சனி பகவான் வழிபாடு

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சனி பகவான் வழிபாடு பற்றிய பதிவுகள் :

சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை, கருப்பு நிறம், தானியங்களில் கருப்பு எள் போன்றவை சனீஸ்வரனுக்கு உரியதாக கருதப்படுகிறது. 

மனிதர்களின் உடலில் நரம்பு, தொடை, பாதம், கணுக்கால் போன்ற உறுப்புக்களுக்கு உரியவராக சனி பகவானே கருதப்படுகிறார். இவரை தொடர்ந்து சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் ஜாதகத்தில் சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

சனி பகவான் கஷ்டத்தை மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகளையும் வழங்கக் கூடியவர். நாம் செய்துள்ள நன்மை - தீமைகளின் அடிப்படையிலேயே சனி பகவான் நமக்கு தரும் பலன்களும் அமையும். அதே போல் முன்னோர்களுக்கு நாம் செய்யும் பித்ரு கடன்களை காகத்தின் வடிவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதும் சனி பகவான் தான்.

நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர பகவான். ஒருவரின் ஆயுள் நீடிக்கவும், கர்ம வினைகள் நீங்கவும் காரணமாக இருப்பவர் சனீஸ்வர பகவான் தான். சனி பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமையாகும். 

இந்த நாளில் சனி பகவானை மனம் குளிர வழிபாடு செய்வதுடன், தான தர்மங்களையும் வழங்கலாம். சனியின் அருள் இருந்தால் பரம ஏழையாக இருப்பவர் கூட நாடாளும் அரசனாக முடியும். அதே சமயம் சனீஸ்வரனின் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கு அவருக்குரிய சனிக்கிழமையில் சில குறிப்பிட்ட விஷயங்களை செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சனிக்கிழமையில் சனிபகவானின் அருள் பெற வடிக்கும் சாதத்தில் சிறிதளவு எடுத்து, அதனுடன் தயிர் மற்றும் கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு உணவாக அளிப்பதால் சனி தோஷத்தை நீக்கி அதன் பாதிப்புகளை குறைத்து நன்மைகள் பெற செய்யும். 

சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று மூலவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம். துளசியில் மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். 

எனவே நாராயணருக்கு மஹாலட்சுமியை கொடுத்து வணங்கி வருவதால் நம்முடைய வாழ்வு வறுமையின்றி செழிக்கும். சனிக்கிழமை விரதத்தை எல்லா மாதங்களிலும் கடைபிடிக்கலாம்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்களுக்கு சனீஸ்வரனின் அருளுடன் நீண்ட ஆயுளும் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானமும், தொழிலில் விருத்தியும் உண்டாகும். 

ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் மேற்கொள்ள ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம். கிரக தோஷங்கள் உள்ளிட்ட தோஷங்கள் விலகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top