உலக புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்காலை

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து உலக புகழ்பெற்ற ஆற்றுக்கால் பொங்காலை பற்றிய பதிவுகள் :
 
கடவுளின் தேசம் என போற்றப்படும் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடக்கும் பொங்கல் திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த கோவிலில் மலையாள மாதமான மகரம் - கும்பம் மாதங்களில் 10 நாட்கள் திருவிழாவாக பொங்கல் விழா நடத்தப்படும்.

ஆற்றுக்கால் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில், பார்வதியின் மறு வடிவமான கண்ணகி பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார். தமிழ் மாதமான மாசி மாத பரணி நட்சத்திரத்தில் துவங்கும் இவ்விழாவின் 9வது நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறும். 

பத்தாம் நாளில் குருதிதர்ப்பணம் என இரவில் நடக்கும் படையல் நிகழ்ச்சியுடன் இந்த விழா நிறைவடையும். இந்த விழாவில் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு, பொங்கல் வைத்து வேண்டிக் கொள்வார்கள்.

சிலப்பதிகாரம் கதையின் படி, கண்ணகியின் கணவன் கோவலன், அரசியின் கால் சிலம்பினை திருடியதாக அவருக்கு தவறாக மறண தண்டனை விதிக்கப்படுகிறது. பாண்டிய மன்னன் சபையில் தன்னுடைய கணவன் நிரபராதி என நிரூபித்த கண்ணகி அங்கிருந்து புறப்பட்டு, கொடுங்கல்லூர் செல்லும் வழியில் ஆற்றுக்காலில் ஆற்றுக்கால் அம்மனாக தேவியின் வடிவில் கோவில் கொண்டதாக நம்பப்படுகிறது. 

இங்கு வேண்டிக் கொள்பவர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதால் பல பகுதிகளிலும் இருந்து இங்கு வந்து பெண்கள் பொங்கல் வைத்து, வேண்டுதல் நிறைவேற்றுகிறார்கள். இது பக்தர்களின் நம்பிக்கை, பக்தியை வெளிப்படுத்தும் தனித்துவமான திருவிழாவாக பார்க்கப்படுகிறது. 

பகவதி அம்மனை பற்றிய பக்திப் பாடலான தொட்டம்பாட்டுடன் ஆற்றுக்கால் பொங்கல் விழா துவங்கும். ஒன்பதாவது நாளான இன்று அதிகாலையில் இருந்தே பொங்கல் வைப்பதற்காக ஆயிரக்கணக்கில் பெண்கள் கூடுவார்கள். கோவில் எதிரில் உள்ள வீதிகளில் பெண்கள் வரிசையாக, ஒற்றுமையாக பொங்கல் வைத்து வழிபடுவார்கள். 

கோவிலின் தலைமை பூசாரி, பொங்கல் வைக்கும் பெண்களுக்கு புனித நீர், மலர்களால் ஆசிர்வதிப்பார். பிறகு அம்மன் மேளதாளங்கள் முழங்க, அலங்காரத்துடன் மணக்காடு சாஸ்தா கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுவார். அப்போது நெல், மலர்கள் நிரப்பிய பானைகளை கொண்டு பெண்கள் அம்மனை வரவேற்பார்கள். திருவிழாவின் முடிவை குறிக்கும் வகையில் மறுநாள் காலையில் அம்மன் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும்.

புகழ்பெற்ற ஆட்டுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 05ம் தேதி புதன்கிழமை துவங்கி, மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்வு மார்ச் 13ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top