்நலக்குறைவு உள்ளவர்கள் வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியை தடவி கோயில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top