முருகனின் அருள் பெற வாரத்தின் ஏழு நாட்களும், அந்தந்த கிழமைகளுக்கு உரிய ஸ்லோகங்களை கிருபானந்த வாரியார் இயற்றியுள்ளார். நாள்தோறும் முருகனை வழிபட்டு இந்த மந்திரங்களை உச்சரித்து வந்தால் சகல வளங்களையும் பெற முடியும்.
முருகப் பெருமானுக்குரிய எத்தனையோ மந்திரங்கள் இருந்தாலும் ஒரு சில மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மந்திரங்களை முருகனுக்குரிய வழிபாட்டு நாட்களில் சொல்லுவது மிகவும் சிறப்பானதாகும்.
ஞாயிற்றுக்கிழமை :
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை :
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை :
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநி குகா போற்றி!
புதன்கிழமை :
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை:
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை :
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை :
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!